The desire for money is the root of all evil
ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்;
பிரசங்கி: 6 :9.
×××××××××××××××××××××××××எனக்கு அன்பானவர்களே!
மனநிறைவுள்ள வாழ்வை அருளிச் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மன்னர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார். அப்போழுது ஒரு பிச்சைக்காரன் எதிர்ல் வந்து “பிச்சை கொடுங்கள்” என்று கேட்டார்.
“என்னுடைய அமைதியை கெடுக்காதே போ” என்றார் மன்னர்…
அவன் சிரித்தான்..!
அரசே உங்கள் “அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால் அது அமைதியே இல்லை!” – என்றான்.
எதிர்ல் நிற்பது வெறும் பிச்சைக்காரன் இல்லை, ஒரு யோகி-என்று புரிந்து கொண்டார் அரசர்.
“துறவியே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் நான் கொடுக்கிறேன்!” என்றார்.
மறுபடியும் அந்த துறவி சிரிக்கிறார்.
“அரசே உங்களால் முடியாததெல்லாம் கொடுக்க முடியும்-என்று சத்தியம் செய்யாதீங்கள்!”
என்றார்.
இவர் என்ன இப்படி சொல்றார்-என்று ஊர்வலத்தை பாதியில் நிறுத்தி விட்டு வாங்க அரண்மனைக்கு போகலாம் என்று துறவியை அழைத்துக் கொண்டு வந்தார்.
“என்னால் கொடுக்க முடியாது என்றீர்களே, இப்பொழுது கேளுங்கள், தங்களுக்கு என்ன வேண்டும்? அதை தருகிறேன் என்றார் மன்னர்.“துறவி தன்னிடம் உள்ள பிச்சைப் பாத்திரத்தை நீட்டினார் , எனக்கு இது நிறைய பொற்காசுகள் வேண்டும்”-என்றார்.
இவ்வளவு தானா என்று கூறிவிட்டு ஒரு பெரிய தாம்பாளம் நிறைய பொற்காசுகள் வரச்செய்து பிச்சை பாத்திரத்தில் போடச் செய்தார்.
பொற்காசுகள் போட போட உள்வாங்கிக் கொண்டே இருந்தது. அரசாங்க கஜானாவே காலியானது. மன்னர் பொத்தென்று துறவியின் காலில் விழுந்தார், என்னால் இதை நிரப்ப இயலவில்லை என்றார்.
அப்போது அந்த துறவி சொன்னாராம், மன்னா !, இந்த பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல வேறு எவராலும் நிரப்ப முடியாது ஏனென்றால் இது பேராசையால் இறந்து போனவனின் மண்டை ஓடு என்றார்.
செத்த பின்னும் நிறைவில்லை-
என்றால் அது எப்பேற்பட்ட பேராசையா இருக்கும்- என்று யோசித்து பாத்துக்கோங்க என்றாராம்.அதற்கு பிறகு தான் மன்னருக்கு புரிந்தது.
அதன் பின்னர் மன்னர் தனது பண ஆசைகளை மாற்றி அநேகருக்கு உதவிகள் செய்து சீரும் சிறப்பும் உடையவராய் வாழ்ந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரேயர் 13 :5.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ6 :10.
கிறிஸ்துவினுடைய வர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலா 5 :12.
பிரியமானவர்களே,
இன்றைக்கு அநேகர் தன்னை உருவாக்கின ஆண்டவரை நம்பாமல் தங்கள் விசுவாசத்தை பணத்தின் மீதும் பொருள்களின் மீதும் வைப்பதால் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போகின்றனர்.
2 தீமோ 3-2 ல் கடைசிகாலத்தில் அநேகர் பணப் பிரியர்களாக மாறி விடுவார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.
“பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்” என்று சொல்லும் வேதம், “பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர்” என்றும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. பணமில்லாவிட்டால் நாம் ஜீவிப்பது கடினமே. ஆனால் பணமே அல்லது வசதிகளே என் வாழ்வு என்று வாழ்வோமானால் நாம் பணத்துக்கும், பொருட்களுக்கும் அடிமைகளாக மாறி விடுவோம்.
ஒரு மனிதனுக்கு பணம் சேர சேர அதில் அவன் திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றே அவன் மனம் வாஞ்சிக்கிறது. பணம் சேர சேர, முதலில் ஒழுங்காக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாவத்தில் விழ ஆரம்பிக்கிறார்கள்.
முடிவில், பாவம் அவனை மேற்கொண்டு, அதற்கு அடிமையாக மாறி விடுகிறார்கள். ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்’ என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நமக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ கற்றுக் கொள்வோம். மிஞ்சி ஆசைப்படாமல், நம் வரவுக்கு தக்கதாக செலவு செய்வோமானால், கடனே இல்லாமல் வாழ முடியும். நம் தேவைகள் அதிகமாகும் போது, அதற்காக எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் குறுக்கு வழிகளை கடைபிடித்து, அதனால் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.
‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ என்றும் வேதம் கூறுகிறது. எதிலும் மனதிருப்தியும், மன நிறைவும் காணக் கற்றுக் கொள்வோம்.
நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு, திருப்தி அடைவதில்லை. மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம்.
ஆனால் அப்போஸ்தலர் பவுல் பிலிப்பியர்:4:11,12-ல் இப்படியாக சொல்கிறார். “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” என்று
நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும்போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாதவராக நம்மை தாங்கி வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.
மற்றவர்களை பார்த்து, நமக்கு அதுப்போல இல்லையே என்று ஏங்காமல், கர்த்தர் நம்மை வைத்திருக்கும் நிலையில் சந்தோஷப்படுவோம். நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் உண்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்துவார்.
இப்படிப்பட்ட மனரம்மியமுள்ள வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்