The Lord GOD has given me the tongue of the wise
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும் படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்;
ஏசா 50 :4.
••••••••••••••••••••••••••••••••••••••••
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த ஏழையானவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான்.
ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டு இருந்தான்.
அரசன் வருவதை அறியாத வேலைக்காரன் மற்ற வேலைக்காரர்களிடம்,என்னைப் போன்ற அறிவாளி இந்த நாட்டில் யாருமே இல்லை.ஏதோ என் நேரம் சரியில்லாததால் வேலைக்காரனாக இருக்கிறேன். வாய்ப்பு மட்டும் கிடைத்தால் நான் அமைச்சனாகி விடுவேன் என்று பேசிக் கொண்டிருந்தான்.
“பகலில் பக்கம் பார்த்து பேசு! இரவில் அதைக் கூட பேசாதே என்பார்கள்!” வேலைக்காரன் அரசர் வருவதை கவனிக்காமல் பேசிய இந்த பேச்சு அரசரின் காதில் விழுந்து விட்டது. இவன் என்ன பெரிய புத்திசாலியா? இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கோபம் கொண்டான் அரசன்.
டேய்! நீ என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா? நீ அறிவாளியா இல்லையா என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். வீண் பெருமை பேசியதால் நீ உன் உயிரை இழக்கப் போகிறாய் என்றான் மிகுந்த கோபத்துடன் அரசன்.
இதைக் கேட்டு கொஞ்சமும் பயப்படவில்லை , வேலைக்காரன்
அரசே! என்ன சோதனை வைக்கப் போகிறீர்கள்? என்று பணிவுடன் கேட்டான்.
“நீ கடலில் உள்ள அலைகளை எல்லாம் ஒரு வலையில் பிடித்துக் கொண்டு இங்கே வர வேண்டும். அப்படி முடியாவிட்டால் உன் உயிர் போகப் போவது உறுதி” என்று கோபத்துடன் சொன்னான் அரசன்.
சிந்தனையில் ஆழ்ந்த வேலைக்காரன், அரசே! நீங்கள் சொன்ன செயலை எளிதாக என்னால் செய்ய முடியும் அதற்கு நான் கேட்கும் பொருளை நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று கேட்டான்.
யாராலும் செய்ய முடியாத இதை நீ செய்து விடுவாயா? அப்படி என்ன பொருட்கள் வேண்டும் கேள் உடனடியாக தருகிறேன்! என்றான் அரசன் இறுமாப்புடன்.
அரசே! கடல் அலைகளை வலையில் பிடித்து இழுத்து வர கட்டளையிட்டு இருக்கிறீர்கள் அப்படி செய்ய எனக்கு கடல் மணலால் செய்யப்பட்ட வலை ஒன்று வேண்டும் எப்போது தருகிறீர்கள் என்று கேட்டான் வேலைக்காரன்.
இதை எதிர்பாராத அரசன் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தான். அரசே வலை கிடைத்ததும் சொல்லி அனுப்புங்கள் வருகிறேன் என்றான் வேலைக்காரன்.
அடேய்! நீ வென்று விட்டதாக நினைக்காதே! நாளை நீ அரசவைக்கு வந்து சேர்! அங்கு உனக்கு இன்னொரு போட்டி காத்திருக்கிறது என்று அரசன் ஆத்திரத்துடன் கூறி சென்று விட்டான்.
மறுநாள் அரசவையில் அரசன் அமர்ந்திருந்த போது வேலைக்காரனும் பணிவாக வந்து நின்றான். அரசன் அவனைப் பார்த்து, ! நீ சமையலில் நிபுணனாமே! இதோ இந்த கோழியைக் கொண்டு நீ இருபது வகையான உணவுகளை சமையல் செய்ய வேண்டும். அதைச் சாப்பிட நாங்கள் நூறு பேர் வருவோம். எங்களுக்கு வயிறார நீ உணவு போட வேண்டும் என்றான்.
இதைக் கேட்ட வேலைக்காரன் தன் கையில் இருந்த ஒரு ஊசியை எடுத்து அரசனிடம் தந்தான். அதைப் பெற்றுக் கொண்ட அரசன் எதற்காக இந்த ஊசியை தருகிறாய்? என்று கேட்டான்.
அரசே! ஒரு கோழியைக் கொண்டு நூறு வகையான சமையல் கூட நான் செய்யத் தயார்! அதைக் கொண்டு ஆயிரம் பேருக்கு வயிறார உணவிடவும் என்னால் முடியும். இந்த உலகில் முடியாதது என்பது கிடையவே கிடையாது.
நான் கொடுத்த இந்த ஊசியை நீங்கள் யாரிடமாவது கொடுத்து அடுப்பு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் செய்து தரச் சொல்லுங்கள் அடுப்பும் பாத்திரமும் வந்தவுடன் நீங்கள் சொன்னபடியே சமைக்கிறேன் என்றான்
வேலைக்காரன்.
இந்த ஊசியில் எப்படி பாத்திரங்கள் செய்ய முடியும்? மன்னன் வேலைக்காரனின் அறிவை மெச்சினான். டேய் நீ! பலே கில்லாடி! இவ்வளவு அறிவுடைய நீ இன்று முதல் என் அமைச்சர்களில் நீயும் ஒருவன் என்று சொல்லி அமைச்சன் ஆக்கி கொண்டான்.
தன்னுடைய கடவுள் பக்தியாலும் தன் அறிவு கூர்மையாலும் வேலைக்காரனாக இருந்தவன் அமைச்சராக உயர்ந்தப்பட்டான்.
கர்த்தருக்குப் பயப்படுகிறவன் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான்.
வேதத்தில் பார்ப்போம்,
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்;
ஏசாயா 54 :17.
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
நீதி 21:23.
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
சங்கீதம் 37 :30.
பிரியமானவர்களே,
நாவுக்கு அழிக்க மாத்திரமல்ல; ஆக்கவும் வல்லமையுண்டு. இளைப்படைந்து இருப்பவனுக்கு சமயத்துக்கு ஏற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் என ஏசாயா எழுதி வைத்துள்ளார்.
அதி உன்னதமான இந்த கல்விமானின் நாவை நாமும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், தேவனோடுள்ள நமது உறவை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். காலைதோறும் கர்த்தர் நம்மை எழுப்பி கற்றுக் கொள்ளுகிறவனைப்போல நான் கேட்கும்படிக்கு என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.
அனைத்தையும் தேவனே செய்கிறார் எனில் முதலாவது நமது நாவை தேவனுடைய ஆளுகைக்குள்ளாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அதை நன்மையாக உபயோகிக்க தேவ அருள் தேவையென்பதை நாம் உணர வேண்டும்.
நமது நாவில் அவர் அசைவாட விட்டுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது அது சமயத்திற்கேற்ற வார்த்தைகளைப் பேசும்.
நமது நாவை தேவ ஆளுகைக்குள் நாம் ஒப்புக் கொடுப்போமானால், அவர் அதைப் பிறருக்கு நன்மையாக பயக்குகின்றார். பிறரை ஆறுதல்படுத்துகின்ற, சமயத்துக்கு ஏற்ற வார்த்தையைச் சொல்லக் கூடிய ஆசீர்வாதமான நாவாக மாற்றுவார்.
“கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும், என் உதடுகளின் வாசலைக் காத்துக் கொள்ளும்”
சங்.141:3 என்கிறார் தாவீது. நாவையடக்க எந்தவொரு மனுஷனாலும் கூடாது என்பதைப் புரிந்தவராக தாவீது தேவனை நோக்கி இவ்விண்ணப்பத்தை ஏறெடுக்கிறார்.
நாவை நாம் ஞானமாய்ப் பிரயோகிக்க தேவ உதவி நமக்கு அவசியம். தேவன் மோசேயை நோக்கி “நீ போ நான் உன் வாயோடே இருந்து நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார் யாத்.4:12. இதிலிருந்து, வாயின் வார்த்தைகளை அருளுகிறவர் தேவன் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
நமது நாவை அவரது ஆளுகைக்குட்படுத்திக் கொண்டால் அது எப்போதுமே நன்மை பயக்கும் அவயவமாகி விடும். இன்றே நமது நாவை ஒப்புக்கொடுத்து, கல்விமானின் நாவைப் பெற்றுக் கொள்வோம்.
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமொழி:18:21 என்று வேதம் நாவை குறித்து எச்சரிப்பு விடுகிறது.
ஆம், நமது வாயின் வார்த்தைகளில் கவனமாயிருக்க கற்றுக் கொள்வோம். ஏசாயா நாவை
தொட்டது போல எங்களின் நாவை தொட்டருளும் என்று மன்றாடுவோம்.
அப்பொழுது நம் முழு சரீரமும் தூய்மையடைந்து, பாவங்கள் நீங்கி கர்த்தரின் அழைப்பை பெற்று அவர் பணி செய்வோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இத்தகைய நன்மைகளை பேசும் கல்விமானின் நாவை கர்த்தர் தாமே நம் யாவருக்கும் தந்தருளுவாராக.
ஆமென்