Daily Manna 155

கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் எண்ணாகமம்:6:26

எனக்கு அன்பானவர்களே!

சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்திலே ஒரு மனிதன் வந்தான். “என் உள்ளத்திலே சந்தோஷமோ, சமாதானமோ இல்லை; கவலையும், வெறுப்பும் எப்பொழுதும் என் உள்ளத்திலிருக்கிறது; நான் சந்தோஷமாயிருக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்றான்.

மருத்துவர் அவனிடம் “நமது பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் நடைபெறுகிறது; அதில் ஒரு கோமாளி வந்து, எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனைப் பார்த்து, அவன் பேசுவதைக் கேட்டு சிரிக்காதவர்களே இல்லை.

நீயும் அங்கு செல், சில மணி நேரம் உன் கவலையை மறந்து சந்தோஷமாய் இருக்கலாம்” என்று ஆலோசனை கூறினார்.
வந்திருந்த மனிதன் சொன்னான்; “அந்தக் கோமாளியே நான் தான்” என்றார்.

ஆயிரமாயிரமான மக்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துகிறேன். ஆனால் என் வாழ்வில் எந்த சந்தோசமும் இல்லை.
நான் மற்றவர்களுக்கு முன்பாக சந்தோஷமாக நடித்து அவர்களைச் சிரிக்க வைக்கிறேன்,

என் உள்ளத்திலோ சமாதானமற்ற நிலை என்று கூறின போது மருத்துவர் செய்வதறியாது திகைத்தார்.

இன்று உங்கள் நிலையும் இது போன்றதா? வெளியில் சந்தோஷமாயிருப்பது போல் காண்பிக்கிறீர்களா?
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு மத்தியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாய் வாழ்வது போல காண்பிக்கிறீர்களா? . உங்கள் உள்ளத்திலோ நிலையான சமாதானமில்லையா?

பயப்படாதீர்கள், நம் அன்பின் ஆண்டவர் சொல்லுகிறார்.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.

உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” என்று நமது ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுக்கிறார்.
இயேசு யாருக்கு இந்த சமாதானத்தை கொடுப்பார்?
சங்கீதம் 29:11-ல் கூறுகிறது, “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்;
கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.”
அவரே சமாதான காரணராக இவ்வுலகத்திற்கு வந்தார்.

வேதத்தில் பார்ப்போம்

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் :29:11

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.
யோவான்:16:33.

தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக் கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
கொலோசேயர்: 3:15

பிரியமானவர்களே,

“சமாதானம்” என்ற வார்த்தை எத்தனை இனிமையானது. அதைக் கேட்கும் போதே இருதயத்திலே ஒரு ஆறுதல், ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இயேசு கிறிஸ்து, “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

ஒருமுறை சில மிஷனெரிகள், மலைகளிலே வாழுகிற ஆதிவாசிகளைக் கர்த்தரண்டை வழி நடத்தினார்கள். அந்த ஆதிவாசிகளுக்கு வேதம் இல்லை. மொழி பெயர்க்கக் கூடிய அளவு, அவர்கள் மொழியில் போதிய சொல் வளமுமில்லை. அன்பு, சந்தோஷம், சமாதானம், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, எந்த வார்த்தைகளைக் கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தார்கள்.

ஒருநாள் அந்த மிஷனெரி, “சமாதானம்” என்ற வார்த்தையை எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியாமல், ஒரு ஆதிவாசியிடம் அதை விளக்கி பேசிக் கொண்டிருந்தார். இயேசு உள்ளத்தில் வரும் போது நம் கலக்கம், சஞ்சலங்களெல்லாம் நீங்குகிறது. உள்ளம் அமைதியடைகிறது. அதுவே சமாதானம் என்றார்.

பின்பு அந்த ஆதிவாசியிடம் அவர், “சமாதானம்” என்பதற்கு உங்களுடைய மொழியில் ஏதாவது வார்த்தை உண்டா? என்று கேட்டார். அந்த ஆதிவாசி, “சமாதானம்” என்பதற்கு எங்களுடைய பாஷையில் வார்த்தைகளில்லை. ஆனால் “இயேசு உங்கள் இருதயத்தை உட்கார பண்ணுவார், அல்லது அமர்ந்திருக்கப் பண்ணுவார்” என்று மொழிபெயர்த்து விடலாம் என்றான்.

அந்த மிஷனெரி அதை ஆழ்ந்து சிந்தித்தார். சமாதானம் என்பது அமரப் பண்ணுவதாகும். கொந்தளிக்கும் கடலை அமரப் பண்ணுவது போல, கர்த்தர் கொந்தளிக் கும் உள்ளத்தில் சமாதானத்தைக் கொடுத்து, அமரப் பண்ணுகிறார் அல்லவா? ஆகவே, அப்படியே அவர் மொழிபெயர்த்து விட்டார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கை அலைகளினாலும், காற்றுகளினாலும் அலை மோதிக் கொண்டிருக்கிறதா? கர்த்தர் இப்போதே உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தை தருகிறது மாத்திரமல்ல, உங்கள் உள்ளத்தையும் அமரப் பண்ணுகிறவராயிருக்கிறார்.

தேவன் உங்களுக்கு கொடுக்கிற ஈவுகளில் சமாதானமும் ஒன்று. உள்ளத்தில் மட்டுமல்ல, உங்கள் ஆவியிலும், ஆத்துமாவிலும் சமாதானம். அதுவே தேவனுடைய பிள்ளைகளுக்குக் கிறிஸ்து தரும் பெரிய ஈவாகும்.

இந்த மேலான சமாதானத்தை பெற்று என்றென்றுமாய் வாழ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே நம் யாவருக்கும் கிருபையும் சமாதானமும் நிறைவாய் தந்து வழிநடத்துவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *