The desire for money is the root of all evils.
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளால் தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”
1 தீமோ 6:10
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்று பண ஆசையினால் பலர் தங்கள் வாழ்க்கையிலே தவறான தீதான காரியங்களைத் துரிதமாய் செய்வதைப் பார்க்கிறோம்.
பண ஆசையின் நிமித்தமாய், திருடுவது, கொலைசெய்வது, மற்றவர் உடைமைகளைத் தந்திரமாய் பறிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
சில வியாபாரிகள் தாங்கள் விற்கிற பருப்பு, அரிசி போன்றவைகளில் கலப்படமாய் கற்களையும், மணல் கற்களையும் சேர்த்து மக்களிடம் விற்கின்றனர்.
மக்களுக்கு கெடுதி உண்டாகும் என்று தெரிந்திருந்தும் அதை பெரிதாக அவர்கள் நினைப்பதில்லை.
எப்படியாகிலும் மற்றவர்களிடம் உள்ள பணத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று துரிதமாய்
செயல்படுகிறார்கள்.
இன்னும் சிலர் தங்கள் செல்வத்தைப் பெருக்குவதற்காக, அதிக வட்டிக்குக் கொடுத்து ஏழைகளை ஒடுக்குகிறதைப் பார்க்கிறோம்.
ஒருமுறை பிள்ளையில்லாத ஒரு சகோதரன் தன் தாயின் மரணத்தின் போது, தன் இரண்டு சகோதரிகளிடத்திலும் ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு தேவை என்று கையெழுத்தை வாங்கினார்.
அந்த கையெழுத்தை வைத்து தன் பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தும் அவரே எடுத்துக் கொண்டார். இப்படிப்பட்ட பாசமில்லாத செயல்கள் ஏன் நடைபெறுகிறதென்றால் அவர்களுக்குள் இருக்கிற பண ஆசையின் நிமித்தமே.
வேதத்தில் பார்ப்போம்,
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ6 :10.
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
எபிரேயர் 13 :5.
ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்.
பிரசங்கி 6 :9
பிரியமானவர்களே,
வேதத்தில் சாபத்தீடான எரிகோவின் கொள்ளைப் பொருளை, பண ஆசை, பொருளாசையினால், ஆகான் என்பவன் எடுத்து தன் கூடாரத்தின் மத்தியில் ஒளித்து வைத்திருந்தான்.
அதன் விளைவு இஸ்ரவேல் ஜனங்களுக்கு போரில் தோல்வியைக் கொண்டு வந்தது. அவன் கண்டு பிடிக்கப்பட்ட போது, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆகோர் பள்ளத்தாக்கில் கொண்டு வரப்பட்டு, அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் கல்லெறிந்து கொன்று சுட்டெரித்தார்கள்.
அதற்கு பின்பே இஸ்ரவேலர் வெற்றி பெற்றார்கள்.
சாபத்தீடான பொருட்களை பண ஆசையினால் ஆகான் என்ற ஒருவன் எடுத்ததின் காரணமாக முழு இஸ்ரவேல் ஜனங்களும் தோல்வியை கண்டனர். ஒருவரின் பண ஆசை முழு இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தோல்வியை கொண்டு வந்தது.
அன்பான சகோதரனே சகோதரியே, பண ஆசை வேதனையையும், சாபத்தையும் உண்டாக்குகிறதாய் இருக்கிறது. இன்றே நாம் இதை வெறுத்து கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ அர்ப்பணிப்போமாக.
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?
நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்
என்று ஆதி 4 :7-ல்
பார்க்கிறோம்.
ஆகவே நாம் நன்மையை செய்து பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, பரத்திற்குரிய வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்