The LORD lifts up the humble

The LORD lifts up the humble

கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
சங்கீதம்:147 :6.

~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், அவரது மெலிந்த தேகத்தையும், உயரமுமான தோற்றத்தையும் குறித்து ஒருவர், மிகவும் பரிகசித்து, அவரைப் புண்படுத்தும் விதமாகப் பேசினார்.

ஆனால் ஆபிரகாம் லிங்கனோ அதற்கு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பின் நாட்களில் அமெரிக்காவின் அதிபர் ஆன பிறகும் கூட அவருக்கு தீங்கு இழைக்கவில்லை‌.

ஆம்! மனிதர்கள் நம்மை துன்புறுத்தும் போதும், வேதனைப்படுத்தும் போதும் அவற்றை அமைதியாக சகித்துக் கொள்வதே சாந்த குணம் ஆகும்.

சாந்த குணம் ‘பலவீனமான ஒன்று’ அல்ல. தான் எதிர்த்து எதையும் செய்ய முடியாத இடத்தில் பணிந்து போவது சாந்தம் அல்ல.
தனக்கு மிகுந்த பலம் இருந்தும், தாழ்மையாய் பொறுத்து போவது தான் சாந்த குணத்தின் தன்மை.

எந்த காரணமும் இல்லாமல், பொறாமையால் தன்னை கொல்லத் துடித்த சவுலை, தான் அழிப்பதற்கான வாய்ப்பு 3 முறைக் கிட்டியும், அதற்கான பெலனும், காரணமும் சரியாய் இருந்தும்…, தாவீது அவரைக் கொல்லவில்லை. இதுவே உண்மையான சாந்த குணமாகும்.

நீடிய சாந்தமுள்ளவன் மகா புத்திமான் என்று நீதிமொழிகள்:14:28-ல் கூறுகிறது.மேலும் நீதிமொழிகள்:15:18-ல் ‘நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான்’ என்றும் வேதம் கூறுகிறது.
அதுமட்டுமல்ல “சாந்த குணம் ஆவியின் கனியிலும் முக்கியமான ஒன்று”. இதனை
கலாத்தியர்: 5:23 -ல் வாசிக்கலாம்.

கர்த்தர் சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார் சங்கீதம் 146:6 என்ற திருமறை வசனத்திற்கேற்ப ஆபிரகாம் லிங்கனை கர்த்தர் ஆசீர்வதித்து, அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக உயர்த்தினார்.

வேதத்தில் பார்ப்போம்,
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
சங்கீதம் 25 :9.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
மத்தேயு 5 :5.
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
சங்கீதம் 37 :11.

பிரியமானவர்களே,

யோசேப்பு என்ற இறை மனிதரும் சாந்த குணத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தார் என்று திருமறையில்
காண்கிறோம்.
அவரது சகோதரர்கள் அவர் மீது பொறாமை கொண்டு அவரை அடித்து, ஒரு குழிக்குள் போட்டனர்.

எகிப்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த வியாபாரிகளிடம் அவரை ஒரு அடிமையாக விற்பனை செய்தனர். எனினும், தனக்கு தீமை செய்த தனது சகோதரர்கள் மீது அவர் கோபம் கொள்ளாமல், தனது சாந்த குணத்தை வெளிப்படுத்தினார்.

கடவுளின் அருளாலும், அவரது கடின உழைப்பாலும், பின் நாட்களில் எகிப்து தேசத்தின் அதிபராக உயர்த்தப்பட்டார். அந்நாட்களில் நிலவிய பெரும் பஞ்சத்தின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த அவரது சகோதரர்கள், எகிப்தின் அதிபராகிய யோசேப்பைத் தேடி வந்தார்கள்.

தாங்கள் செய்த தீமையை மனதில் நினைத்து, யோசேப்பும் தங்களுக்கு தீமை செய்வாரோ என்று எண்ணி, அவரைப் பணிந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்று கூறினர்.

எனினும், யோசேப்பு அவர்களிடத்தில் பயப்படாதிருங்கள், நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, ஆதி 50:20). அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து பஞ்ச காலத்தில் அன்புடன் அவர்களை பராமரித்து, பாதுகாத்தார்.

ஆம்! சாந்த குணமுள்ளவர்கள், தீமைக்கு தீமை செய்யமாட்டார்கள்.
மாறாக, தீமையைச் சகித்துக் கொண்டு, தீமைக்கு நன்மை செய்வார்கள். இதன் மூலமாக அனைவரது அன்பையும், பலரது நல் மதிப்பையும் பெற்றுக் கொள்வார்கள்.

ஆகவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் மத்தேயு 5:5) என்று கூறினார்.

மேலும், நமது ஆண்டவர் இயேசு தாமே சாந்த குணத்திற்கு நல்லதொரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். ஆம்! உலகத்தின் மீட்புக்காக சிலுவையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களையும், வேதனைகளையும் சகித்த அவர், நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார்.

ஆனாலும் தம்முடைய வாயை திறக்கவில்லை ஏசாயா 53 : 7 என்று திருமறை கூறுவதற்கேற்ப, பிறர் தன்னை வேதனைப்படுத்தின வேளையிலும், தனது சாந்த குணத்தையே வெளிப்படுத்தினார்.

நாமும், நமது இல்லத்திலும், உள்ளத்திலும் , பணி செய்யும் இடத்திலும், சாந்த குணமுள்ளவர்களாய் நடந்துக் கொள்ளுவோம். ஆண்டவர் அருளும் நன்மைகளையும் உயர்வுகளையும் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *