இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். மத்தேயு 19 :26
எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஏழை பெண் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். அவள் தேவனை எல்லாக் காரியங்களிலும் முழுவதுமாக நம்பினாள். ஆண்டவருடைய வார்த்தை எதுவோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வாள்.
ஒருநாள் அவளுடைய சிறு குழந்தை வியாதிப்பட்டது. இந்த வியாதி சுகம் ஆகுமா? ஆகாதா? என்கிற சந்தேகம் மருத்துவர்களுக்கு வந்தது. மருத்துவர்களுக்கு உடனே ஐஸ்கட்டி தேவைப்பட்டது. அவள் இருந்ததோ கிராமம். பெரிய நகரங்களில் தான் ஐஸ்கட்டி கிடைக்கும். என்ன செய்வதென அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
தன் போதகரிடம் சென்று ,எனக்கு பனிக்கட்டி அனுப்புமாறு நான் தேவனிடம் கேட்கப் போகிறேன் என்றாள். ஐயோ ,நீ அப்படியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது” என்றார் ஒருவர். “ஏன் எதிர்பார்க்கக் கூடாது? “என்ற கேள்வி விசுவாசியிடமிருந்து திரும்பி வந்தது.
“கர்த்தருக்கு எல்லா வல்லமையும் உண்டு.அவர் என்னிடத்தில் மிகவும் அன்பு வைத்திருக்கிறார். அவருடைய அன்பில் எந்த குறையும் இல்லை.
எங்கள் போதகரும் எங்களுக்கு அப்படித் தான் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். நான் கேட்கப் போகிறேன்; அவர் நிச்சயம் எனக்கு தருவார்” என்றாள்.
அவள் போய் ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பித்தாள்.
தேவன் அவளுக்கு பதில் கொடுத்தார். பலத்த காற்று வீசியது, இடி முழக்கத்தோடு கல் மழை பெய்தது. வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.
வானத்தில் இருந்து விழுந்த அந்த ஐஸ் கட்டிகளை போதுமான அளவுக்கு சேகரித்தாள். அந்த ஐஸ் கட்டியை வைத்து தன் குழந்தைக்கு ஒத்தடம் கொடுத்தாள். ஆண்டவரின் கிருபையால் குழந்தை பிழைத்துக் கொண்டது.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்க்கையிலும் தேவனை விட்டு விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆண்டவரிடத்தில் விசுவாசமாயிருக்கிற வர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.
நாம் வெட்கப்படக் கூடிய சூழ்நிலையை நம் அருமை இரட்சகர் ஒரு போதும் நமக்கு உருவாக்குவதில்லை. நாம் அவரை நம்பினால் அதன் பலனை நாம் வாழ்வில் நிச்சயம் காணலாம்.
வேதத்தில் பார்ப்போம்,
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9 :23.
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
லூக்கா 1: 37.
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
எரேமியா 32:27.
பிரியமானவர்களே,
நாம் அநேக நன்மைகளை நம் ஆண்டவரிடம் இருந்து பெற்றும், அவருடைய பிள்ளைகளாய் வாழ்ந்தும்,அநேக வேளைகளில் கிறிஸ்துவை விசுவாசியாமல் மறுதலிக்கிறவர்களாய் காணப்படுகிறோம் அல்லவா?
இது நடக்குமோ? நடக்காதோ? என்ற அவிசுவாசமான சிந்தை நமக்குள் பல நேரங்களில் காணப்படுகிறது அல்லவா?. ஆனால் வேதம் இப்படி சொல்லுகிறது விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று.
அன்பானவர்களே,
இந்த உலகத்தில் எத்தனையோ மருத்துவ வசதிகள் இருக்கலாம், பல துறைகளில் மருத்துவர்கள் திறமையுள்ளவர்களாக செயல்படலாம், இருந்தும் அனேகர் கைவிடப்படுகிறார்கள்.
இனி நீ பிழைக்க வழியே இல்லை , எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லி விடுவார்கள், உன் வியாதி மாறாது, உன் வாழ்க்கை முடியப் போகிறது என்றெல்லாம் மனிதர்கள் சொல்லுவார்கள்.
இன்று உங்கள் வாழ்க்கையை விசுவாசத்தோடு தேவனிடத்தில் ஒப்புக் கொடுங்கள்.
அவரே நமக்கு நல்ல பரிகாரி. அவருடைய தழும்புகளால் சுகமாவீர்கள். அவர் செட்டைகளின் கீழ்வருகிற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பும், அடைக்கலமும் உண்டு.
எந்த உலகத்தினர்களாலும் மருத்துவர்களினாலும் செய்யக் கூடாதை, என் தேவனால் மாத்திரமே செய்யக் கூடும்.
அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் உங்கள் துக்கங்கள், கண்ணீர்கள், கடன் பிரச்சனைகள், வியாதிகள், வேதனைகள் எல்லாம் உங்களை விட்டு மாறி போய் விடும்.
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் வியாதியாய் படுத்திருக்கும் போது ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள். அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான் என்று விசுவாசத்தோடு மன்றாடினான். அதே வேளையில் அவன் வேலைக்காரன் சுகமனான்.
நாம் தேவனிடத்திலே விசுவாசத்தோடு எவைகளைக் கேட்டாலும் நமக்கு கொடுக்கிற கர்த்தர். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும், என்று
மத்தேயு 7:7 -ல் கூறுகிறார்.
இந்த பரிசுத்த ஓய்வு நாளில் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு உங்களை ஒப்புக் கொடுத்து உங்கள் தேவைகளை கேளுங்கள். உங்கள் சகல கட்டுகளும் வியாதிகளும் மறைந்து போகும்.
பரம வைத்தியராம் நம் இயேசு கிறிஸ்து நம்மை சுகத்தோடும், பலத்தோடும் சகல ஆசீர்வாதங்களோடும், இவ்வுலகில் வாழ கிருபை செய்வார்.
ஆமென்.