The Lord will change the lives of our captivity.
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது.
எரேமியா 4 :19.
~~~~~~~எனக்கு அன்பானவர்களே!
கைவிடாத நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வேதனைகளும், துன்பங்களும் வந்திருக்கலாம். இவைகள் அனைத்தும் உலக நியதி தான்.எனினும் அதன் மூலம் அநேக பாடங்களையும், அனுபவங்களையும் நாம் கற்றுக் கொண்டோம் என்பதே உண்மை.
பேராசிரியர் ஹோவர்ட் ஹென்ட்ரிக்ஸ் என்பவர் “நீச்சலைத் தபால் கல்வியின் மூலம் பயில முடியாது, அதேப் போன்று, தொலைதூரக் கல்வியின் மூலம் உபத்திரவத்தின் பாடங்களையும் கற்க முடியாது. அவற்றை தவிர்க்கமுடியாத தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவே கற்க முடியும் என்றார்”.
இரண்டாம் உலகப்போரில் அஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் கைது செய்யப்பட்ட பிரைமா லீவை என்னும் சிறைக் கைதி, உபத்திரவத்தைப் பின்வருமாறு விவரித்தார்.
அவரைப் படைவீரர்கள் நெருக்கமாய் அடைத்து வைத்திருந்தனர். ஒரு சமயத்தில் அவருக்கு தாகத்தால் நாக்கு வறண்டது. அவருடைய உதடுகளை ஈரப்படுத்த ஜன்னலின் மீதிருந்த பனித்துகள்களை எடுத்து சாப்பிட்டார்.
அதைக் கண்ட காவலாளி, உடனே அவர் கையில் இருந்த பனித்துகள்களைப் பறித்து எறிந்தார். அந்த இரக்கமில்லாத செயலால் லீவை காவலாளியிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த காவலாளி “இங்கு ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பதிலளித்தான்.
வாழ்க்கையில் பல நேரத்தில் நாமும் இவ்வாறு உணருகிறோம். நாம் ஏன் இத்தனை வேதனைகளை அனுபவிக்கிறோம் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத போது மௌனம் நம்மைப் பார்த்து ஏன் கூடாது? என்று பரிகசிக்கிறது.
வேதத்தில் யோபுவும் என்ற மனிதன் வேதனையை அனுபவிக்கும் போது இவ்வாறு தான் நினைத்திருப்பார் . என்னுடைய வாழ்க்கை இத்தனை மோசமாக பாதிக்கப்படும், இவ்வளவு பின்னடைவு ஏற்படும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லையே
என்று அங்குலாயித்திருப்பார்.
நம் அன்பின் ஆண்டவர் நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் காண்கிறவர். அவர் நம்மை ஒருபோதும் கை விடுகிறவர் அல்ல.நம் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மோடு இருப்பவர்.
வேதத்தில் பார்ப்போம் ,
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
சங்கீதம் 38:6.
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
சங்கீதம் 69 :20.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதம் 139 :24.
பிரியமானவர்களே,
யோபுவின் நண்பர்களைப் போல நாமும் பாடு அனுபவிப்பவருக்கு ஆறுதல் அளிப்பதாக நினைத்து அதிகம் பேசுகிறோம்.
நம்முடைய நோக்கம் சரியாகவே இருப்பினும், மற்றவர்கள் பாடு அனுபவிக்கும் நேரத்தில், “தேவனுக்காய் நாம் பேச வேண்டும்” என்ற எண்ணத்தை தவிர்ப்பது மிக மிக நல்லது.
ஏழு நாட்களுக்கு யோபுவின் நண்பர்கள் (எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோபார்) அமைதியாய் துக்கம் தெரிவித்தனர். “ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழுநாள், அவனோடு கூட தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்
யோபு 2:13.
எட்டாம் நாளிலே யோபுவின் நண்பர்கள் விமர்சிக்கத் தொடங்கினார்கள் . எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல விமர்சித்தனர். அவர்கள் குற்றஞ்சாட்டுவதும், பின்பு யோபு அவர்களுக்கு பதிலளிப்பதுமாகவே விவாதங்கள் தொடர்கிறது.
மூன்று நண்பர்களும் அவர்களின் வேதாகம அறிவைக் கொண்டு யோபுவின் அனுபவத்தை சோதித்தனர். யோபு நேர்மையான வாழ்க்கையை வாழவில்லை என்று ஒவ்வொருவரும் அவர் மீது குற்றம் சாட்டினர்.
பாவம் செய்யாதவர்களை தேவன் இப்படி தண்டிக்கமாட்டார், ஆதலால் நீ ஏதோ பாவத்தை மறைக்கிறாய் என்று அவரை குற்றஞ்சுமத்தினர். யோபு 4 முதல் 31 ஆம் அதிகாரம் வரை யோபு தான் குற்றமற்றவர் என்றும் அவர்களின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும் யோபு வாதாடுகிறார்.
அவரின் நண்பர்கள் வார்த்தைகளால் தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே மனதளவிலும் ஆவிக்குரிய வாழ்விலும் சரீரத்திலும் காயப்பட்ட யோபுவை இன்னமும் அதிகமாய் இவர்கள் துளைத்தெடுத்தனர்.
அவர்களின் இரக்கமற்ற தாக்குதல் அனைவரையும் சோர்வுக் குள்ளாக்கியது.
கடைசியில் யோபு வின் நண்பர்களின் அந்த முயற்சி பிரயோஜனமற்றது என்பது நிருபிக்கப்பட்டது.
யோபுவின் நண்பர்கள் தாம் செய்த செய்த தவறுக்காக தகனபலியை செலுத்தினர்.அதன் பின் யோபுவும் தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றி நல்வாழ்வை அளித்தார்.
யோபுவின் நண்பர்கள் தாம் செய்த தவற்றை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்ததை போன்று நாமும் நம் வார்த்தையினால் பிறரை காயப்படுத்தியிருந்தால் நாம் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பொழுது நல்வாழ்வை நம் தேவன் அருளிச் செய்வார் என்பதில் ஐயமில்லை.
கர்த்தர் தாமே நம் சிறையிருப்பின் வாழ்வை மாற்றி இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் நம்மை நிரப்பி பாதுகாப்பாராக.
ஆமென்.