இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார். ஏசாயா 50:4
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்.
ஏசாயா 50:4
எனக்கு அன்பானவர்களே,
நல்வார்த்தைகளை நமக்கு அருள் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு சமயம் நடுக்கடலில் போய்க் கொண்டிருந்த ஒரு கப்பலில் குடிதண்ணீர் முற்றிலும் தீர்ந்து விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கப்பலில் இருந்த மக்கள் தடுமாறி நின்றனர்.
காரணம், கப்பலைச் சுற்றியிருந்தது உப்பு தண்ணீர் நிறைந்த ஆழ்கடல். எனவே, கப்பல் தலைவன் திகிலினால் நிறைந்து, தங்களுக்கு உதவுமாறு, அருகிலிருந்த எல்லாக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பினான்.
அப்பொழுது ஒரு குறிப்பிட்ட கப்பலிலிருந்து கீழ்க்கண்ட மறுசெய்தி வந்தது: (உங்கள் கப்பல் நிற்கும் இடத்திலேயே வாளிகளை தண்ணீருக்குள் இறக்கி மொண்டு கொள்ளுங்கள் என்று அனுப்பினார் ).
இந்த அறிவுரை கப்பல் தலைவனுக்கு ஆச்சரியமாக இருந்த பொழுதிலும், வாளிகளை அந்த இடத்திலுள்ள கடல் தண்ணீருக்குள் இறக்கி தண்ணீரை சேகரிக்குமாறு கட்டளையிட்டான்.
அந்த தண்ணீரை சிறிது நாவில் வைத்து ருசி பார்த்த பொழுது அவன் பிரமிப்படைந்தான். காரணம், அது அத்தனை ருசியான தண்ணீராக இருந்தது.
அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு நல்ல நீரோடை ஓடிக் கொண்டிருந்ததினால் அங்கு மட்டும் நல்ல குடிதண்ணீர் கிடைக்கும் என்ற அடுத்த கப்பலின் மாலுமி நன்கு அறிந்திருந்தார்;
எனவே அந்த “நல்வார்த்தையை” அனுப்பினார். அந்த கப்பலிலுள்ள மக்களுடைய கவலை மறைந்தது! முகங்கள் மலர்ந்து மகிழ்ந்தனர்!
இவ்வுலக வாழ்க்கையிலும் நாம் சரியான திசையில் முன்னேறிச் செல்ல நமக்கு தெய்வீக ஆலோசனையோ அல்லது நல்ல வழிகாட்டியோ தேவை. நமது நல்ல வழிகாட்டியாக கர்த்தரை நாம் கொண்டிருக்கும் போது எந்த குறைவும் நமக்கு நேரிடாது.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷனுக்குத் தன் வாய் மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
நீதிமொழிகள்:15 :23.
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானம்.
நீதிமொழிகள்:25 :11
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
சங்கீதம் :119:103
பிரியமானவர்களே,
ஒரு சாதாரண தட்டில் வைக்கப்பட்டிருக்கிற பழங்களுக்கும், வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருக்கிற பொற் பழங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு.
சாதாரண தட்டில் வைக்கப்பட்டிருக்கிற பழங்களைப் பார்க்கிலும் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்டிருக்கிற பொற்பழங்களை எல்லாரும் விரும்புவார்கள்.
அதே போலத் தான் நாம் பிறருக்கு கொடுக்கின்றதான ஆலோசனைகளும், புத்திமதிகளும் ஏற்ற சமயத்தில், ஏற்ற காலத்தில் கொடுக்கப்படுகின்றதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு ஏற்ற சமயத்தில் சொன்ன புத்திமதிகளை, ஆலோசனைகளை இங்கே சாலமோன் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானமாக கூறுகின்றார்.
மோசேயின் மாமனாகிய எத்திரோ, ஏராளமான இஸ்ரவேலரை எவ்வாறு நியாயம் விசாரிப்பது என்று மோசேக்கு அறிவுரை வழங்கினார் (யாத்திராகமம் 18:21,22).
இந்த அறிவுரை தேவனுடைய அழைப்பை நிறைவேற்றும்படிக்கு, மோசேக்கு மிகவும் உதவியாயிருந்தது.
அதேப் போல், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், நீங்கள் சரியான திசையில் முன்னேற உங்களுக்கும் தெய்வீக ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் தேவை.
இந்த மேலான வழிகாட்டுதலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு தந்து வழிநடத்துவாராக.
ஆமென்