Let us receive the peace that Jesus Christ gives us

Let us receive the peace that Jesus Christ gives us

இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
லூக்கா 1:44

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

ஆசீர்வாதமான வாழ்த்துதலால் நம்மை ஒவ்வொரு நாளும் மகிழ்விக்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது வாழ்த்துகின்ற நற்பண்பு முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்!

வாழ்த்துதலைக் குறித்து ஒருவர் தன் சொந்த அனுபவத்தை இவ்வாறு கூறுகின்றார். நானும் எனது மகளும் ஒரு ரோஜாச் செடியினை எங்கள் வீட்டு மாடியில் வளர்ப்பதென முடிவு செய்து வாங்கி வந்தோம்!

அதனை வாங்கும் போது அதில் பூத்திருந்த ரோஜாவின் அழகுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது!
ஆனால் நாங்கள் இல்லம் திரும்பிய பின்னர் தான் அதில் உள்ள இலைகள் பூச்சி அரித்தும், செடி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதும் தெரிய வந்தது.

இதைக் கண்ட எனது மனைவியிடம் சரியான செடியினைப் பார்த்து வாங்கக் கூட உங்களுக்குத் தெரியவில்லை என்ற பூசனையால் எங்கள் நிலை செடியைவிடப் பரிதாபமானது!

எனினும் வேறு வழியின்றி அந்தச் செடியினை நாங்கள் தொட்டியில் வைத்து நன்கு பராமரிக்கத் துவங்கினோம்! நான் இந்தச் செடியினை நட்ட நாளிலிருந்து அதனை வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்!

என்னிடமிருந்து வாழ்த்தும் பண்பினைக் கற்றுக் கொண்ட எனது சகோதரனின் இரண்டு வயது மகனும் அந்தச் செடியைப் பார்த்து நான் சொல்லித் தந்த படி செடி வாழ்க எனவும், அதனுடன் மழலையில் பேசவும், வாழ்த்தவும் செய்வான்.

எங்களின் வாழ்த்துக்களின் தாக்கத்தால் அந்தச் செடி நன்றாக வளரத் துவங்கி அதிக அளவிலான ரோஜாக்களை எங்களுக்கு வழங்கத் துவங்கியது!

இதே போன்று மற்றுமொரு பலவீனமான ரோஜாச் செடியும் எங்களின் வாழ்த்துதலால் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களை எங்களுக்கு வழங்கியது!
கள்ளங்கபடமற்ற வாழ்த்துதலில் உள்ள சிறப்பே இந்த இரண்டு செடிகளையும் வளரச் செய்து மணம் பரப்ப வைத்தது என்பதே எனது அனுபவ உண்மையாகும்! என்று கூறினார்.

நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!
வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச் சிறியவர்கள் சந்திக்கும் போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர் தம் மரபு!

மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன!

இவ்வாறு வாழ்த்தும் போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும், பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக் கொள்வர்.

வேதத்தில் பார்ப்போம்,

அவளோ அவனைக் கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
லூக்கா 1:29

எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
லூக்கா 1:41

இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
லூக்கா 1:44

பிரியமானவர்களே,

நம்முடைய வீடுகளுக்கு அநேகர் வருகை தந்தாலும், ஒரு சிலர் நம் வீட்டிற்கு வரும் போது நம்முடைய இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது.
மிகவும் முக மலர்ச்சியோடும் அன்போடும் அவர்களை உபசரிக்கிறோம்.

ஆனால், வேறு சிலர் வந்துவிட்டால் உள்ளத்தில் கலக்கம் ஏற்படுகிறது.
ஐயோ, இவர்கள் வீட்டிற்கு வருகிறார்களே, என்ன குழப்பத்தை ஏற்படுத்துவார்களோ, என்ன சண்டையை மூட்டி விட்டுச் செல்வார்களோ, அமைதியை கெடுத்து விடுவார்களோ என்றெல்லாம் கலங்குகிறோம்.

ஆனால் வேதத்தில் இயேசுவின் தாயாகிய மரியாளைக் கண்டு எலிசபெத்தின் உள்ளம் களிகூர்ந்தது. அவள் மாத்திரமல்ல, அவளுடைய வயிற்றில் இருந்த பிள்ளையும் துள்ளிற்று என்று வேதம் சொல்லுகிறது.

வீட்டிற்கு வந்த மரியாள் எலிசபெத்தை வாழ்த்திய உடனே இச்சம்பவம் நடைபெற்றது.

ஆம், ஒரு சிறு பெண்ணின் வாழ்த்துதலால் எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது.

ஆம், தேவன் தாமே சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளை கூறும்படி நம்மை வழிநடத்துகிறார். “மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” நீதி 15:23) என்று வேதம் கூறுகிறது.

“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” நீதி 25:11) என்ற வார்த்தை எத்தனை உண்மையானது.

வாழ்த்து என்பது ஆசீர்வதித்தலின் மற்றோர் உருவம் தான்! கிறிஸ்தவ வாழ்வில் ஆசீர்வாதம் பெரும்பங்கு வகிப்பது போலவே வாழ்த்துதலும் கூட பெருமளவில் இருக்க வேண்டும்.

வேதாகமத்தின் முதன்முதலாக வாழ்த்தல் என்பது ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்தது . ஆதாம், ஏவாளையும் பலுகிப் பெருகச்‌ செய்யும் ஆசீர்வாதம் ஆகும்!

மனுஷரின் முதல் வாழ்த்து ரெபேக்காளுக்கு, கோடா கோடியாய் பெருகச்செய்யும் வாழ்த்து ஆகும்!
ஆதி 24:60

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். (மத்தேயு 10:12) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது! ஏன் தெரியுமா? பிறரை ஆசீர்வதித்து வாழ்த்த, வாழ்த்த அந்த ஆசீர்வாதமான வார்த்தைகள் நம் வாழ்விலும் செயல்படுகின்றன.

மரியாளை தேவதூதன் வாழ்த்தினான். மரியாள் சகரியாவின் வீட்டுக்குச் சென்று எலிசபெத்தை வாழ்த்தினார்! மனமுவந்த வாழ்த்து அது! உள்ளப்பூர்வமான வாழ்த்து அது! உள்ளொன்று வைத்து புறமொன்று வாழ்த்தினால், புறவிளைவுகள் கூட நிகழாது!

பவுல் அடிகளார் தன் நிருபங்கள் அனைத்திலும், குறிப்பாக ரோமர் 16ம் அதிகாரத்தில் மட்டும் எத்தனை பேரைத் தனித்தனியாக வாழ்த்துகிறார் என்று பாருங்கள்.

நாமும் கூட மற்றவர்களை வாழ்த்த வேண்டும். “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று ஆதியாக:12:3-ல் கூறப்பட்டுள்ளது போல் மரியாள், எலிசபெத்தை வாழ்த்தியதும், எலிசபெத்தும் பரிசுத்த ஆவியால் மரியாளை வாழ்த்தினார்கள் என்று வேதம் கூறுகிறது.

மரியாளைப் போல பரிசுத்த இருதயத்தோடு, முழு மனதோடு பிறரை வாழ்த்தும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மோடு ஒன்றிணைவார்.

நாம் ஜெபிக்கும் போதும் கூட கர்த்தரை வாழ்த்திப் பாருங்கள்.. அது பரிசுத்த ஆவிக்குள்ளான துதியாக அமையும்!

பரிசுத்த இருதயத்தோடு ஒருவருக்கொருவர் வாழ்த்தி பரிசுத்த ஆவியானவரால் ஒன்றிணைந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் சமாதானத்தை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *