நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். ரூத் :1:16
எனக்கு அன்பானவர்களே!
நிறைவான நன்மைகளை வாழ்வில் அளிக்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மனஉறுதி அவசியம்! ஏனெனில் அவற்றில், பாடுகள் அதிகம் உண்டு! ஆனால் பின்பற்றினால் நிறைவான பெலனை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை.
ரூத் தன் மாமியாரின் வாழ்வை நன்றாக கவனித்திருந்தால், நிச்சயமாய் பெத்லகேமுக்கு வர துணிந்திருக்க மாட்டாள்.
தன் மாமியாரின் கணவனும் மரித்துப் போனார்! பஞ்சத்தின் நிமித்தம் சாப்பிட கூடிய வழி இல்லாத சூழல்! மோவாபிலும் அவர்கள் ஆசீர்வாதமாக இல்லை .
நகோமி பெற்ற பிள்ளைகளும் பலியானார்கள்! இப்போது நகோமியோ ஒண்டிக் கட்டை! அனைத்தையும் இழந்த பிறகு, எதை நகோமியின் ஆசீர்வாதமாகச் சொல்ல முடியும்?.
அப்படியென்றால் ரூத்தைக் கவர்ந்தது எது? நகோமி தன் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசம் ரூதைக் கவர்ந்தது. எச்சூழலிலும் தேவன் அவர்களை நடத்திய விதம் தான்!
ரூத்தின் கண்கள், எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்ற நகோமியை விட, இழப்பின் மத்தியிலும் ஒவ்வொரு நாளும் அவர்களை ஆறுதல்படுத்தி, வாழ வைத்த தேவன் மேல் இருந்ததே காரணம்!
ரூத் பாடுகளை அனுபவிக்கவே தன் மாமியாருடன் பெத்லகேம் வந்தாள். வந்த பின்னும் கதிர்களை பொறுக்கி தான் நானும் தன் மாமியாரும் உண்ணும் சூழல். ஆனால், அதுவே அவளுக்கு முடிவாக இருக்கவில்லை! அது தான் அவள் வாழ்வின் தொடக்கம்!
போவாஸ் மணவாளனாய் அமைய, ரூத்தின் வாழ்க்கை அழகானது! நகோமியும் தாவீதுக்கு பாட்டியானார். !
பரிசுத்தப் பாதை பாடுகளால் நிறைந்திருக்கும், ஆனால் அது நிரந்தரம் இல்லை. எனவே மகிழ்ச்சியாய் ஓடுவோம்! பலன்கள் வரும் நாட்கள் மிகவும் பக்கத்தில் தான் உண்டு!
வேதத்தில் பார்ப்போம்,
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல் வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
ரூத்: 2:2
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும் படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
ரூத் :3:1
அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
ரூத்: 4:17
பிரியமானவர்களே,
தேவன் நம் ஒவ்வொருவர் வாழ்வைக் குறித்தும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். என்பதை நாம் முதலில் விசுவாசிக்க வேண்டும். அதுவே நம்மைக் குறித்த அவரது சித்தம்.
இங்கு போவாஸ்,ரூத்தை பார்த்து கூறுகின்றார். உன் செய்கைக்குத் தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்
ரூத் :2:12.
இந்த ஆசீர்வாதமான வார்த்தையை ரூத்தைப் பார்த்து போவாஸ் சொல்லுகிறார். ரூத்தின் செய்கைகளையும், அவர் உன்னதமான கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தையும் அறிந்து அப்படிச் சொல்லுகிறார்.
எல்லோருமே ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இது இயற்கை, ஆனால் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவதற்கான செய்கைகள் எல்லோரிடத்திலும் இருப்பது இல்லை.
ஆனால் இந்த ரூத் இதில் விதிவிலக்காகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறார். அந்நாட்களில் இஸ்ரவேலர் அல்லாத பிற தெய்வ வழிபாடு கொண்டவர்களை வேதம் புறஜாதிகள் என்று அழைக்கிறது,
அப்படிப்பட்ட புறஜாதியாகிய மோவாப் பெண் ரூத். உண்மையான தேவன் யார் என்பதை சரியாக அறிந்து கொண்டாள்.அறிந்து கொண்டது மட்டுமல்ல, இளம் வயதில் கணவனை இழந்து விதவையாக இருக்கிறார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவளுடைய மாமியார் நகோமி அவளுடைய தேசத்திலேயே வேறோரு திருமணம் செய்து கொள்ளும் படியாக சொல்லி விட்டு தனது சொந்த தேசமான இஸ்ரேலுக்கு புறப்படுகிறாள்.
ஆனால் ரூத் மோவாப் தேசத்தையும், தன்னுடைய சொந்தங்களையும், உறவுகளையும் விட்டு விட்டு, தனது மாமியாரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்று தனது மாமியாரை பின் தொடர்ந்து வருகிறாள்.
அப்பொழுது நகோமி: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப் போ என்றாள்.
ரூத் தன்னுடைய மாமியாகிய நகோமியிடம் ஏழு காரியங்களைக் கூறினாள். “நான் திரும்பிப் போவதைக் குறித்து பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்;
உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்.”
ஏழாவதும் இறுதியானதும், “மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்”
(ரூத் 1:16-17). இதுவே சித்தத்திற்கான ஒரு ஒப்புக் கொடுத்தல்.
மனுஷனுடைய இச்சைகளின்படி பிழைக்காமல், நகோமி சொன்னபடி திரும்பிப் போகாமல், தேவனுடைய சித்தத்தின்படி பிழைக்கத்தக்கதாக (1பேதுரு.4:2) பெத்லகேம் நோக்கிப் பயணமானாள் ரூத்.
கர்த்தரும், தம்மை நம்பி வந்த பெண்ணை மேசியாவின் வம்சத்தில் ஒருத்தியாக ஏற்று ஆசீர்வதித்தார்.
திரும்பிப் போன ஓர்பாளுக்கு என்னவாயிற்று என நாம் அறியோம்.
இந்த உலகத்தில் எத்தனையோ தெய்வ வழிபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரே தேவன் உண்டு. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
அவரை அறிந்து பின்பற்றும் போது அதுவே நம்முடைய வாழ்வில் நிறைவான பலன்களையும், நன்மைகளையும் கொண்டு வரும். மற்றபடி எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலத்தையுமே கொண்டு வரும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வந்த நமக்கு கர்த்தராலே நிறைவான பலன் கிடைக்கும் என்ற விசுவாச உறுதியில் ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.