The reward for humility and fear of the LORD is riches and honor and life

The reward for humility and fear of the LORD is riches and honor and life

பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

லூக்கா: 1:52

*************
அன்பானவர்களே!

தாழ்மையின் அடையாளமாய் இவ்வுலகில் வந்த அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நம்மில் அநேகர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். என் குடும்ப பின்னணி என்னவென்று தெரியுமா? என்று மார்தட்டி பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று தான் கிறிஸ்துவின் பிறப்பு.

இயேசுவின் பிறப்பை மத்தேயு 1ம் அதிகாரத்தில் வாசித்தால், அந்த அட்டவணையில், ரூத், ராகாப் என்ற பெண்கள் இடம் பெறுகிறார்கள். இதில் ரூத் ஒரு மோவாபிய தேசத்து பெண்.
எண்ணாக: 25:1-2 யூதர்களை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் அருவருப்பானவர்கள்

இயேசுவின் பிறப்பில் தெரிந்து கொள்ளப்பட்ட இன்னொரு பெண் ராகாப். இவள் ஒரு வேசி. ஏன் இயேசு அருவெறுப்பான இனத்தையும் பாவம் செய்த பெண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும்?

அண்ட சராசரங்களையும் படைத்த பிதாவின் செல்ல பிள்ளை ஏன் ஒரு ராஜ அரண்மனையில் பிறக்காமல், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் வெறுக்கப்பட்ட மக்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தினார் என்பதே கிறிஸ்து பிறப்பின் மகிமை.

முதல் காரணம் இயேசு தகுதி உள்ளவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. மாறாக தகுதியில்லாதவர்களையும் தகுதிப்படுத்துகிறார். அவர் யாரையும் நியாயம் தீர்க்கவோ, குற்றப்படுத்தவோ இந்த உலகிற்கு வரவில்லை.

பின் ஏன் இந்த உலகிற்கு அவர் வந்தார்?
நம் குற்றங்களை நாம் உணர்ந்து மனம்திரும்பி, இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம் உள்ளத்திலும் பிறப்பார். அப்பொழுது நமக்கு மிகுந்த சந்தோசம் உண்டாகும். ஆம் அவர் நமக்கு சமாதானத்தை கொடுக்கவே வந்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
சங்: 138:6

மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத் தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
நீதி: 29:23

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதி: 22:4

பிரியமானவர்களே,

உள்ளத்தில் பெருமை கொண்ட ஒரு
ஏரோதை போல் இல்லாமல் தன்னை தாழ்த்திய ராகாப் மற்றும் ரூத்தை போன்று இருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் அந்த அருணோதயமாம் இயேசுவானவர் உதிப்பார்.

இயேசு பிறக்க அரண்மனை தேவை இல்லை. அன்பு கொண்ட இதயம் போதும். ஏன் ஏரோது ராஜாவுக்கு மட்டும் இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை?
அவன் மனதில் நான் மட்டுமே பெரியவன் என்று இருந்த பெருமை என்னும் இருள் அந்த வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ள அவனை அனுமதிக்கவில்லை.

தன்னிடத்தில் அத்தனை ராஜ்யமும், தேசமும், ஆளுகையும் இருந்த போதும் அடிமையின் ரூபம் எடுத்த அந்த குழந்தை இயேசுவை கூட கொல்ல திட்டம் தீட்டினான். விளைவு அவன் ராஜாவாக இருந்தும் அவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.

ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு இடம் ஏது? அன்பின் உருவமாம் இயேசு அடிமையின் ரூபத்தில் உதித்த பின் அன்பே இல்லாமல் அரண்மனையில் வாழ்ந்த ஏரோதிற்கு என்ன வேலை?
அடிமையின் ரூபத்தில் வந்தாலும் இயேசுவினிடத்தில் அன்பு ஒன்று இருந்ததால் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார்.

இந்த நன்னாளில் அன்பு உங்கள் இருதயங்களை ஆளட்டும்.பெருமையை விடுத்து, தாழ்மை என்னும் எண்ணெயை ஊற்றி அன்பு என்னும் விளக்கை ஏற்றுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். நீங்களும் உலகத்திற்கு ஒளியாக திகழ்வீர்கள்.

இந்த நல்ல நாளில் மகிழ்ச்சியும், சமாதானமும் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் கரைபுரண்டு ஓடட்டும். நான் சாந்தமும்,மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

ஆம், இயேசு கூறிய மனத்தாழ்மையை நாமும் தரித்துக் கொள்வோம். வளமாய் வாழுவோம்.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *