Daily Manna 38

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். லூக்கா 23:46

எனக்கு அன்பானவர்களே!

பாடுபடும் தாசனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இயேசு சிலுவையில் இருந்த போது பேசிய முதலாவது வார்த்தையில் “பிதாவே” என்று ஆரம்பித்தவர்
கடைசி வார்த்தையிலும் “பிதாவே” என்றார். இது “ஒப்புவிப்பை” காட்டுகிறது. பாவங்களை ஏற்றுக் கொண்டு அதற்கான தண்டனையை அனுபவித்த போது “தேவனே” என்றார்.

தண்டனையை ஏற்று முடிந்ததும் மீண்டும் பிதா குமாரன் உறவுக்குள் வருகிறார். மரண வேளையிலிருக்கும் அநேகர் தங்களுக்கு அருகிலிருப்போர், அல்லது நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்பத்தார்களிடம் தங்கள் கடைசி ஆவலை ஒப்புவிப்பதைப் பார்க்கிறோம்.

பொதுவாக மனிதனுடைய மரண வேளையில் வரவரசத்தம் குறைந்து நிறைவு பெறும். *ஆனால்* *இரட்சகரோ* *மகா* *சத்தமாய்* *பேசி*
*மரிக்கிறார்* .

வேதத்தில் ஸ்தேவான் என்பவரும் ஆவியில் வைராக்கியங் கொண்டு யூதருடைய் பாவங்களை கண்டித்துப்
பேசின பொழுது அவர்கள் மூர்க்கங் கொண்டு அவரை கல்லெறிந்தார்கள்.
அப்பொழுது “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்” என்றும், “ஆண்டவரே இவர்கள் மேல் இந்த பாவத்தைச் சுமத்தாதிரும்” என்று சொல்லி தன் ஆவியை விட்டார்.

முதலாம் எலிசபெத் மகாராணி தன் மரிக்கும் போது, “ஐயோ நான் இவ்வளவு ஆஸ்திகளையும், பதவிகளையும் விட்டு மரிக்கப் போகிறேனே என்று அலறி மரித்தாள்.

ஹாப்ஸ் என்பவர் நான் காரிருளுக்குள் போகிறேன், என்னுடைய சரீரத்தைப் புழுக்கள் அரிக்கும், ஆனால் என் ஆத்துமாவிற்கு என்ன நேரிடுமோ, ஒரு வேளை தேவன் ஏற்றுக் கொள்ளுவார் ” என்று நிச்சயமற்றவராய் பேசி மரித்தார்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய மரணம் எவ்வளவு வேதனைக்குரியது என்று பாருங்கள்.

ஆனால் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுடைய மரணமோ முற்றிலும் வித்தியாசமானது

வேதத்தில் பார்ப்போம்,

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக் கொண்டீர்.
சங்கீதம் 31:5

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின் மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை, மரண நாளின் மேலும் அவனுக்கு அதிகாரமில்லை, அந்தப் போருக்கு நீங்கிப் போவதுமில்லை,
பிரசங்கி 8:8

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
லூக்கா 23 :46

பிரியமானவர்களே,

மார்ட்டின் லூத்தர் “பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை
ஒப்புவிக்கிறேன்” என்று சொல்லி மரித்தார்.

வெஸ்லி என்ற போதகர் தான் மரிக்கும் போது எல்லாவற்றிலும் மேலான காரியம் தேவன் நம்மோடிருக்கிறார்” என்றார்.

டி எல்.மூடி “உலகம் கடந்து போகிறது. பரலோகம் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இது என் முடிசூட்டு விழாவின் நாள்” என்றார்.

யோவான் 10:17 18-ம் வசனம் இப்படி கூறுகின்றது நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதை கொடுக்கிற படியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான்; நானே அதை கொடுக்கிறேன் அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் அதிகாரம் உண்டு.

ஆகவே இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனும் தன் ஆவி பிரிவதை அறியான். ஒரு வேளை நான் மரிக்கப் போகின்றேன் என்பதனை ஒருவன் உணரலாம். ஆனால் அது எப்பொழுது என்பதும், எந்தக் கணப்பொழுதில் என்பதும் அவனுக்கு தெரியாது. ஏனெனில் தேவன் தான் ஜீவனைத் தருகின்றவர். அவரே அதை மீண்டும் எடுத்துக் கொள்கின்றார்.

ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்ற படியினால் தன் ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக் கொடுத்தார் என்பதனை இங்கு காண்கிறோம். இயேசுவிற்கு எத்தனையோ விதமான தண்டணைகளை, ஆக்கினைகளை அன்று கொடுத்தார்கள்.

ஆனால் யாராலும் அவரின் உயிரை எடுக்க முடியவில்லை. ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் அதிகாரம் உண்டு, என அவர் சொன்ன வார்த்தையின் பிரகாரம் பிதாவின் கரத்திலே
தன்னுடைய ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகள் திறந்தது நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. இதிலே முக்கியமாய் கூறப்போனால் நூற்றுக்கு அதிபதியும் அவனோடே கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும் நடந்த சம்பவங்களை கண்டு இவர் மெய்யாய் தேவனுடைய குமாரன் என அறிக்கை செய்தார்கள்.

ஆம்,நம்மை குறித்தும், நம்முடைய வாழ்வை குறித்தும் மற்றவர்கள் எப்படிப்பட்ட அறிக்கை செய்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டவர்கள்

அப்படிப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ்ந்து, பரனோடு என்றென்றும் அரசாள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *