Only those who are obedient to the Lord can defeat Satan
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;
1 பேதுரு 2 :18.
==========================எனக்கு அன்பானவர்களே!
யாவருக்கும் மேலானவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த செல்வந்தனாயிருந்தான். ஆனால் அவன் சரியான கஞ்சனாயிருந்தான்.
எனவே, அவனுக்கு முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான்.
வணிகன்
ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக் கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டு இருப்பார்கள்.
அதேப் போல் நீயும் மரங்களை வெட்டிக் கொண்டு வா!” என்றான்.
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர்.
சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீணாக கீழே கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!’ என்று நினைத்தான்.
“என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்’ என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப் பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், “ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!’ என்று நினைத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த மரம், “சடசட’வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவு தான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது.
இதைக் கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“என் திட்டம் நல்ல திட்டம் தானே. வண்டிக்குத் தான் வலிமை இல்லாமல் போய்விட்டது’ என்ற முடிவுடன் வீடு திரும்பினான்.
நடந்ததை அறிந்த வணிகன், ஐயோ இப்படி ஒரு முட்டாளை வேலைக்கு வைத்தது என் தப்பு தான் என்று தலையில் அடித்துக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டினான்.
அவனோ நான் புத்தியாய் தான் செய்தேன். உங்கள் வண்டியும் ,மாடும் தான் சரியில்லை என்று அவன் சொல்லிக் கொண்டே நடந்தான்.
வேதத்தில் பார்ப்போம்,
வேலைக்காரரே, சரீரத்தின் படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்.
கொலோ 3 :22.
தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாத படிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக் கொள்ளக்கடவர்கள்.
1 தீமோ 6:1.
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழி: 22:29
பிரியமானவர்களே,
பணியாளர்கள் தங்கள் முதலாளி என்ன காரியம் செய்ய சொன்னாலும் அதை உய்த்து ஆராய்ந்து அது செய்யத் தகுந்த காரியமா?? அல்லது செய்யத் தகாத காரியமா?? என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பின்னர் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் உங்கள் மீதுள்ள நல்ல முதலாளியின் மதிப்பை நிச்சயம் அதிகரிக்கும். அதுவே இல்லையென்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை பறி போகும் நிலை ஏற்படும்.
எனவே முதலாளிகள் நல்லவர்களாகவும், பணியாளர்கள் வல்லவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பல்வேறு நிலைகளை அடைந்து உச்சத்தில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இது உலக பிரகாரமான வேலைக்கு மாத்திரமல்ல. ஊழியத்திற்கும் பொருந்தும். எனவே நமது பணியாளர்களை வல்லவர்களாக்குவது நமது கரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து,
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:5,6 என்று எஜமானுக்கு கீழ் வேலை செய்கிறவர்களை குறித்து வேதம் கூறுகிறது.
நாம் இவ்வுலக எஜமானனிடம் மட்டுமல்ல, நம் பரம எஜமானரிடமும் நாம் கீழ்படிந்து இருக்க வேண்டும். “பலியைப் பார்க்கிலும் கீழ்படிதலே உத்தமம்” என்று வேதம் கூறுகிறது.
ஆம், நமது காணிக்கையை விடவும், நமது ஜெபத்தை விடவும் கர்த்தர் எதிர்பார்ப்பது நமது கீழ்படிதலை தான். ஆரம்பத்தில் மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்தது இந்த கீழ்படிதல் இல்லாமையே ஆகும். ஆதாமும், ஏவாளும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் ஏதேனில் இருக்க முடியவில்லை.
உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கிறது. ஆகையால் உங்களைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன்;
ரோமர் 16:19 என்று
அப்போஸ்தலராகிய பவுல் ரோம திருச்சபைக்கு எழுதும் போது உங்கள் கீழ்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கிறது என்று எழுதுகிறார். ஆனால் அடுத்த வசனத்தில் சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
ரோமர் 16:20 என்று எழுதுகிறார்.
ஆம், கர்த்தருக்கு கீழ்படிதல் உள்ளவர்களாலேயே சாத்தானை ஜெயிக்க முடியும்.
ஆம், நாமும் நமக்கு மேலானோருக்கு மட்டுமல்ல, நம் யாவருக்கும் மேலானவராகிய கர்த்தருக்கும் கீழ்படிந்திருப்போம். அவரின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்