நீங்கள் களவு செய்யாமலும், வஞ்சனை பண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். லேவி 19 :11
அன்பானவர்களே,
பரலோக ராஜ்யத்திற்கென்று நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றுகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வீட்டில் இருந்த ஒரு பீரோவில் பணம் அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருந்தது. வீட்டுத் தலைவருக்கு ஒரே குழப்பமும், வருத்தமுமாய் இருந்தார்.
வீட்டிற்குள் இருக்கும் யாரோ ஒருவர் தான் பணத்தை எடுக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.ஆனாலும், பத்து பேர் இருக்கும் வீட்டில் யாரைக் கேட்டாலும் சண்டை வந்து விடுமே என்ற பயத்தில், கர்த்தர் என்றேனும் வழி காட்டுவார் என காத்திருந்தார்.
சில மாதங்கள் வரை திருட்டு தொடர்ந்தது. ஒரு நாள் இரவில், “ஐயோ! என் புடவையை பிசாசு இழுக்கிறானே… காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,” என வீட்டுத் தலைவரின் மனைவி கத்தினாள்.
வீட்டுத் தலைவரும் மற்றவர்களும் ஓடினர். அங்கு அவரது மனைவி இருட்டில் நின்றபடி, கத்திக் கொண்டிருந்தாள்.
விளக்கை ஆன் செய்து பார்த்தால், அந்தப் பெண்ணின் புடவை பீரோ இடுக்கில் மாட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது புரியாமல், அந்தப் பெண் ஏதோ பிசாசிடம் மாட்டிக் கொண்டதாக நினைத்து சத்தம் போட்டு விட்டாள்.
அனைவரும் வந்து பார்த்த போது ,அவள் கையில் பணம் இருந்தது.
இப்போது தான் வீட்டுத் தலைவருக்கு உண்மை புரிந்தது. தன் மனைவியே தன் வீட்டில் திருடி வந்ததை பற்றி மிகவும் வருத்தப்பட்டார்.
குற்றம் செய்வது மனித இயல்பு, ஆனால் குற்றம் செய்யாத மனிதரை காண்பது அரிது.
இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல.
நமது கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்க வேண்டும். சிறந்த நல்மனதோடு சேவையாற்றும் ஒருவர், தன்
மனதை சரியான வழியில் கையாண்டார் என்றால் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
அதன் போக்கில் நாம் விட்டுவிட்டால் தலைகுனிந்த வாழ்க்கை வாழ வேண்டியதாகும். ஆகவே நாம் சிந்தித்து செயல்படுவோம்.
வேதத்தில் பார்ப்போம்,
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா?
ரோமர் 2:21.
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
உபாகமம் 5 :21.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர் 13 :30.
பிரியமானவர்களே,
நம்
தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளில் ஒன்று ” களவு செய்யாதிருப்பாயாக” யாத்திராகமம் 20:15 என்பதே.
இன்று நான் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் என்று சொல்லும் அநேகர் திருடும் பழக்கத்தை இன்னும் விடவில்லை.
உங்கள் மனசாட்சி உங்களுக்கு அதை காட்டும். உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தமானதா ?_அல்லது பிறருக்கு சொந்தமானதா??
அது சிறிய பொருளாக இருந்தாலும் சரி அல்லது , பெரிய பொருட்களாக இருந்தாலும் சரி. திருட்டு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால், சாத்தானுக்கு உங்கள் மேல் அதிகாரம் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
மற்றவர் பணம் உங்கள் வீட்டில் உண்டா? வாங்கிய கடனை திரும்ப கொடுத்து விட்டீர்களா அல்லது மறந்தது போல் பாவனை செய்கிறீர்களா?
திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 கொரிந்தி: 6:10
களவு என்பது தேவ ராஜ்ஜியத்தில் நுழைவதை தடுத்து, திருட்டு நிறுத்திப் போடும். கர்த்தர் உன்னோடு பேசும் இந்த நேரத்திலே மனம் திரும்பு. மனம் திரும்பாவிட்டால், உன் வீட்டில் சாபம் தான் இருக்கும்.
நீ தோற்றுக் கொண்டே இருப்பாய். உன் பணம் ஓட்டை பையிலே போடப்பட்டது போல் அழிந்து கொண்டே இருக்கும். சபையில் ஊழியம் செய்யலாம், அல்லது உயர் பதவியில் இருக்கலாம்.நல்லது தான்.
ஆனால் மனம் திரும்பாவிட்டால் ஒரு பிரயோஜனம் இல்லை.
இன்று அநேக கிறிஸ்தவர்களும் கூட நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் இல்லாமல், உலக மனிதர்களைப் போல் வாழ்கிறார்கள்.
வேதம் சொல்லுகிறது மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித் தனங்களும், கொலை பாதகங்களும்.
களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டு வரும்.
என்று கூறுகிறது.
இன்று படித்தவர்களும், புத்திமான்களும், ஞானம் நிறைந்தவர்களும்,செல்வந்தர்களும், செல்வாக்கு பெற்றவர்களும், சமுதாயத்தில் முதன்மையான இடத்தில் இருப்பவர்களும் கூட, களவு செய்வதில் திறமையானவர்கள்.
ஆண்டவர் அவர்களுக்கு வேண்டிய எல்லாம் நிறைவாய் கொடுத்தும், அவர்கள் மனம் இன்னொருவனுக்கு உண்டானவைகள் மேலேயே நாட்டம் கொள்ளுகிறது. அதைத் தன் வசப்படுத்திக் கொள்ள எதையும் இழக்கவும் அவன் மனம் தயங்குவதில்லை .
எல்லாவிதமான அசுத்த குணம் நிறைந்தவர்களால் மட்டுமே களவு செய்ய முடியும். கட்டளையை மீறுவது பாவம். பாவம் செய்கிறவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
ஆகவே நம்மில் இது போன்ற தீய குணங்கள் இருக்குமாயின் அவைகளை முழுவதுமாய் களைந்து விட்டு பரிசுத்தமாய் வாழ பழகுவோம். ஆண்டவர் தருகிற ஆசீர்வாதத்தால் நம்முடைய வீடு மட்டுமல்ல நம் இருதயமும் நிரப்பப்படட்டும்.
இப்படிப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.