Taste and see that the LORD is good
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம்:34 :8.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!
நம் அன்பான இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மனிதர்களாகிய நாம் வெளிச்சத்தைப் பார்த்து அல்லது வெளிச்சத்தில் நடக்க விரும்புவோம். ஆனால் பக்தன் தாவீதோ தனக்கு தேவனையே வெளிச்சமாகக் கொண்டார்.
கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருக்கும் போது, நான் யாருக்கும்,எதற்கும் பயப்படேன் என்றார்.
இன்று நம்மில் அநேகர் தாவீதைப் போல தைரியமாக சொல்ல முடியாமல் மனிதர்களைக் கண்டு பயந்து பயந்து வாழ்கிறோம்.
ஏனென்றால் நாம் நம்முடைய பார்வையை தேவன் மேல் வைக்காமல் யார் யார் மீதெல்லாமோ வைக்கிறோம். ஆகையினால் தான் பயப்படுகிறோம்.
சங்: 27:1-ல் தாவீது கூறுகிறார் கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? என்று
என் ஜீவன் அவருக்குள் மறைந்திருக்கிறது. ஆகையினால் அவரை அறியாமல் என்னை எதுவும் தொட முடியாது என்பதிலே தெளிவாயிருந்தார்.
ஆகையினால் தான் யுத்தத்திலே தன்னைவிட பெலசாலியான கோலியாத்தைக் கண்டோ? அல்லது அவனுடைய சேனைகளைக் கண்டோ? அவன் பயப்படாமல், சாமுவேல்: 17:45-ல் பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
சாமுவேல் 17: 37 ல் என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்ல முடிந்தது.
ஆனால் நாமோ ஒரு சிறு வியாதியோ, கஷ்டமோ வந்து விட்டால்,அதை கண்டு மிகவும் பயந்து சோர்ந்து விடுகிறோம். போராடாமலே தோல்வியை ஒத்துக் கொள்ளுகிறோம்.
சங்கீதக்காரன் தாவீது சொல்லுகிறார். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர் என்று.
கர்த்தர் தனக்கு நல்ல மேய்ப்பராக தன்னோடு இருக்கும் போது எந்த எதிரியோ, பிசாசோ, வியாதியோ, பிரச்சனைகளோ, எது வந்தாலும் அது என்னை ஒருபோதும் அணுக விடாமல் என்னை பாதுகாத்துக் கொள்ளுவார் என்று விசுவாசத்தில் உறுதியாயிருந்தார்.
ஆகையினால் பிசாசு தாவீதுக்கு விரோதமாக ராஜாவை, நண்பர்களை, தன் சொந்த பிள்ளைகளை எழுப்பிவிட்டாலும், அவன் கர்த்தரையே சார்ந்து வாழ்க்கையிலே வெற்றிப் பெற்றான்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 34 :8.
வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறது போல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கும்.
யோபு 34 :3.
அழைக்கப்ட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
லூக்கா 14 :24.
பிரியமானவர்களே.
மேல் படிக்கு போக வேண்டுமானால் முதலில் நாம் கீழ்ப்படிதல் அவசியம்.
இன்று அநேகருக்கு ஆண்டவரோடு வாழ , அவரோடு பேச ஆசை உண்டு . ஆனால் அவர் வார்த்தைக்கு கீழ்படியவோ அல்லது அவரை உண்மையாய் நேசிக்கவோ மனமும் இல்லை , நேரமும் இல்லை.
ஆனால் தாவீதைப் பாருங்கள். தன் துன்பகாலத்திலும், வேதனைகளிலும் கர்த்தரையே நோக்கிப் பார்த்தார். வேதம் சொல்லுகிறது
அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
சங்கீதம் 34:5
அதையே பரிசுத்த பவுல் நமக்காக இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 1:12 – ல் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் என்றார்.
தாவீதைப் பாருங்கள் எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். கர்த்தர் நல்லவர் என்பதை எல்லா நாளிலும் ருசித்துக் கொண்டிருந்தான்.
எனவே தான் கர்த்தர் சொன்னார்,மனுஷன் பார்க்கிற படி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
ஆகவே தான் கர்த்தர் தாவீதை என் இருதயத்துக்குப் பிரியமானவாகக் கண்டேன் என்று சொல்லி அவனை மிகவும் நேசித்தார்.
தாவீது செய்த தெல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
அவன் கடந்து போன எவ்விடங்களிலேயும் ஜெயத்தொடு திரும்பும்படி கர்த்தர் உதவி செய்தார்.
எனவே எனக்கு அன்பான சகோதரனே, சகோதரியே,
இந்த வசனத்தை கேட்கிற, வாசிக்கிற நாமும் கர்த்தரை எல்லா காலத்திலும் துதித்து அவரை ருசித்து, நம்மை இரட்சித்தவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்து விசுவாசித்து வாழுவோம்.
இப்படிப்பட்ட விசுவாசமுள்ள ஜெய வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்