மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள். மத்தேயு :14:33.
மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு :14:33.
=========================
எனக்கு அன்பானவர்களே!
தாழ்மையின் ரூபமாக இவ்வுலகில் வந்து நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மனிதன் தனித்துவமாக சிறந்து விளங்கி தன்னிலை தாழாது, எப்போதும் அனைவராலும் விரும்பப்படுபவனாக இருக்க வேண்டுமானால்,
அவன் ஐந்து ஒழுக்க நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சான்றோர் கூறுவர். சான்றோர்களால் என்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த ஐந்து குணங்கள் பணிவு, உண்மை, தூய்மை, நேர்மை, இரக்கம். இவை ஐந்தும் ஐந்து விரல்களைப் போன்றவை.
ஒரு முறை கையின் விரல்களுக்குள் சண்டை வந்து விட்டது. அவற்றில் யார் பெரியவர் என்று தகராறு முற்றியது. கட்டைவிரல் சொன்னது, நான் குட்டையாக இருந்தாலும், முக்கியமானவன், நான் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது, என்று ஆணவத்துடன் கூறியது.
வெற்றிக்கு என்னைத் தான் உயர்த்திக் காட்டுக்கிறார்கள் என்றும் பெருமையாகப் பேசியது.
ஆள்காட்டி விரல், நான் தான் தீர்மானம் செய்வேன், நான் காட்டும் திசையில் தான் மற்றவர்கள் செல்ல வேண்டும், நான் தான் பிறரை ஆட்டிப் படைப்பவன்.
என்றது.
இதையெல்லாம் பார்த்து சிரித்த நடுவிரல், நான் உங்களையெல்லாம் விட உயரமானவன், அது மட்டுமல்ல, நான் நடுநாயகமாக இருக்கிறேன். முக்கியஸ்தர்கள் எப்போதும் நடுநாயகமாக வீற்றிருப்பார்கள், ஆகவே, நானே முக்கியம் என்று கர்வத்துடன் பேசியது.
மோதிர விரல் இதைக் கேட்டு சிரித்தது. நீங்கள் எல்லாம் வீணாய் போனவர்கள். நான் மட்டும் பணக்காரன், மனிதர்கள் எனக்குத் தான் ராஜ மரியாதை கொடுப்பார்கள். தங்கம், வைரம் மற்றும் ரத்தினங்கள் பதித்த தங்க மோதிரங்களை என் மீது அணிவித்துத் தான் அழகு பார்ப்பார்கள் என்று அகங்காரத்துடன் கூறியது.
இவையெல்லாம், தங்கள் பெருமையை பறைசாற்றி விட்டு சுண்டு விரலை ஆணவத்துடன் பார்த்தன. ஆனால், சுண்டு விரல் தான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லையே என்று, பணிந்து நின்று அவர்களேயே விழிக்க, விழிக்க பார்த்தது.
மற்ற விரல்கள் அதைப் பார்த்து கேலி செய்து சிரித்தன. சுண்டு விரலுக்கு துக்கம் தொண்டையை அடைத்து, அழ ஆரம்பித்து விட்டது. பின்னர், இறைவனிடம் சென்று, ஏன் என்னை படைத்தாய், நான் எதற்கும் பயன் இல்லாமல் இருக்கிறேனே என்றது.
இறைவன், சிரித்தபடி, “அன்பான சுண்டுவிரலே, நீ ஒன்றும் சாதாரண விரல் அல்ல, பணிவான விரல். மக்கள் திருக்கோவிலுக்கு வருகிறார்கள். என் முன்னால் நின்று என்னைப் பார்த்து கும்பிடுகிறார்கள். அப்போது என் பார்வை முதலில் உன் மீது தான் விழுகிறது.
முதலில் உன்னை பார்த்து விட்டுத் தான் மற்ற பாகங்களைப் பார்க்கிறேன். உண்மையில் நான் உன்னைத்தான் முழுமையாகப் பார்க்கிறேன். மற்ற விரல்கள் என் கண்ணுக்குத் தெரிவதில்லை. நீ தான் என் அருகில் இருக்கிறாய்’ என்றார்.
“அது மட்டுமா, மனிதர்கள் எண்களை எண்ணும் போதும் கூட உன்னிடமிருந்து தானே தொடங்குகிறார்கள், அதனால் நீ தான் முதல்வன், வருந்தாதே, என்றும் எப்போதும் போல் பணிவாக இரு’ என்றார். அதைக் கேட்டு சுண்டு விரல் மகிழ்ந்தது.
ஆம், தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் பணிவு பிறக்கிறது
வேதத்தில் பார்ப்போம்,
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம்:99:5.
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
சங்கீதம்: 132 :7.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங்கீதம்: 95 :6.
பிரியமானவர்களே,
பணிவு எனப்படும் பண்பு இன்று கரைந்து வருகிறது. இதனால் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, தற்பெருமை வளர்ந்து வெறுப்புணர்ச்சியே உறவுகளிடையே வளர்ந்து கொண்டு வருகிறது.
ஒரு காலத்தில் வாய்மையே சான்றோர்களின் வாய்ச் சொல்லாக இருந்ததால் அது என்றும் வென்றது. உண்மையே அறிஞர்களின் உறைவிடமாக இருந்ததால் அது என்றும் நிலைத்தது.
பணிவே ஆன்றோர்களின் பண்பாக இருந்ததால் அது என்றும் உயர்ந்தது. “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வத் தகைத்து’ என்கிறார் வள்ளுவர்.
பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, நடிப்போ, தந்திரமோ கிடையாது. அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவையாகும்.
பிறரை புண்படுத்தாமல் பேசாமலிருப்பதும், மற்றவர்கள் சொல் கேட்டு புரிந்து, மதித்து நடப்பதும், விட்டுக் கொடுப்பதும் பணிவின் அடையாளங்களே.
தற்பெருமை கொண்டவனிடம் எப்போதும் பணிவை எதிர்பார்க்க முடியாது.
ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் தான் பணிவு. தனக்கு தனிப் பெருமை தருபவன் ஆணவத்தை வளர்க்கிறான். தன்னை அனைத்திலும் ஐக்கியப்படுத்துபவன் பணிவுடையவனாகிறான்.
தாழ்ந்த நிலத்தில் தான் தண்ணீர் ஓடி நிற்கும். பணிவுடையார் உள்ளத்தில் தான் அருள் வெள்ளம் பாய்ந்து நிற்கும்.
பணிவு எளிதில் வராது. பணிவு வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த குணமாகும்.
முற்றிய கதிர்மணிகளுடைய செந் நெற்பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல் போல, நிறைந்த அறிவும், ஆற்றலும் உடையவர்கள் பணிந்து போவர். அது கோழைத்தனமன்று, குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி
பழங்கள் இருக்கும் கிளை எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளைந்து இருக்கும். நீங்கள் பெருமை அடைய வேண்டுமானால் எப்போதும் அடக்கத்துடனும், பணிவுடனும் இருங்கள்’.
பணிவு என்பது அடிமையின் குணமல்ல, தாழ்மையின் சின்னமுமல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி.
குடும்ப உறுப்பினர்கள் பெரியவர்களிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், மாணவர்கள் ஆசிரியர்களிடமும், எப்போதும் பணிவாக இருந்தால் தான் அவர்களிடையேயான உறவு முறை சிறக்கும், ஒற்றுமை மேலோங்கும், வாழ்வு செம்மையுறும்.
பணிவு என்பது ஒருவரின் முன்னேற்றத்திற்கான முதல் படி.ஆகவே இந்த பணிவை நாமும் பின்பற்றி தாழ்மையின் ரூபமாக வந்த இயேசுவுக்கு பிரியமாய் வாழுவோம்.
இத்தகைய நற்குணங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.