None of you should do wrong to another
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது;
லேவி 25 :17.
××××××××××××××××××××××××××
எனக்கு அன்பானவர்களே!
மனநிறைவோடு நம்மை வாழ வைக்கும் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் செய்தித்தாளிலே ஒரு கார்டூன் வரையப்பட்டிருந்தது.
இரு வயல்கள்
-ஒரு முள் வேலியினால் பிரிக்கப்பட்டிருந்தன.
இரு வயல்களும் சம அளவுடையதாக இருந்தது. இரண்டிலும் பச்சை பசேர் என்று புற்கள் நிறைந்திருந்திருந்து. ஒரு கோவேறு கழுதை
அந்த முள்வேலியை தாண்டி கழுத்தை நீட்டி அடுத்த வயலில் உள்ள பசும்புல்லை தினமும் கள்ளத்தனமாக மேய்ந்து கொண்டிருந்தது.
இரண்டு வயல்களிலும் வேண்டிய மட்டும் பசும்புற்கள் இருந்தன.
ஆனால் அடுத்த வயலில் இருந்த புற்களை சாப்பிடுவது கடினமான காரியமாக இருந்த போதிலும்,அதுவே அவற்றிற்கு பிரியமாக இருந்தது.
அப்படி அவைகள் புல்லை பறித்து தின்னும் போது ஒரு நாள் முள் வேலியிலே அவற்றின் தலைகள் சிக்கின. அவை வலியால் துள்ளின.
வலி பொறுக்க முடியாமல் கத்தின.அவையால் தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை.
கார்டூன் வரைந்தவர் அதன் சூழ்நிலையை பார்த்து அழகான தலைப்பு ஒன்றை கொடுத்திருந்தார். அது “திருப்தியற்ற வாழ்க்கை” என்று.
இன்று ஆண்டவர் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை தந்திருந்த போதும் நம் மனம் பிறருக்குரிய ஆசீர்வாதங்களை குறித்து ஏக்கம் கொள்ளுகிறது.
அந்த கழுதையை போல
எப்படியாகிலும் அதை நான் உண்ண வேண்டும் என்று பிரயாசப்படுகிறோம்.
அநேகர் தோட்டத்தின் வேலியில் சிக்கி, அநேக விதமான வேதனைகளையும், துன்பங்களையும் , அவமானங்களையும் அடைந்து வெட்கத்தோடு வாழுகின்றனர். காரணம் ஆசையே.
பெரிய காரியங்களை அடைய வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.
-ஆனால் அடுத்தவருடைய புல் வெளியில் மேய்வது மிக மிகவும் தவறு .
வேதத்தில் பார்ப்போம்,
பிறனுடைய
வீட்டை இச்சியாதிருப்பாயாக.பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
யாத் 20 :17.
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8 :17.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர் 13 :10.
பிரியமானவர்களே,
இச்சை என்றால் என்ன? நமது தேவைக்கு அதிகமாக ஆசை கொள்வது இச்சை எனப்படும். இச்சை என்பதற்கு போதுமென்ற மனமின்மை அல்லது பேராசை என்றும் பொருள் கூறலாம்.
நமது ஆதிப் பெற்றோராம் ஆதாமும், ஏவாளும் செய்த பாவத்தை இதற்கு நல்லதொரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இறைவன் அவர்களுக்காக ஏதேன் என்னும் அழகான தோட்டத்தை உண்டாக்கி, அத்தோட்டத்தில் அவர்களுக்குத் தேவையான பழங்கள், ஆரோக்கியமான குடிநீர், சுகாதாரமான காற்று, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஆகிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
எனினும் அவர்கள், அதில் மனநிறைவு கொள்ளவில்லை. மாறாக, நீங்கள் உட்கொள்ள வேண்டாம் என்று இறைவனால் விலக்கப்பட்டிருந்த மரத்தின் கனியைப் புசித்தனர்.
இதனையே நாம் போதுமென்ற மனமின்மை அல்லது இச்சை என்கிறோம்.
அதன் விளைவாக நம் ஆதிப் பெற்றோர் ஆசீர்வாதமான ஏதேன் தோட்ட வாழ்க்கையை இழந்து விட்டனர்.”பேராசை பெருநஷ்டம்” என்பர். ஆம், பேராசையாகிய இச்சை நமது வாழ்வில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்
ஆம்! இச்சை என்பது நமது வாழ்வில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி விடும். எனவே, போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் 1 தீமோத்தேயு 6 : 6 என்று பார்க்கிறோம்.
உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்
1 தீமோத்தேயு 6:8 என்று திருமறை வசனங்களுக்கேற்ப ஆண்டவர் நமக்குத் தருகின்ற நன்மைகளும், ஆசீர்வாதங்களும் போதும் என்று, திருப்தியடைகின்ற மனதை வளர்த்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
பிறருடைய பணம், பொருள், நிலம், கணவன், மனைவி, மக்கள், வேலை ஆகிய எதுவொன்றின் மேலும் நாம் இச்சை கொள்ளாமல், கடவுள் நமக்குத் தந்துள்ள ஆசீர்வாதங்களிலே நாம் மனநிறைவு கொள்வோம்.
மனரம்மியமாய் வாழுவோம்.
இப்படிப்பட்ட மனநிறைவுள்ள வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்