Daily Manna 133

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். மத்தேயு 18:20

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும் போது நாம் யாரும் அதைப் பார்த்து பயப்படுவதில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் நாம் கொடுப்பதில்லை .

ஆனால் அவை ஒரு முழு படையாக வரும் போது, வழியில் காணப்படும் எல்லாவிதமான பச்சையான இலைகளையும் விட்டு வைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும் போது செய்து முடித்து விடும்.

பூமியில் சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில் வெட்டுக்கிளிகளைக் குறித்து, ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிகச் சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களை விட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது அரிய பெரிய காரியங்களை செய்ய முடியும்.

பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
இன்று சபைகளில் ஒருமனம் இல்லாதபடியால், சத்துரு வெற்றி மீது வெற்றி எடுத்து கொண்டிருக்கிறான்.

இன்று மெய்யாகவே அநேக சபைகளில் ஜெபக்கூட்டங்கள் பாலைவனமாக போனது . கர்த்தருடைய இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது.

இவ்வாறாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக ஜெபமற்ற தன்மை ஒரு அடையாளமாக இருக்கும் என்பதை லூக்கா 18:8 தெரிவிக்கிறது, இது நாம் வாழும் காலத்தில் ஒரு அடையாளமாக இருக்கிறது,

ஜெபமற்ற தன்மையின் அடையாளம், முழுவதும் இரட்சிப்பின் நம்பிக்கை இல்லாததல்ல. சபைகளில் ஜெபமற்ற தன்மை காணப்படுதலை கூட குறிப்பிடுகிறது
“ஆகிலும் மனுஷகுமாரன் வரும் போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” லூக்கா 18: 8.

ஆண்டவரின் வருகையில் நாம் காணப்பட வேண்டுமானால், ஜெபத்திலும், சபையின் ஊழியங்களிலும் அனைவரும் உண்மையாய் ஈடுபடுவோம். அது நம் வாழ்வில் நாம் எண்ணி பார்க்காத அளவு ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.

வேதத்தில் பார்ப்போம்,

அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒரு மனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 :19.

என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
யாத்திராகமம் 20:24.

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18:20

பிரியமானவர்களே,

நம்முடைய கர்த்தர் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கிறார். எங்கு துதி ஆராதனை இருக்கிறதோ அங்கு அவர் நடுவில் வருவார். அது மட்டுமல்ல, ‘என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’. யாத் 20:24. என்று வாக்கு கொடுக்கிறார்.

நாம் கெம்பீரித்துப் பாடி தேவனைத் துதிக்கும் போது அவர் நம் நடுவில் தங்கியிருப்பது எத்தனை ஆசீர்வாதம்.

குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு, வசனம் தெளிவாய் சொல்கிறது நீங்கள் பூமியில் எதை கட்டுகிறீர்களோ அது பரலோகத்தில் கட்டப்படும். எதை கட்டவிழ்கிறீர்களோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கபடும் என்று.

நீங்கள் குடும்பமாய் ஒருமனப்பட்டு ஜெபத்தில் எதை கேட்கிறீர்களோ அதை பிதாவிடத்தில் இருந்து நிச்சயமாய் பெற்றுக் கொள்வீர்கள். முக்கியமாக கணவன், மனைவி குடும்பத்தில் ஒருமனப்பட்டு கைகோர்த்து ஜெபிக்கும் பொழுது உங்கள் வீடு குட்டி பரலோகமாய் மாறும்.

சாத்தானின் கிரியைகள் அழிக்கப்படும். நீங்கள் எதிர்பார்த்த ஆசீர்வாதம் விரைவாக கிடைக்கும். இதற்கு தேவை எல்லாம் ஒன்றே குடும்பத்தில் யாராவது இரண்டு பேர் ஒருமனப்பட்டால் நீங்கள் கேட்கிற நன்மைகளை ஜோதிகளின் பிதாவிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வீர்கள்.

ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும் போது, உலகத்தையே அசைக்க முடியும். ஆதி திருச்சபை ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஜெபம் பண்ணின போது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது என்று பார்க்கிறோம்.

இன்று நம்மிடையே நிலவுகின்ற சிறு சிறு மன வருத்தங்கள், சிறுசிறு காரியங்கள் நம் சபையின் மூலமாக வர இருக்கின்ற பெரிய எழுப்புதலுக்கு தடையாக இல்லாதபடி ஒருவரையொருவர் மன்னித்து, சபையாக ஒருமனப்படுவோம்.

சத்துருவுக்கு எதிர்த்து நிற்போம். தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குவோம். இந்த கடைசி நாட்களில் ஒருமனமாய் ஒரே இருதயமாய் கர்த்தர் சபையை தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவோம்.

குடும்ப ஜெபம் ஒரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும். “குடும்ப ஜெபம் இல்லாத வீடு, நான்கு சுவரும் இல்லாத வீடு” என பேட்ரிக் ஜோஷ்வா என்ற தேவ மனிதன் கூறுகிறார்.

குடும்ப ஜெபம் செய்ய முடியாதபடி சத்துரு பல தந்திரங்களைக் கொண்டு வருவான். ஆனால் அதை மேற்கொண்டு அனுதினமும் கூடி ஜெபிக்க அர்ப்பணிக்க வேண்டும்.

அன்றைக்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற தேவமனிதர்கள் அக்கினிச் சூளையில் போடப்பட்டாலும் அவர்கள் நடுவிலே நம் ஆண்டவர் உலாவினார். காரணம் அவர்களுடைய ஒருமனப்பாடு.

உங்கள் குடும்பத்தில் ஜெப வாழ்க்கையை கட்டி எழுப்புவீர்களென்றால் ஆண்டவர் உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார். நிச்சயம் நீங்கள் வேண்டிக் கொள்ளுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.

எனவே உங்கள் தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், தொழிலில், படிப்பு, வேலை எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மைய இடத்தை ஒதுக்கிவிடுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவீர்கள்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு அவரின் வருகைக்கு ஆயத்தப்பட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *