சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். ஏசாயா 40 :29.
எனக்கு அன்பானவர்களே!
தேவ பலத்தால் நம்மை நிரப்பி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஒரு பள்ளியில், குளிர் காலங்களில் காலையிலே சென்று சகமாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னால், நெருப்பு மூட்டி, வகுப்பறைகளை சூடாக்குகிற பொறுப்பு ஒரு மாணவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஒரு நாள் சகமாணவர்கள் பள்ளி வந்தபோது பள்ளிக்கூடம் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே மாணவர்கள் ஓடி தீயில் மாட்டியிருந்த அந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இடுப்பிற்கு கீழ் தீயினால் வெந்துபோன சூழ்நிலையில் இருந்தாலும்
அவனோ, “நான் எப்படியும் பிழைப்பேன்” என உறுதியாய் இருந்து மருத்துவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் உயிர்
பிழைத்தான்.
மருத்துவர் அவனுடைய தாயாரை அழைத்து “இவன் வாழ்நாள் முழுவதும் சக்கரம் பொருந்திய நாற்காலியில் தான் இருக்க வேண்டும்; ஏனெனில் இடுப்பிற்கு கீழாய் அவனுக்கு உணர்ச்சி இல்லை” என்றார்.
இதைக் கேட்ட அச்சிறுவன் தன் உள்ளத்தில் “நான் எப்படியும் நடப்பேன்” என உறுதி பூண்டான். ஒரு நாள் தன் தாயார் தன்னுடைய நாற்காலியை உருட்டி வெளியே கொண்டு வந்த போது, அதிலிருந்து குதித்து தரையிலே விழுந்து, ஊர்ந்து மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட வேலியருகே சென்றான்.
இதன் பின் ஒவ்வொரு நாளும், அவ்விதமாக ஊர்ந்தான். ஒரு நாள் எழுந்து நின்றான். சில மாதங்கள் கழித்து கட்டைகளைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான்.
பின்பு பிடி ஒன்றும் இல்லாமல் நடந்தான். இப்பொழுது பள்ளிக்கு செல்வேன் என கூறி நடந்தே பள்ளிக்குச் சென்றான். ஓடும் ஆசையோடு, வேகமாக ஓட ஆரம்பித்தான்.
பின்பு அவன் உலக வீதியில் ஒரு மைல் தூரத்தை வேகமாக ஓடினவன் என பெயர் பெற்றார். அவர் பெயர் டாக்டர் கிளன் கன்னிகாம்.
அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தினது கர்த்தருடைய வசனம் என்று கூறினார். மனன வசனம் அவர் இருதயத்தில் எப்பொழுதும் இருந்ததால் அவர் புது பெலன் அடைந்து செட்டைகள் அடித்து எழும்பினார்.
தேவன் இந்த புதிய பெலனை ஆசீர்வாதமாக நமக்கும் தர வல்லவராய் இருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலனடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.
ஏசாயா 40:31
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 29 :11.
உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 84 :5.
பிரியமானவர்களே,
திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது.
யோசுவா, மிகப் பெரிய பணியை செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங் கொண்டு திடமனதாயிரு என்றார்.
இந்த பலம் எங்கிருந்து வரும்? இது மனித பலம் அல்ல, தேவ பலம். இது தேவனிடத்திலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்கும் புதிய பெலன்.
வேதம் சொல்லுகிறது கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.’’ நெகே.8:10
‘நமக்கு எவ்வளவு வேதனைகள், பலவீனங்கள் வந்தாலும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்கிற விசுவாசத்தோடு நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்க வேண்டும்.
பிசாசு சோர்வுகளைக் கொண்டு வந்து உங்கள் இருதயத்தைக் கவலைப்பட வைக்கும்போது, கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைத்து விட்டு சந்தோஷமாயிருங்கள்.
கவலைகள், வேதனைகள் உங்களைத் தாக்கும் போது உங்கள் சரீரமும் தானாகவே பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட வேளைகளில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். தேவனுடைய பெலன் நிச்சயம் உங்களை அளவில்லாமல் நிரப்பும்.
‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’
1 பேதுரு 5:7
‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’. ஏசா.40:31 என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே! நம் சரீரம் பலவீனமாயிருக்கும் நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். கர்த்தரை நோக்கி அதிகமாக ஜெபிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நாம் அதிகமதிகமாய் ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவ பெலனை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
வேதனை நேரங்களில் மனிதர்களைத் தேடி ஓடி அவர்களுக்காக காத்திருப்பதனால் எந்த பயனும் கிடையாது. மாறாக தேவனை நம்பி, அவரை நோக்கி ஜெபித்து அவருக்காக காத்திருக்கும் போது, கர்த்தர் உங்கள் வியாதிகளை குணமாக்கி, உங்களுக்கு நல்ல சுகத்தையும், பெலனையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். சோர்ந்து போகாமல் கர்த்தரையே சார்ந்து, அவர் ஒருவருக்கே காத்திருங்கள். விரைவில் அற்புதங்களை எதிர்பாருங்கள். ஒருபோதும் முணுமுணுக்காதீர்கள். பொறுமையோடு காத்திருங்கள்.
‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்’. என்று
மல்கியா.4:2-ல் பார்க்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே,
ஒருவேளை நாம் சோர்வுற்ற நிலையிலோ, வியாதியிலோ, எதிர்கால பயத்திலோ, பிள்ளைகளை குறித்ததான கவலையோடோ இருக்கலாம்.நாம்
எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவர் செட்டையின் நிழலில் வந்த நமக்கு கர்த்தர் நமக்கு புதிய பெலனையும், புதிய ஆரோக்கியத்தையும் தந்து வழிநடத்துவார்.
” உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” என்று நம்மாலும் கூற முடியும்.
இப்படிப்பட்ட விசுவாச உறுதியோடு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்