The LORD is my shepherd, I lack nothing

The LORD is my shepherd, I lack nothing

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்
சங்கீதம் 23:1

========================
எனக்கு அன்பானவர்களே!

நல்ல மேய்ச்சலில் நம்மை மகிழச் செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சில கிராமங்களில், விவசாயிகள் தங்களுடைய ஆட்டு மந்தையைப் பட்டியில் அடைத்து இரவில் அதைப் பாதுகாப்பதை நாம் அறிவோம். காலையில் மேய்ப்பர்கள் மந்தைகளை அழைத்துக் கொண்டே அந்தக் கூடாரத்திற்குள் நுழைவார்கள்.

அப்பொழுது மேய்ப்பர்கள் தங்கள் தங்கள் மந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஒவ்வொரு மந்தையும் தங்கள் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவர்களுக்குப் பின் செல்லும். ஒருவேளை மேய்ப்பன் மாறு வேடத்தில் வந்திருந்தால் கூட, அவனுடைய சத்தத்தை வைத்து மந்தை அவனை அடையாளம் கண்டு கொள்ளும்.

அதே வேளையில் ஒரு போலியான மேய்ப்பன் மேய்ப்பனுடைய உடையில் வந்து மந்தையை அழைத்தாலும் அவை அசையாது. உண்மையான மேய்ப்பனுடைய சத்தத்தை மந்தை சரியாகக் கேட்டு அவனையே பின்பற்றிச் செல்லும்.

இவ்விதமாக மேய்ப்பன் தன்னுடைய மந்தையை அழைத்து, பசுமையான மேய்ச்சலுக்கும், புத்துணர்வளிக்கும் தண்ணீர்களண்டைக்கும் அழைத்துச் செல்வான்.

சங்கீதம்:23 – ம் அதிகாரத்தில் தாவீது இப்படியாக கூறுகிறார்.”கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.நான் தாழ்ச்சி அடையேன்” என்று.

ஆம், கர்த்தர் தன் ஜனங்களுக்கு மேய்ப்பராயிருக்கிறார். ஒரு மேய்ப்பர் தன்னுடைய ஆடுகளை பாதுகாத்து பராமரிப்பது போல கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார்.

நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளை மந்தைக்கு வழிநடத்துகிறார். தன் ஆடுகளை போஷித்து பராமரிக்கிறார். தாவீது இதை அறிந்தபடியால் “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.எனக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற விசுவாசத்தோடு உறுதியாய் சொல்லுகிறார்.

தாவீதுக்கு மேய்ப்பராய் இருந்த அதே கர்த்தர் இன்று நமக்கும் மேய்ப்பராயிருக்கிறார். எனவே நாம் இனி தாழ்ச்சி அடைவதில்லை. நம் தேவைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார் அதை எப்பொழுது தரவேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

நம்மை அவர் ஒரு போதும் தாழ்ச்சி அடைய தேவன் விடுவதில்லை. நமக்கு உயர்வை கொடுக்க அவர் தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார்.

எனவே கர்த்தர் உங்கள் மேய்ப்பராய் இருக்க உங்களை நீங்கள் ஒப்புக் கொடுத்தால் நீங்கள் ஒரு பொழுதும் உங்கள் வாழ்க்கையில் தாழ்ச்சி அடைவதில்லை. அதாவது குறைவு என்பதே இல்லை.

வேதத்தில் பார்ப்போம்,

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10 :11.

ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 10:7

நான் என்னுடையவைளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
யோவான் 10:15

பிரியமானவர்களே,

வேதத்தில் பழைய ஏற்பாட்டில் மேய்ப்பர்கள் என்றவுடன் அநேகர் நமது நினைவில் வருவார்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பின் சகோதரர்கள், மோசே, தாவீது என்று பலர் மேய்ப்பர்களாக இருந்தனர். அவர்களெல்லாருக்கும் மந்தை மேய்த்தலே தொழிலாக இருந்தது.

ஆனால் இயேசுவோ தம்மை நல்ல மேய்ப்பன் என்று கூறுகிறார். மேய்ப்பன் தன் ஆடுகளை நேசித்து அவைகளை புல்லுள்ள இடங்களில் அமரச் செய்து அவைகளுக்கு தண்ணீர் காட்டி , இரவிலும் தூங்காது விழித்திருந்து அவைகளை மிருகங்கள் களவாடாத படி காவல் புரிந்து அவைகளுக்காக தன் நேரங்களையும், தன்னையும் அர்ப்பணிக்கிறான்.

அதைப் போல் தான் ஆண்டவரும் தம்முடைய பிள்ளைகளை நீதியின் பாதையில் நடத்துகிறார்.தம் மக்களுக்கு வேண்டியவற்றை தருகிறார். சில வேளைகளில் காணமற்போன ஆடுகளான நம்மையும் நல்ல மேய்ப்பன் இவ்விதமாகவே நடத்துகிறார்.

சில சமயங்களில் உலகத்தின் முட்செடிகளிலும் களைகளிலும் சிக்குண்டிருந்தோம், பரந்த வனாந்தரத்தில் தொலைந்து போயிருந்தோம்; ஆனால் தேவன் நம்மை நேசித்தார். மந்தைகளின் மற்ற ஆடுகளைப் பத்திரமான இடத்தில் விட்டு விட்டு நம்மைத் தேடி வந்தார்.

நம்முடைய ஆத்துமாவுக்கு எப்படிப்பட்ட வேதனைகள் வந்தாலும் கர்த்தரே நம்மை தேற்றுபவராக உள்ளார்.

கர்த்தரைத் தன் துணையாக, பெலனாக, நம்பிக்கையாக வைத்திருப்போருக்கு, ஆவிக்குரிய வாழ்விலும், இம்மைக்குரிய வாழ்விலும் நிரம்பி வழியும் அனுபவமாகிய ஆசீர்வாத வாழ்வு உண்டு.

ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் பாதத்தில் இருந்து, ஆண்டவரால் நிரப்பப்பட்டு, ஆண்டவரோடு கூட நடக்கும் போது நம் வாழ்க்கை சம்பூரணமாயிருக்கும்; நிறைவாயிருக்கும்; தேவ கிருபையினால் நிரப்பப்பட்டிருக்கும்.

ஆடுகளாகிய நமக்காக தன் ஜீவனையே கொடுத்த நல்ல மேய்ப்பன் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அவரது மேய்ச்சலில் நாம் அவரோடு கூட இருந்து அவர் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து மேன்மை காண கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *