Our Lord expects us to Bear Fruit
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
யோவான் 15:8.
=============எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் மீட்பருமாகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வாலிபன் தன் வாழ்வில் விரக்தியடைந்தவனாக தன் வேலையையும், தன் உறவுகளையும், தன் ஆவிக்குரிய வாழ்க்கையும் விட்டுவிட்டு, தன் வாழ்வையே முடித்துக் கொள்ள எண்ணி காட்டுப் பக்கம் சென்றான்.
தன் வாழ்வை முடிப்பதற்கு முன் ஆண்டவரிடம் ஒரு வார்த்தை பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘ஆண்டவரே, நான் ஏன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணத்தை உம்மால் கூற முடியுமா’ என்று ஆண்டவரிடம் கேட்டான்.
அப்போது ஆண்டவர், ‘உன்னைச் சுற்றி இருக்கிற இந்தக் காட்டில் அந்த மூங்கில் மரத்தையும் அந்த பரணிச் செடியையும் (fern) பார்’. என்றார். ‘ஆம் ஆண்டவரே, பார்ககிறேன்’ என்று அந்த வாலிபன் கூறினான். நான் இந்தக் காட்டில் விதைளை இட்டபோது இவைகளை நன்கு கவனித்துக் கொண்டேன்.
இவற்றிற்கு நல்ல தண்ணீர் கொடுத்தேன், நல்ல சூரிய வெளிச்சத்தைக் கொடுத்தேன். இரண்டையும் ஒரே மாதிரியாக வளர்த்தேன். ஆனால் பரணிச்செடி சீக்கிரமாய் பூமியிலிருந்து முளைத்து எழும்பிற்று. இந்த நிலம் முழுவதையும் தன் பச்சை இலைகளினால் அழகாக நிரப்பிற்று.
இந்த மூங்கில் விதையோ ஒன்றும் வெளியே கொண்டு வரவில்லை. ஆனால் நான் அந்த மூங்கிலை போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.
இரண்டாவது வருடமும் பரணிச்செடி அழகாக வளர்ந்தோங்கியது, ஆனால் மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வரவில்லை.
அதே மாதிரி, மூன்றாம், நான்காம் வருடத்திலும் அந்த மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வெளிவரவில்லை. ஆனால் அதை நான் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.
ஐந்தாவது வருடத்தில் ஒரு சிறு முளை அந்த விதையிலிருந்து முளைத்தெழும்பியது. பரணிச் செடியோடு வைத்துப் பார்க்கும் போது இந்த மூங்கில் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஆறே மாதத்தில் இந்த மூங்கில் மரம் 100 அடி உயரத்திற்கு உயரமாக வளர்ந்து பெரிதாக மாறியது.
இந்த ஐந்து வருடங்களில், இந்த மூங்கில் மரம் கீழே வேர் விட்டு, மேலே உயர்ந்து வளர்வதற்கு பலத்ததை கொடுத்தது.
அதுப் போல என் மகனே, நீ கஷ்டப்பட்ட வருடங்களில் உண்மையாக நீ வேர் விட்டுக் கொண்டிருந்தாய். இந்த மூங்கில் மரத்தை நான் எப்படி கைவிட்டு விடவில்லையோ அதுப் போல உன்னையும் நான் விட்டுவிடவில்லை. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதிருப்தி அடையாதே.
பரணிச்செடியை நான் வைத்ததற்கு ஒரு நோக்கம் உண்டெனறால், மூங்கிலுக்கு வேறு ஒரு நோக்கம் உண்டு. ஆனால் இரண்டுமே இந்த காட்டை அழகுப்படுத்துகிறது. அதுப் போல உன்னுடைய நேரமும் வரும், உன் நிலைமையும் மேலே உயரும் அது வரை பொறுத்திரு, என்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
யோவான் 15 :5.
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
மத்தேயு 3 :8.
கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
யோவான் 15 :2.
பிரியமானவர்களே,
நம் ஆண்டவர் நம்மை கனி கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். நாமோ கனிக் கொடாதிருக்கும் போது அவர் நம்மை விட்டு விடுவதில்லை. இந்த வருடமும் இருக்கட்டும் என்று சுற்றிலும் கொத்தி, எருப் போட்டு நம்மை வளர்க்கிறார்.
நம்மை சுத்தபடுத்தி, எருப் போடுவதை அவர் ஒருபோதும் நிறுத்துவதே இல்லை. அடுத்த வருடமாவது கனி கொடுக்க மாட்டோமாவென்று அவர் தொடர்ந்து காத்திருக்கிறார்.
கர்த்தரே நம்மை தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது நாம் ஏன் விரக்தியடைய வேண்டும்? நல்ல நாட்கள் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. கெட்ட நாட்கள் நமக்கு படிப்பினையைக் கொடுக்கின்றன. இரண்டுமே வாழ்வில் முக்கியம்.
எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களோ அந்த அளவு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக மாறுகிறீர்கள். எந்த அளவு நீங்கள் துன்பங்களை சகிக்கிறீர்களோ, அந்த அளவு சகிப்புத் தன்மையும், பொறுமையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
கீழே வேர் பற்றி மேலே கனிக் கொடுப்பீர்கள். ஆகையால் உங்கள் இருதயத்தை தளர விடாதீர்கள். கர்த்தர் நம்மை விட்டுவிடவில்லை. ஆகையால் தைரியம் கொண்டு கர்த்தருக்காக கனி கொடுத்து வாழுங்கள்.
இத்தகைய கனிநிறைந்த வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்