The LORD is the true God; he is the living God and the everlasting King.
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா;
எரேமியா 10 :10.
========================
எனக்கு அன்பானவர்களே !
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“வாட்ச்மேன் நீ” என்னும் அற்புத ஊழியரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் சீனாவில் ஆயிரக்கணக்கான வீட்டு சபைகளை நிறுவும்படி கடினமான பாதையில் ஊழியம் செய்தவர்.
ஒரு சமயம் மேஹ்வா என்னும் தீவில் கர்த்தருடைய ஊழியத்தை வைராக்கியமாய் செய்து வந்தார்.
அத்தீவின் கிராம மக்கள் ஜனவரி 11ம் தேதி தாங்கள் வழிபடும் கடவுளுக்கு பெரிய பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
அந்த கிராம மக்கள் மிகுந்த பெருமையுடன், ‘கடந்த 286 வருடங்களாக இந்த பண்டிகை நாளில் மழை பெய்ததில்லை’ என வாட்ச்மேன் நீ யிடம் கூறினர். அப்போது அவருடன் வந்திருந்த சக ஊழியரான கியோசிங் லீ என்ற வாலிபன் சற்றும் தாமதியாமல், ‘ நான் உறுதியாகக் கூறுகிறேன்,
எங்கள் தேவனே உண்மையான தேவன். அவர் இந்த ஜனவரி 11ம் நாள் மழை வரச் செய்வார்’ என சவால் விடுத்தார். அதற்கு அந்த தீவு மக்களும் ‘அப்படி மழை பெய்தால் நாங்கள் அனைவரும் இயேசுவே தெய்வம் என்று ஏற்றுக் கொள்கிறோம்’ என்றனர்.
கியோசிங் பேச்சைக் கேட்ட வாட்ச்மேன் நீ சற்றே திகைத்தார். ‘ஏன் தேவையில்லாமல் இப்படி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்’ என மனதில் சற்று தடுமாறினாலும் மனதை தளரவிடாமல், தைரியத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தார்.
‘தகப்பனே, நாங்கள் எங்கள் எல்லையை மிஞ்சிவிட்டோமோ என்று எண்ணுகிறோம். ஆனாலும் உம்முடைய நாமத்திற்கு நீரே மகிமையை வரப்பண்ணும்’ என குழுவாக கூடி ஜெபித்தனர்.
ஜனவரி 11ம் தேதியும் வந்தது. காலை தொடங்கி மதியம் வரை நல்ல மழை பெய்தது. கிராமத் தலைவரும் கிராம மக்களும் ஊழியர்களிடம் வந்து, ‘பண்டிகை நாளை தவறாக மாற்றி சொல்லி விட்டோம். எங்களுக்கு பண்டிகை நாள் ஜனவரி 14ம் தேதிதான். அன்று மழை பெய்தால் பார்க்கலாம்’ என்று கூறினர்.
மீண்டும் தொடர்ச்சியாக வாட்ச்மேன் நீயும் மற்றவர்களும் ஊக்கமாக ஜெபித்தார்கள். ஜனவரி 14ம்தேதியும் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனைக் கண்ட அந்த கிராமமே மனமாற்றமடைந்து கர்த்தரே தெய்வம் என்று அனைவரும் அன்பின் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்;
1 இராஜா18 :24.
இவ்விதமான சீரைப் பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 144 :15.
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 33 :12.
பிரியமானவர்களே,
எலியா தீர்க்கதரிசி கர்த்தரை விட்டு பின்வாங்கி போய், பாகால்களை வணங்கின இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் கர்த்தரே தேவன் என்று முழக்கமிட்டு,
‘நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன், அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்’
1இரா18:24.
அதன்படியே ‘தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலை தொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்;
ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்’. பதில் கொடுக்காத, கொடுக்க முடியாத தேவர்களை பார்த்து நாள் முழுவதும் கூப்பிட்டும் அவர்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்’
1இராஜா:36-37.
எலியா தீர்க்கதரிசி சுருக்கமான ஆனால் கருத்துள்ள ஒரு ஜெபத்தை செய்தபோது, ‘அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
ஜனங்களெல்லாரும் இதைக் கண்ட போது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள் 38-39-ம் வசனத்தில் பார்க்கிறோம்.
அற்புதம் செய்யும் கர்த்தர் இன்றும் நம்முடன் ஜீவிக்கிறார் ஆனால் நாம் ஒரு எலியாவைப்போல ஒரு வாட்ச்மேன் நீயைப்போல எழும்பினால் நம்மைக் கொண்டு தாம் ஒருவரே உண்மையுள்ள தேவன் என்று நிரூபிக்க கர்த்தரும் காத்திருக்கிறார். நம்மை கொண்டு அவர் பெரிய காரியங்களை செய்ய நமக்காக காத்திருக்கிறார்.
இத்தகைய கர்த்தரை தெய்வமாகக் கொண்ட நாம் பாக்கியமுள்ளவர்கள்.கர்த்தரையே நம்பி அவருக்காக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நம் யாரோடும் இருப்பதாக.
ஆமென்