you eat the fruit of your labor

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் – You will eat the labor of your hands

பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். யாத்திரை: 23 :8

எனக்கு அன்பானவர்களே!

நீதியின் பாதையில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

“கையூட்டு ( லஞ்சம் ) பெறுவதும் குற்றம், வாங்குவதும் குற்றம்” என்று பல இடங்களில் நாம் பார்த்திருப்போம்.

இவ்வுலகில் நாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமானால், உன் கையின் பிரயாசத்தை நீ சாப்பிடுவது உனக்கு ஆசீர்வாதமாயிருக்கும் சங்கீதம். 128 : 2, என்று வேதம் கூறுகிறது.

ஆனால் மனிதர்களோ பேராசையுள்ளவர்களாயிருந்து மற்றவர்களுடைய கையின் பிரயாசங்களைப் பலவந்தமாக அனுபவிக்க விரும்புவது சாபத்தையே வருவிக்கும்.

‘பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். செம்மையான வழியை விட்டுத் தப்பி நடந்து, அநீதத்தின் கூலியை விரும்பிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்
II பேதுரு 2 : 14, 15 என்றும் எழுதப்பட்டுள்ளது.

பரிதானத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்பது நேர்மையற்ற விதத்தில் செயல்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்வதற்கான ஒரு மெளன உடன்படிக்கை செய்வதாகும்.

வேறு வார்த்தைகளில் கூறின் பரிதானத்தை ஏற்றுக் கொள்கிறவன் பாவம் சம்பாதிக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுக்கும் படியாகப் பிரதான ஆசாரியர் யூதாஸ் காரியோத்துக்குப் பரிதானம் கொடுத்தார்கள் என்று பார்க்கிறோம்.

தவறான வழியில் சம்பாதித்த அந்த ஆதாயத்தை அவன் அனுபவிக்கக் கூடாதவனானது மாத்திரமல்ல. அவனுடைய மரண மும் பயங்கரமானதாயிருந்தது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20, சங்கீதம் 109: 6 – 16 ஆகிய வசனங்கள். அவனுடைய வீட்டாருங்கூட பயங்கரமான சாபங்களை அடைந்தனர் என்றும், அவனுடைய துரோகத்தினிமித்தம் அவர்களுக்குங் கூட இரக்கம் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படுத்துகின்றன.

பரிதானம் வாங்குகிற ஒருவன், கர்த்தராகிய இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காகப் பரிதானம் வாங்கிய யூதாஸ் காரியோத்துக்கும் இடையே யாதொரு வித்தியாசமும் இல்லை என்பது உண்மையிலேயே பயப்படத்தக்க உண்மையாயிருக்கிறது.

அருமையான தேவ பிள்ளைகளே,
உங்கள் மீதோ, உங்கள் அருமையானவர்கள் மீதோ இச்சாபங்கள் வருவதற்கு நீ ஒரு போதும் அனுமதியளிக்காதே. பெரும்பாலும் தீரா நோய்களும், வியாதிகளும், பல்வேறு துக்ககரமான சம்பவங்களும் பரிதானம் வாங்குகிறவர்களின் குடும்பங்களை விட்டு ஒழிவதில்லை என்பது யாவரும் அறிந்த ஓர் இரகசியமாகும்.

எனவே சாபம் நிறைந்து அற்ப சந்தோசத்தை அனுபவிக்க நாம் வகை தேடாமல், ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிவோம்.

வேதம் சொல்கிறது,

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

சங்கீதம்: 128 :1-2

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். என்று.

ஆம், இந்த மேலான பாக்கியத்தை நாம் கைக் கொண்டு வாழும் போது நமக்கும் நமக்கு பின்வரும் சந்ததிக்கும் ஆசீர்வாதம்.

வேதத்தில் பார்ப்போம்,

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
உபாகமம்: 16 :19.
உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
ஆமோஸ்: 5 :12.
இரத்தந்சிந்தும் படிக்குப் பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல்: 22 :12.

பிரியமானவர்களே,

நாம் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் அவருடனே கூட நித்தியமாய் வாசம் பண்ணும் படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவிற் கொள்ளுவோம்.

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
என்று சங்கீதம் :15:1-5 பார்க்கிறோம்.

பரிதானம் உங்கள் கைகளைக் கறைப் படுத்தியிருக்கிறதா? நமக்கு உள்ளவைகளில் நாம் திருப்தியாயிருக்க பழகிக் கொள்ள வேண்டும். ‘உங்கள் ஜீவியங்களைப் பண ஆசைக்கு விலக்கிக் காத்துக் கொண்டு, உங்களுக்கு உள்ளவைகளில் திருப்தியாயிருங்கள்.

ஏனெனில் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தேவன் சொல்லியிருக்கிறாரே’ எபிரேயர்:. 13: 5 . பரலோகத்தில் உங்களுக்குரிய இடத்தைப் ‘பரிதானம்’ திருடிக் கொள்ள நீங்கள் இடங்கொடுக்க. வேண்டாம்.

அன்பார்ந்தவர்களே
நாம் ஒருவேளை இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பு பரிதானம் வாங்கியிருந்தாலும் – அது சிறிய தொகையானாலும் பெரிய தொகையானாலும் – அதற்காக மனஸ்தாபப்பட்டு. மனந்திரும்பி அதைத் திரும்பக் கொடுத்து விட கடனாளிகளாய் இருக்கிறோம்.

‘அதைப் பார்க்கிலும் அதிகமாக கொடுக்கக் கர்த்தரால் கூடும்’
II நாளா. 25:9.
அப்படிச் செய்தால், தேவன் சகல சாபங்களையும் உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் விட்டு அகற்றுவது மாத்திரமல்ல, உம் மனச்சாட்சியுங் கூட குற்றவுணர்வுக்கும், இனி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த பயத்திற்கும் நீங்கலாயிருக்கும்.

தேவன் உங்கள் வாழ்வை பூரண சமாதானத்தால் நிரப்பப்பட்டதாகப் பெரும் ஆசீர்வாதமாக்குவார். நீங்கள் பரிதானமாக வாங்கியிருக்கும் தொகையை, சம்பந்தப்பட்ட நபருக்குத் ஏதோ ஒரு வகையில் திரும்பக் கொடுத்து விடுங்கள்.

அது உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் மிகுந்த ஆசீர்வாதத்தை கொண்டு வரும்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள நம்மை ஒவ்வொரு நாளும் சீரமைத்து கர்த்தருடைய வருகைக்கென்று ஆயத்தமாவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் சமாதானம் நம் யாரோடும் இருந்து நம்மை காத்து வழிநடத்துவதாக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *