Daily Manna 195

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். நீதிமொழிகள்:22:29.

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள்:22:29.
=========================
எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

கடற்கரை ஓரம் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம். பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள்.

எண்ணையால் எரியும் விளக்கு அது. கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள்.

காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார். “தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணெய் இல்லை. குளிர் நடுங்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய்.

கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார். மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணெய் கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் ஒரு வழிப்போக்கன் “அண்ணே! மிகவும் முக்கியமான வேலையாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இரக்கமாகப் பேசினான்.

இப்படி ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு காரணம் சொல்லி கேட்க காப்பாளனும் எண்ணெய் கொடுத்தனுப்பினான். வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும்.

காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணெய் நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான்.

எல்லோரும் இப்போது எங்களிடம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

சிலருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், இரண்டு கப்பல்கள் மூழ்கி அநேகர் உயிர் இறப்பதற்கு காரணமானான்.

பிரியமானவர்களே,
கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது, கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதே. கொஞ்சத்தில் நாம் உண்மையாய் இருந்தால், அதற்கு அவர் தரும் பலன் மிகவும் பெரியதாகும்.

அதற்கு நாம் கொஞ்சம் மாத்திரம் உண்மையிருந்தால் போதும் என்று அர்த்தமில்லை. நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கொஞ்ச காரியத்தில் நாம் கர்த்தருக்கு உண்மையாயிருந்தால், நிச்சயம் அவர் நம்மை அநேகத்திற்கு அதிபதியாய் மாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
நீதிமொழிகள்: 18 :9.

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
லூக்கா: 16 :10.

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு 25 :23.

பிரியமானவர்களே,

நம்மில் பலர் தர்மம் பண்ணுகிறேன் என்று தனது தேவைக்கு கூட இல்லாமல் அடுத்தவருக்கு கொடுப்பது என்பது ஏமாளித்தனம்.
முதலில் தனது தேவைகளும், தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்து விட்டு அதன் பின் அடுத்தவரைப் பற்றி யோசிப்பது தான் உண்மையும் சிறந்ததுமாகும்.

அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .
தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன் பின் தானம் செய்யும் நிலையை இழப்பான். பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்.

அப்படிப்பட்ட நிலையில் ஏமாற்றமும்
வேதனையும் தான் மிஞ்சும்.ஆகவே தானமும் தர்மமும் அவசியமாக இருந்தாலும் தன் சூழ்நிலை, செலவுகளை கருத்தில் கொண்டு மீதமுள்ளதை கட்டாயம் தான தர்மம் செய்திட வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இங்கு மிகப்பெரிய ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்விதமாக இருப்போம் என்பதைக் குறித்து இயேசு கிறிஸ்து மிகச் சிறிய ஒரு அளவுகோலைக் கொண்டு பேசும் சத்தியத்தை இங்கு பார்க்கிறோம்.

அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களில் நான் உண்மையாக இருப்பேன் என்று சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் கொஞ்சத்தைக் குறித்துப் பேசுகிறார்.

கொஞ்சத்தில் நம் வாழ்க்கையில் கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவாதத்தை , எந்த அளவுக்கு உண்மையாக நிறைவேற்றுகிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார்.

ஒருவேளை இன்றைய வாழ்க்கையில் ஆண்டவர் மிகச்சிறிய ஒரு பொறுப்பை உங்களுடைய வாழ்க்கையில் கொடுத்திருப்பாரானால், அதை உண்மையாய் நிறைவேற்றுங்கள்.

அந்த காரியத்தில் உங்களை ஆசீர்வதித்து, பெரிய காரியத்தை உங்களுக்குக் கொடுப்பார்.

அதேவிதமாக உங்களுடைய ஊழியத்திலும் ஆண்டவர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பையும், சிறிய ஆவிக்குரிய உத்தரவாதத்தையும், இது சிறியது என்று எண்ணி நீங்கள் அலட்சியப்படுத்தாமல், இதை ஆண்டவருக்கென்று நான் செய்கிறேன் என்று உள்ளான இருதயத்தின் நிலையோடு நீங்கள் செய்யுங்கள்.

அப்பொழுது ஆண்டவர் உங்களை பிற்காலங்களில் பெரிய காரியத்திற்கு பொறுப்பாளியாக நியமிப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எந்த வேலையிலும் நாம் எவ்விதமாக இருக்கிறோம் என்பதை முதலாவது ஆண்டவர் நம்மை சோதித்தறிந்து, பிறகு பெரிய காரியத்திற்காக நம்மைத் தெரிந்து கொள்ளுகிறார்.

நாமும் நமது பொறுப்புகளில், ஊழியத்தில், வேலையில் உண்மையுள்ளவர்களாயிருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *