The Lord will strengthen you and protect you from the evil one.
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
2 தெசலோ 3 :3 .
***********
எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்
உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் நாம் அனுபவிக்க வேண்டுமானால்.
வேதத்தை அதிகமாக நேசிக்க வேண்டும்.
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு என்று பார்க்கிறோம்.
இந்த நாளிலும் ஆண்டவர் உண்மையுள்ள மனுஷனை உருவாக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறார். உண்மையுள்ள மனுஷர்களாய் நாம் வாழும்போது, தேவனுடைய ஆசீர்வாதம் நம்மை தேடிவரும்.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் நீதிமொ 28:20. என்று வேதமும் கூறுகிறது.
ஆபிரகாமைக்குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். அவன் உண்மையுள்ள மனிதனாயிருந்தான் என்று.
தேவன் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி….அவன் இருதயத்தை உண்மையுள்ளதாகக்கண்டு, புறஜாதிகளுடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி அவனோடு உடன்படிக்கைபண்ணி, தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார் நெகேமியா 9:7,8.
ஆம், இந்த நாளிலும் கர்த்தர் உங்களையும் என்னையும் ஆபிரகாமைப்போல ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை பெறுவதற்கு முதலாவது நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்.
கர்த்தர் ஆபிராமுக்கு கொடுத்த ஆசீர்வாதம்: “…நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” ஆதி 12:1-3. என்று பார்க்கிறோம்.
இன்றைக்கு இந்த ஆசீர்வாதங்களை கர்த்தரிடத்தில் கேட்டு உரிமையாக்கிக் கொள்ளுவோம். அவர் உண்மையுள்ள இருதயத்தை தேடுகிறார். உண்மையுள்ளவர்களை அவர் மிகவும் நேசிக்கிறார். “மனுஷன் முகத்தை பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப்பார்க்கிறார்” 1 சாமுவேல் 16:7; நீதி 21:2.
எங்கு சண்டையும் வாக்குவாதங்களும் பேதங்களும் இருக்கிறதோ அங்கு தெய்வீக ஆசீர்வாதங்களுக்கு இடமில்லை. அநேக குடும்பங்களில் குறிப்பாக பணவிஷயத்தில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றுகிறார்கள்.
உண்மை இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் இருக்கும் மனிதனின் உள்ளத்திலும், இல்லத்திலும் ஒரு போதும் நிம்மதியை காணவே முடியாது.
இந்த நாளிலும் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். உண்மையுள்ள இருதயத்தில் தேவன் வாசம்பண்ண விரும்புகிறார். அவர் தங்கியிருக்கிற குடும்பத்தில் இருதயத்தில் ஆசீர்வாதத்திற்கு எந்த தடையும் இருக்காது
வேதத்தில் பார்ப்போம்,
அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.
2 சாமு 22: 24.
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
சங்கீதம் 31 :23.
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 145 :18.
பிரியமானவர்களே,
இந்த உலகில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நம்மில் அநேகர் மனதிலே உண்மை இல்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்களில் இயேசு எப்படி கடவுளிடம் உண்மையாக இருந்தார் என்று பார்ப்போம்.உள்ளதை உள்ளபடியே சொல்லும் தன்மையே உண்மை என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது.
எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுள் நம்மிடத்தில் விரும்புகிறார்.
இயேசுவும் கடவுளுக்கு பயந்து உண்மைக்கு அடையாளமாக வாழ்ந்து காட்டினார்.
யூதர்களை ரோமர்கள் ஆண்டு வந்த காலத்தில் ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் இயேசுவோ யூதர் ஆனபடியினால் தனக்குரிய பணத்தை ரோமர்களுக்கு சரியாக வரி செலுத்தினார் என்று வேதாகமத்தில் மத்தேயு 17: 24-27-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்கும் பொருட்டு ராயனுக்கு வரி செலுத்துவது நியாயமோ? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று கூறினார். இதைத்தான் வேதாகமத்தில் மத்தேயு 22: 17-21 மற்றும் யோவான் 18:1-8-ல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
இப்படி உண்மையாய் இருந்த இயேசுவின் மேல் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கொலை செய்ய திட்டமிட்டு போர்ச்சேவகர்கள் இயேசுவை பிடிக்க வந்த போது இயேசு அவர்களை பார்த்து யாரை தேடுகிறீர்கள்? என்று கேட்ட போது நசரேயனாகிய இயேசுவை தேடுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.
அப்போது இயேசு தனக்கு தீமை நேரிடப்போகிறது என்று தெரிந்தும் அவர்களை நோக்கி நான்தான் நசரேயனாகிய இயேசு என்று உண்மையை தைரியமாக கூறினார் என்று நாம் வேதத்தில் படிக்கிறோம்.
இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாமும் நம்முடைய காரியங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையாயிருக்க தேவன் விரும்புகிறார்.
உண்மையை பேசுவதினால் நமக்கு பிரச்சினையும், அவமானமும் வந்தாலும் நாம் யூத ராஜ சிங்கத்தின் பிள்ளைகள் என்பதினால் நாம் எப்போதும் உண்மையையே பேச வேண்டும்.
ஏனென்றால் உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்ற வேத தெளிவாய் கூறுகிறது.
நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து விரும்பாத ஒரு செயலை செய்து நமக்கு வர இருக்கும் ஆசீர்வாதங்களை நாமே இழந்து போகாதபடிக்கு
உலகில் நாம் காலமெல்லாம் அனைவரிடமும் உண்மையுள்ளவர்களாய் வாழ்வோம். ஆண்டவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள நமக்கு உதவி செய்வாராக.
ஆமென்.