Lazy hands make for poverty, but diligent hands bring wealth
சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீதி 10 :4.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே!
புதிய உற்சாகத்தால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊரில் ஒரு அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம்.
அடிக்கடி கோவிலுக்கு செல்வார். கடவுளை வேண்டுவார். அதற்கு பிறகு காட்டுக்கு போவார் .
விறகு வெட்டுவார்.அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .
ஓரளவுக்கு வருமானம் வந்தது .
அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தார் .
ஒரு நாள் அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல் இழந்து விட்டது போல இருந்தது.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருந்தது..
அதை இவர் பார்த்தார் ..
அப்போது இவர் மனதில் ஒரு சந்தேகம்
“இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை … அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?” அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.
இப்படி யோசிச்சிட்டு இருக்கும் போதே அந்த பக்கமாக ஒரு புலி வந்தது..
அதை பார்த்த உடனே அவர் ஓடி போய் ஒரு மரத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டு , என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தார்.
அந்த புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்து வந்து,
அதை சாப்பிட்டது …
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டு விட்டு போய் விட்டது.
புலி போன பின்பு கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்து…
மீதமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியாக போனது.
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி இருந்து இவர் கவனித்து பார்த்து கொண்டே யோசிக்க ஆரம்பித்தார்.
” ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறார் . அப்படி இருக்கறப்போ… நான் தினமும் கோவிலுக்கு போய் இறைவனை வணங்குகிறேன். நமக்கு சாப்பாடு போடாம விட்ருவாரா என்ன ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?
எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் …? என்று யோசனை செய்தார்.
அதற்கு அப்புறம் அவர் காட்டுக்கே போறதில்லை .
கோடறியை தூக்கி எறிந்து விட்டார்.
பேசாமல் ஒரு மூலையிலே உட்கார்ந்தார்.
அப்பப்போ கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்.
” கடவுள் நம்மை காப்பாத்துவார் ….
அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் “-என்று நம்பினார்.
கண்ணை முடி கோயிலில் உள்ள ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்தார்.
ஒவ்வொரு நாளும் போய் கொண்டே இருந்தது .
சாப்பாட்டு வந்த பாடில்லை !
இவர் பசியால் வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் .
ஒரு நாள் இரவு நேரத்தில் கோயிலில் யாருமே இல்லை. இவர் மெதுவாக கண்ணை திறந்து இறைவனை பார்த்தார் …
” ஆண்டவா … என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா …..?” நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..!
அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் … என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே … இது நியாயமா ?”.என்று கேட்டார்.
இப்போது கடவுள் மெதுவாக சொன்னார் ….
” முட்டாளே ! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை.. !
புலியிடம் இருந்து கற்றுக் கொள்.
புலியைப் போல் உழைத்து நீ சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமாக கொடு என்று சொல்லி மறைந்தாராம்.
வேதம் சொல்கிறது; நீதி 21:25 சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும் என்று பார்க்றோம்.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
2 தெச3 :10.
வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்;
பிரசங்கி 5 :12.
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்தி சொல்லுகிறோம்.
2 தெச 3 : 12.
பிரியமானவர்களே,
ஆண்டவரின் ஆசீர்வாதம் நமக்கு பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. வேதத்தில், ஆசீர்வாதத்தைக் குறித்து எண்ணற்ற வசனங்கள் உள்ளது. தேவன் தமது பிள்ளைகள் எந்த வேலையை செய்தாலும், அதை முழு பெலத்தோடு செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.
“சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்” நீதிமொழிகள் 10:4 என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
இந்த வார்த்தையின் படியே நீங்களும் சுறுசுறுப்போடு உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்தால் கர்த்தர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உங்கள் செல்வத்தை பெருகச் செய்வார்.
நம் வேலையில் நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கும் போது நிச்சயமாகவே செழிப்பை காண்போம். நாம் எந்த வேலையை செய்தாலும் அதை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும்.
வேலை ஸ்தலத்தில் ஒருவரையும் வஞ்சியாதிருங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியை உத்தமமாய் சிறப்பாக செய்யுங்கள்.
நீங்கள் கையிட்டுச் செய்யும் எல்லாவற்றையும் தேவன் ஆசீர்வதிப்பேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்
தேவனுடைய ஆசீர்வாதம்” என்பதை அவரிடத்திலிருந்து கிடைக்கப் பெறுகிற விசேஷித்த இரக்கம், கிருபை, நன்மைகள் என்று குறிப்பிடுகிறது. தேவ இரக்கம் அவரிடத்திலிருந்து சிறந்ததை நமக்கு பெற்று தருவதுடன், நம்மை சந்தோஷமாய் வாழ வைக்கிறது.
இப்படிப்பட்ட ஆசீர்வாதமிக்க வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்