மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மத்தேயு :16 :16
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மத்தேயு :16 :16.
==========================
எனக்கு அன்பானவர்களே!
மேலான வாழ்வை அருள் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மறுமை வாழ்வை பற்றி நினையாத இந்த உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சாத்தானை நிபந்தனையின்றி மனதார நேசிக்கும் ஒரு மனிதனை இந்த பூமியில் பார்த்திருக்கிறீர்களா? இருக்கவே முடியாது.
அல்லவா?
அவன் ஒரு மனிதனிடத்தில் வந்து ”நான் தான் சாத்தான்…என்னை வணங்கு!” என்று சொன்னால் ஒருவரும் ஒரு போதும் அவனை வணங்க மாட்டார்கள் என்பது பிசாசுக்கும் நன்றாகத் தெரியும்.
எனவே தான் நாம் நம்பத்தக்கதான, விரும்பத்தக்கதான ஒன்றை முன்னிறுத்தி அதை நாம் பற்றிக் கொள்ளும்படி செய்து நம்மை வஞ்சிக்கிறான்.
ஏதேனில் உயர்ந்த ஆவிக்குரிய நிலையில் தேவனோடு இதயப்பூர்வமான உறவு கொண்டு வாழ்ந்த மனிதன் தன் பாவத்தின் விளைவாக வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் வியர்வை சிந்திப் பாடுபடவேண்டிய நிர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதை (பிரசங்கி 6:7, ஆதி 3:19) நன்கு அறிந்தவன்.
எனவே தான் மனிதனின் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையான அருமருந்தாகிய ”உலகப்பொருளை” களத்தில் இறக்கி விட்டு ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பலவீனத்தையும் அள்ளிக் கொண்டான். இன்று மனுக்குலம் வணங்குவது ”உலகப் பொருள்” ஆகும்.
”விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபேசியர்: 5:5)” என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது நினைவிருக்கிறதா??
ஒட்டு மொத்த மனுக்குலமும் இந்த மாயவலைக்குள் அடைத்துப் போடப்பட்டிருக்கிறது. பொருளாதாரச் சூழலும், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாறுதல்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், கல்வி வளர்ச்சியும் நேற்றைவிட இன்று, இன்றை விட நாளை, என்று இன்னும் அதிகமதிகமாய்ப் பணத்தை சேவிக்கும் படி நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது.
கடைசி காலம் நெருங்க நெருங்க இந்த சாபத்தின் உச்சக்கட்டமாக மனிதன் தனது சிருஷ்டிகரிடமிருந்து மாத்திரமல்ல சக மனிதனிடமிருந்தும் கூட தன்னை தனிமைப்படுத்தப்படுகிறான்.
வெறும் வயிற்றுக்காக மாத்திரமே உழைக்கும் நிலை இருந்த காலங்களில் வேலை விட்டு வந்தவுடன் தன் குடும்பத்தோடும், உறவினரோடும் நண்பரோடும் அளவளாவுவதற்கு நேரம் கிடைத்தது.
ஆனால் இன்று பண்பலை, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட் என்று எல்லாம் வந்த பிறகு அவற்றில் சிக்கி சொந்தக் குடும்பத்தோடு கூட நேரம் செலவிட முடியாதபடி அவற்றிற்கு அடிமைப்பட்டு விட்டோம்.
குடும்பப் பெண்கள் டி.வி சீரியல் மோகமும், இளைய தலைமுறையிடம் சினிமா, இண்டர்நெட்டின் தாக்கமும் இந்தத் தலைமுறையை இன்னும் எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை.
மனிதன் காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை என்று எல்லாவற்றையும் அனுபவித்த சாலமோன் ஞானி மிக தெளிவாக சொல்லுகிறான். ஆனால் அதை யாரும் கவனிக்கிறது மில்லை.
செவிமடுப்பதுமில்லை.
வேதத்தில் பார்ப்போம்,
உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப் போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால் பின்னை யார் இதைச் செய்கிறார்.
யோபு 9 :24.
அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1 :10.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3 :17.
பிரியமானவர்களே,
ஒரு மனிதன் ஒரு நாளைக் கர்த்தருடைய சந்நிதியில் செலவிட ஆயிரம் முறை யோசிக்கிறான்.
ஆனால், உலகப்பொருளை சம்பாதிக்க
குறைந்தது பதினைந்து வருடங்களை படிப்புக்கென செலவிடுகிறான்.
தன் பிஞ்சுக் குழந்தைக்கு கர்த்தரைப் பற்றிக் கற்றுக் கொடுக்க கரிசனையில்லாதவன் அதன் தோள்களில் ஒரு பெரிய பொதியை சுமத்தி பள்ளிக்கு அனுப்பி இந்த அநித்திய வாழ்வுக்குரியவற்றை சம்பாதிக்க ஆயத்தப்படுத்துகிறான்.
இவையெல்லாம் அவசியமே!
ஆனால்
இம்மனித வாழ்வு பூமியுடன் முற்றுப் பெறுவதில்லையே!!
மரணத்துக்குப் பின் ஒரு வாழ்வு உள்ளதென்றும், மரணத்துக்கு முன் வாழ்ந்த நிலையற்ற வாழ்க்கையே மரணத்துக்குப் பின்னான நிலைவாழ்வை நிர்ணயிக்கிறது என்பதும் நம்மை நடுங்கச் செய்யும் உண்மைகளல்லவா?
தேசாதி தேசங்களைக் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்து விட்டு பூமியில் கண்ணை மூடிய மறு வினாடியே வெறுங்கையனாக வேறு ஒரு ராஜ்யத்தில் நிற்பது என்பது எத்தனை நிர்பாக்கியம்!! மேலும் அதுவே நிரந்தரம் என்பது மாற்றமுடியாத உண்மை.
இன்னும் எத்தனை துயரமானது? சர்வலோக நியாயாதிபதி அவனை “மதிகேடனே!” என்றழைப்பாரல்லவா?
(லூக்கா 12:20)
இன்றைய உலகம் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு சினிமா நட்சத்திரத்தையோ அல்லது கிரிக்கெட் வீரனையோ அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பாருங்கள்.
அவன் சம்பாதித்த கோடிகளும், ரசிகர் மன்றங்களும், விருதுகளும் கோப்பைகளும் எதற்கு? ஆத்துமா க்ளீன் போல்டான பின்னர் அவன் பூமியில் அடித்த செஞ்சுரிகளால் என்ன லாபம்? கோடிகளில் புரண்ட அவனைப் பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்ற கூற்று சாலவும் சத்தியம்.
காரணம் அது பூமிக்கு வரவும் இல்லை இந்த கொடுமைகளைப் பார்க்கவுமில்லை. அவன் உயிரோடிருந்த போது அவனைக் கொண்டாடி மாயையான
புகழ் போதையில் ஆழ்த்தி வைத்திருந்த உலகம் இப்போது அவனை எடுத்துக் கொண்டவரின் கையிலிருந்து அவனை மீண்டும் பிடுங்கிக் கொள்ளக் கூடுமோ?
இதை உணர்ந்து தான் கவிஞன் அற்புதமாகப் பாடினான்.
“இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா கூக்குரலாலே கிடைக்காது –
உயிரோடு இருக்கும் போது பட்டம் கொடுத்து, பரணி பாடி பல்லக்கில் ஏற்றி பவனி கொண்டு வரும் உலகம் உயிர் போன பின்னர் வாயில் பாலை ஊற்றி, பாடையில்
ஏற்றி ”போனால் போகட்டும் போடா” என்று பாட்டுப் பாடி கை கழுவி விடுகிறது.
தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்தது போலவே நிர்வாணியாய்த் திரும்பிப் போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டு போவதில்லை.
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப் போம்;” என்று பிரசங்கி கூறுகின்றான்.
நாமும் இந்த உண்மையை உணர்ந்து இவ்வுலக வாழ்வுக்காக மட்டுமல்ல மறுமையிலும் மனமகிழ்வோடு வாழ வேண்டும் என்ற நோக்கில் நல்வழியை பின்பற்றி கர்த்தருக்காக ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்