If you believe, you will receive whatever you ask for in prayer.

If you believe, you will receive whatever you ask for in prayer.

நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்
மத்தேயு 21:22.

========================
எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார் என்று நாம் கூறினாலும் சில ஜெபங்களுக்கு பதில் வராத போது உடனே நாம் சோர்ந்து போவதுண்டு.

மேலும் தொடர்ந்து ஜெபிப்பதற்கு இயலாமல் ஜெபவாழ்வில் பின்னடைவை சந்திக்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு அற்புதங்களை நாம் பெற வேண்டுமானாலும் அதற்கு நம்முடைய விசுவாசம் தான் மிகவும் அவசியமானதாய் கருதப்படுகிறது. நம்முடைய அருமை ரட்சகராகிய இயேசு கிறிஸ்து எங்கெல்லாம் அற்புதங்களைச் செய்தாரோ அங்கெல்லாம் அற்புதத்தை எதிர்பார்த்து வந்த மக்களிடம் விசுவாசத்தைத் தான் ஆண்டவர் எதிர்பார்த்தார்.

உங்கள் வாழ்விலும் உங்கள் விசுவாச ஜெபத்தின் மூலம் நீங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ‘உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது’
எபிரேயர் 11:1. இந்த வசனத்தின்படி ‘நாம் பெற்றுக் கொள்ளாத, காணாத ஆசீர்வாதங்களை நிச்சயம் அடைவோம்’ என்ற நம்பிக்கையோடு காத்திருப்பது தான் விசுவாசம்.

‘நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்’ ரோமர் 8:25. இந்த வசனத்தின்படி நாம் காணாததை நம்பினோம் என்றால் கர்த்தர் நிச்சயமாய் நம் வாழ்வில் அற்புதங்களை செய்வார் என்று பொறுமையோடு காத்திருப்போம்.

வேதத்தில் பார்ப்போம்,

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 5 :15.

கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது
அப்போ:10:31

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணும் போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
2 நாளா 32 :24.

பிரியமானவர்களே,

ஆகவே, இதுவரைக்கும் நீங்கள் பெற்றுக் கொள்ளாத அனுபவிக்காத ஆசீர்வாதங்களை கர்த்தர் நிச்சயம் எனக்குத் தருவார் என விசுவாசியுங்கள்.

நீங்கள் விரும்புகிற எந்த அற்புதமானாலும் அதை பெறுவதற்கு உங்கள் விசுவாசத்தை தேவன் பேரில் வையுங்கள்.உங்கள் விசுவாசம் உங்களுக்குள் கிரியை செய்ய இடம் கொடுங்கள்.

அதே வசனத்தில் பிரச்சினைகளைப் பார்த்து பேசுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் வாய் எப்போதும் விசுவாச வார்த்தைகளைப் பேசக்கூடிய வாயாக காத்துக் கொள்ளுங்கள்.

அவிசுவாசமான வார்த்தை ஆண்டவர் ஒருபோதும் உங்கள் நாவில் வருவதை விரும்பவில்லை.
உங்களுக்கு முன்பாக இருக்கிற பிரச்சினைகளானாலும் சரி நீங்கள் விரும்புகிற தேவைகளானாலும் சரி அவைகள் அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதற்கு அடிக்கடி விசுவாச வார்த்தைகளைப் பேசி அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆம், சந்தேகம் என்பது ஒரு ஆவியாகும். அது குழப்பத்தையும், கலக்கத்தையும், பயத்தையும் கொண்டு வந்து அற்புதங்களை நாம் காண முடியாதபடிக்கு நம்மை மட்டுப்படுத்தும்.

ஆகவே இருதயத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்படாமல் ‘நான் நம்புவது கர்த்தரால் வரும்’, ‘நான் நிச்சயமாய் அற்புதங்களைக் காண்பேன்’, ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார்’ என விசுவாசத்திற்கு ஏதுவான வார்த்தைகளைக் கூறி சந்தேகத்தின் ஆவியை துரத்துங்கள்.

உங்கள் விசுவாசத்தின்படி தேவன் உங்களுக்கு அற்புதங்களைக் காண கிருபை செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *