The LORD is a refuge for the oppressed, a stronghold in times of trouble.
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
சங்கீதம் 9 :9.
=========================
எனக்கு அன்பானவர்களே!
நல்ல துணைவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் நெருக்கங்கள் வருவது இயல்பு தான் ! நெருக்கத்தின் மத்தியிலே நாம் மனம் பதறி போய் விடுகிறோம். நம் கூப்பிடுதலைக் கேட்டு, நமக்கு பதில் தரும் தேவன் நம் அருகில் உண்டு என்பதை நாம் மறந்து போய் விடுகிறோம்.
தாவீது அரசனாக இருந்த போதும் சரி, ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போதும் சரி,பல விதமான நெருக்கங்களை அனுபவித்தார்.
ஆனால் அவற்றை எப்போதும் தேவனிடம் தெரிவிக்க மறந்ததே இல்லை! அவருக்கு ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு!
அது, நெருக்கங்களின் மத்தியில், தேவனை நோக்கிக் கூப்பிடுகையில், என் கூப்பிடுதலை அவர் செவிமடுக்கிறார் என்பதே!
நமக்கும் தான்.
மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்;
அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
யோனா 2:1-2. என்றார்.
தேவசித்தத்துக்கு எதிர்ப்பாதையில் ஓடின யோனாவும் நெருக்கமான சூழலை அனுபவித்தார்! ஆனாலும், தேவனை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தார்! கர்த்தர் யோனாவுக்கு பதில் அளித்து விடுவித்தார்! அதனைத் தொடர்ந்து, தேவசித்தம் செய்ய ஓடினார் யோனா!
வேதத்தில் பார்ப்போம்,
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்
சங்கீதம் 142:2.
எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
2 சாமு 22 :7.
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்;
சங்கீதம் 81 :7.
பிரியமானவர்களே,
நீங்கள் கவலையின் மத்தியில் இருக்கிறீர்களா? உங்களுக்கு உதவிச்செய்வார் ஒருவருமில்லை என்று வேதனைப்படுகிறீர்களா? மனம் சோர்ந்து போகாதிருங்கள். நமது அன்பின் தேவன் உங்களுக்கு உதவிச் செய்யும் படி உங்களோடு கூடவே இருக்கிறார்.
நீங்கள் தேவனை நோக்கி கூப்பிடும் போது, அவர் உங்களை எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி, உங்கள் வியாதியை சுகமாக்கி உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.
ஒருவேளை கடினமான சூழ்நிலையிலும் நீங்கள் தொடர்ந்து பிரார்த்தனை ஏறெடுத்திருக்கலாம். இதுவரையிலும் அதற்கான பதில் இல்லாமலிருந்திருக்கலாம். தேவனிடத்தில் சகலமும் இருக்கிறது. அவர் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் பிரச்சினைகள் யாவும் அவருக்குத் தெரியும்.
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் சங்கீதம் 50:15 என்று கூறுகிறார்.
ஆம், நாம் அவரை நோக்கி கூப்பிடும் போது , அவர் நம்மை விடுவிப்பார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட தமது வாழ்க்கையில், நமக்கு மாதிரியாக விளங்கும்படி மேலே கூறப்பட்டபடி,
தமது நெருக்கத்திலே தம்முடைய பிதாவை நோக்கி அபயமிட்டு அவருடைய பெலனால் நிறைந்து, அவருடைய தெய்வீக சித்தத்தை நிறைவேற்றி, “முடிந்தது”
யோவான் 19:30. என்று பார்க்கிறோம்.
தம் வியர்வை, இரத்தமாக சிந்துமளவிற்கு, நெருக்கத்திலே தம் பிதாவை நோக்கி கெஞ்சி மன்றாடினார் எபிரெயர் 5:7;
மத்தேயு 26:38,39
ஆம், பிரியமானவர்களே, நீங்களும் கூட எந்த மனுஷர் மேலும் சார்ந்து கொள்ளாமல், கர்த்தரையே நம்பி, அவரிடமே உங்கள் நெருக்கங்களை பகிர்ந்து ஜெபித்து வேண்டிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
அவர் “ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்”. ஆண்டவர் மட்டுமே உங்களை எல்லா துன்பத்திலிருந்தும் விடுவித்து, தேவ அன்பினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்ப வல்லமையுள்ளவர்
நம் துணையானவராம் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம். அவரே நம் எல்லா இக்கட்டுகளையும் நீக்கி நம்மை விடுவிப்பார்.
நம் தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் நம் யாரோடும் தங்கியிருப்பதாக.
ஆமென்