I called you a friend
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;
யோவா 1:14.
=======================
எனக்கு அன்பானவர்களே!
நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு மக்களாக கலந்து எப்படி வாழ்கிறார்கள் என்று கண்டு , கேட்டு அறிவது வழக்கம்.
ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, ஒரு பொது குளியலறையில், தண்ணீரை சூடுபடுத்தும் ஒரு தொழிலாளி இருப்பதை கண்டார்.
முன்பு இப்போதிருக்கும் ஹீட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலிருந்த நிலைமை. அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசினார், அந்த மனிதனை ராஜாவுக்கு ரொம்ப பிடித்து போயிற்று.
அப்படியே தினமும் அவர் வந்து பேசி போவது வழக்கானது. ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் ‘நான் தான் இந்த நாட்டு மன்னர்’ என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.
அவன் தன்னிடமிருந்து பொருள், வசதிகளை கேட்க போகிறான் என்று மன்னர் நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. அப்போது மன்னர், ‘நான் மன்னர், எது வேண்டுமானாலும் நீ கேள், உனக்கு நான் தருகிறேன்’ என்று கூறினார்.
ஆனால் அந்த மனிதன், ‘மன்னரே, நான் மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் தினம் தினம் என்னை நீங்கள் வந்து பார்த்து , உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே,
இதை விட எனக்கு என்ன வேண்டும்?’ என்று கண்ணீர் மல்க கேட்டான். ராஜா இந்த வார்த்தையை கேட்ட போது அவனை மிகவும் கனப்படுத்தி தன் நண்பனாக ஏற்றுக் கொண்டார்.
வேதத்தில் பார்ப்போம் ,
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
யோவான் 15 :14.
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
நீதி 8:17.
இனி நான் உங்களை ஊழியக்காரரென்றுஇ சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
யோவான் 15 :15.
பிரியமானவர்களே,
நம் இயேசு கிறிஸ்துவும் பரலோகத்தின் மகிமையை விட்டுவிட்டு, தூதர்களின் பணிவிடைகளை தள்ளிவிட்டு, எப்பொழுதும் துதிபாடி கொண்டிருக்கும் துதிகளில், வாசமாயிருப்பதை விட்டுவிட்டு,
நாம் யாவரும் வாஞ்சிக்கும் பரலோக ராஜ்யத்தின் மேன்மையை விட்டுவிட்டு தாழ்மையாக இந்த உலகத்தில் நமக்காக வந்து உதித்தாரே அவர் எத்தனை நல்ல தெய்வம்!!
அவர் ‘தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி வந்தாரே!
அவர் யாரோ ஒரு தெய்வம் அல்ல, அவர் வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், அவற்றில் வாழும் அனைத்தையும் உருவாக்கினவர். அவர் தேவனுக்கு சமமாயிருந்தாலும், தம்மை வெறுமையாக்கி, தம்மை ஒரு அடிமை போல ரூபம் கொண்டு, மனுஷ உருவெடுத்து, நமக்கு இரட்சிப்பை கொடுக்கும்படி தம்மை தாழ்த்தி இவ்வுலகில் வந்த அன்பின் தேவன் இயேசு கிறிஸ்து அல்லவா?
யோவான் 15:15ல் “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று கூறுகிறார்.
தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்திய இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்த மாட்டாரா? நீங்கள் தேவனுடைய சிநேகிதராயிருக்கிறீர்கள். ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதனாய் இருந்தார். “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று;
அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் ”
யாக்கோபு 2:23.
தேவன் உங்களையும் தனது சிநேகிதனாக்க விரும்புகிறார். நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கும் அவரை நம்புவதற்கும் ஆர்வமாக இருந்தால், அவர் உங்களுடனே பேசுவார்.
நீங்கள் அறியாததும், உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். ஏனெனில் அவர் தாம் செய்ய போவதை தம் சிநேகிதருக்கு வெளிப்படுத்துவார் என்றே வேதம் கூறுகிறது.
“நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?”
ஆதியாகமம் 18:18 என்று கர்த்தர் கூறுவதை பார்க்கிறோம்.
நாமும் கர்த்தரின் சிநேகிதராக வாழ வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர் கற்பிக்கிற யாவையும் நாம் செய்வோமென்றால் இயேசுவின் சிநேகிதராக நாம் இருப்போம்.
ஆகவே நாம் அவரின் வார்த்தையின் படி செய்வோம். நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்து நம் யாரோடும் கூட இருந்து நம்மை வழிநடத்தி காப்பாராக.
ஆமென்