கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், சங்கீதம்:138 :6
எனக்கு அன்பானவர்களே!
நாம் தாழ்மையில் இருக்கும் போது, நம்மை நினைத்தருளி, நமக்கு உயர்வை தருகின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தாழ்மை, தவறுக்கு மனம் வருந்துதல் போன்ற நற்குணங்கள் உள்ளவர்களை இவ்வுலகில் பார்ப்பது மிகவும் அரிது.
ஆனால் வேதத்தில் இவ்விரண்டு குணங்களையும் உடைய ஒருவரைப் பற்றி இன்றைய தினத்தில் தியானிப்போம்.
சவுல், தாவீது இந்த இரண்டு பேர்களையும் எடுத்துக் கொள்ளுவோம்.சவுல் செய்த தவறைப் பார்க்கிலும் தாவீது செய்த பாவம் மிகப் பெரியது.
அப்படி என்ன தவறு செய்தார்? *சவுல்* கொள்ளையின் மேல் ஆசை வைத்து ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளையை மீறினார்.ஆனால் *தாவீதோ* *இன்னொருவனுடைய* *மனைவியைக்* *எடுத்துக் கொண்டு* *அந்தப்* *பெண்ணை* *அடைவதற்காக* *அவளது* *கணவனையும்* *திட்டமிட்டுக்* *கொன்றார்* .
தாவீது செய்தது பயங்கரமான பாவமா கும்.
தாவீதுக்கும், சவுலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சவுல் தான் செய்த சிறிய தவறை உணரவோ, ஒத்துக் கொள்ளவோ மறுத்துப் போனான். ஆனால் *தாவீதோ* தான் செய்த தவறை உணர்ந்து அதை ஒத்துக் கொண்டு, ஆண்டவர் பாதத்தில் விழுந்து அறிக்கையிட்டான்.
இந்த இருவரது முடிவுகளும் நேர்மாறாக இருந்தது. *சவுல்* ஆண்டவரால் கைவிடப்பட்டவனாக யுத்தகளத்தில் சாகடிக்கப்பட்டான். *தாவீதோ* ஆண்டவரது இருதயத்திற்கு ஏற்றவனாக ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்து முடித்தான்.
ஆம், தாழ்மை உள்ளவர்களுக்கு தான் கிருபை கிடைக்கும்.
வேதத்தில் பார்ப்போம்,
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதிமொழி:22 :4
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு:4 :10
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத் தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
நீதிமொழி:29 :23
பிரியமானவர்களே,
விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளரின் முதல் வேலை என்ன?
டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி-விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களைக் (Coach) கேட்டுப் பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதற்கு அவர்கள் எடுக்கும் முதல்படி – ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தவறுகள், குறைகள், பெலவீனங்கள் என்ன என்பதைத் தான் முதலாவது அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள்.
அதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவிப்பார்கள். அதை ஏற்றுக் கொண்டு, தன்னை திருத்திக் கொள்பவர்கள் சிறந்த வீரர்கள் ஆவார்கள்.
அதைப் போலவே நாமும்
நமது தவறுகளை, நாம் அடையாளம் கண்டு அந்தக் குறைகளை களைய முயற்சிப்பது நமது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக நாம் எடுத்து வைக்கும் முதல்படி என்று சொன்னால் மிகையாகாது.
ராஜாவாகிய சவுல் தன்னைத் தானே உயர்த்திய போது தன் மேல் இருந்த பரிசுத்த அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்துப் போனான்.
இதனால் தன் ஆயுதத்தால் தான் மரித்துப்போக அங்கலாயித்தான். ஆம், பெருமை உள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரது சமூகத்திற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரே, என்ன ஆராய்ந்து பாரும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று சோதித்துப் பார்த்து ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கிற தவறுகளை, பெலவீனங்களை அகற்றிப் போடும் என்று ஒப்புக்கொடுக்க முன் வர வேண்டும்.
தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.
நாமும் நமது வாழ்க்கையில் தாழ்மையைத் தரித்துக் கொண்டு, கர்த்தர் தருகிற உயர்வுகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்