உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. நீதிமொழிகள்: 3:9
எனக்கு அன்பானவர்களே!
ஆசீர்வாததத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு போதகர் திடீரென்று ஒரு வீட்டிற்கு மாலையில் வந்தார். சற்று நேரம் பேசி விட்டு அவரை வழியனுப்பி வைக்கும் போது தன்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினார் அவ்வீட்டின் உரிமையாளர்.
அச்சமயம் அவ்வளவு தான் அவருடைய பணப்பையில் (Wallet) இருந்தது. அதை கொடுத்து விட்டார். தன்னிடம் இருந்ததை கொடுத்து விட்டதால் அவரிடம் வேறு பணம் ஏதும் இல்லை.
அவர் சென்ற பின் சாப்பிட என்ன செய்வது…என்று யோசித்தார்.
அப்போது அவரிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போக வேண்டுமென்றால் சற்றே தூரம் தான் செல்ல வேண்டும்.
சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய் வரலாம் என்று சொல்லி “Lucky’s” (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றார்.
அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி அவரிடம் வந்து, “Here.., this is for you” என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்து விட்டு சென்றார்கள். கையை திறந்து பார்த்தால் 30 டாலர் இருந்தது.
ஏறெடுத்து அவர்களைத் தேடிய போது அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும், அதே சமயம் தேவன் மிகவும் பிரியமுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால் உள்ளே அழுகை கலந்த உணர்வும் வந்தது.
ஆம், வேதம் கூறுகிறது, கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று. இதை சொன்னவர் நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்து..
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” லூக்கா: 6:38 என்று வேதம் கூறுகிறது.
அதிகமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கான திறவுகோல் உங்களிடம் இருப்பதை மற்றவருக்கு கொடுப்பதேயாகும்.
இது பணத்தை மாத்திரமல்ல, மற்றவரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும் குறிக்கிறது.
வேதத்தில் பார்ப்போம்,
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
லேவியராகமம்: 27 :30.
ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்;
எபிரேயர்:7 :2.
கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டு வரக்கடவன்.
உபாகமம் :16 :17.
பிரியமானவர்களே,
கொடு என்பது கட்டளை. உதாரத்துவமாய் கொடுங்கள். உங்களால் கூடுமானவரையும் எல்லா நல்ல காரியத்துக்கும் கொடுங்கள். நல்ல நோக்கத்தோடு நம்பி கொடுங்கள்.
இது என் கடமை. மனுஷருக்கு இதனால் ஆசீர்வாதம் கிடைக்கும். என் தேவனுக்கு இதனால் மகிமை வரும் என்று எண்ணிக் கொடுங்கள்.
கொடுக்கப்படும் என்பது வாக்குத்தத்தம். இப்படிச் சொன்னது யார்? சொன்னதை செய்து நிறைவேற்றக் கூடியவர். எப்படியென்றால், அவர் ஐசுவரியமுள்ளவர். சகலத்தையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்.
ஏனெனில் அவர் உண்மையுள்ளவர். நிறைவேற்றக் கூடியவர். உதாரத்துவமாய் கொடுக்கும் எவருக்கும் இப்படி வாக்குக் கொடுக்கப்படுகிறது.
இது உன் ஆத்துமாவுக்கும், உன் சரீரத்துக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றதாயிருக்கிறது. கொடுங்கள் அப்போது அமுக்கி குலுக்கி சரித்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.
சில விதைகளை விதைக்கிறோம். ஆனால் எவ்வளவோ தானியங்களை அறுவடை செய்கிறோம். உன் உதாரகுணம் இயேசுவில் விசுவாசம் வைத்து, அவருடைய நாமத்தை நேசிக்கிறதிலிருந்துப் பிறக்கிறதா?
உங்கள் கரங்களை நீங்கள் திறக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் நீர் தேக்கத்தைப் போல் கட்டப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை நீங்கள் காண்பீர்கள்.
ஆம், “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு நிச்சயம் தண்ணீர் பாய்ச்சப்படும்”
ஆம்,முகமலர்ந்து, உதாரகுணத்துடன் கர்த்தருக்கென்று கொடுப்போம். அதற்கான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு வளமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.