கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவவழி. நீதிமொழிகள்: 6:23
எனக்கு
அன்பானவர்களே!
வேதத்தின் வழியில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து தேசத்து மாமன்னர் நான்காம் வில்லியம் மரித்த இரவு நேரம்.பட்டத்திற்கு வர வேண்டிய இளவரசியான சிறுமி அரண்மனையின் மற்றொரு அறையில் துயில் கொண்டிருந்தாள்.
அவளை தூக்கத்திலிருந்து எழுப்பி “இங்கிலாந்து அரசியாரே வாழ்க!” என்று வாழ்த்தி நடந்ததை கூறினார்கள்.
உடனே சிறுபெண்ணாய் இருந்த இளவரசி தன்னருகில் இருந்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, படுக்கையருகில் முழங்காற்படியிட்டு தனது நாட்டை ஆளும்
மிகப் பெரிய பொறுப்புக்குத் தேவையான ஞானம், பலம், வழிநடத்துதலை அருளும்படி பரம பிதாவிடம் வேண்டுதல் செய்தாள்.
அந்த இளவரசி தான் “விக்டோரியா மகாராணியாக” முடிசூட்டப்பட்டு அறுபத்து நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து தேசத்தை சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தாள்.
தேவப் பயமும், பக்தியும் உடையவளாயிருந்த இந்த விக்டோரியா மகாராணியின் காலத்தில் இங்கிலாந்து நாடு எல்லா வழிகளிலும் முன்னேற்றமும், புகழும் பெற்று விளங்கியது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
ஒரு சமயம் மகாராணியை சந்திக்க வந்த இந்தியாவின் சிற்றரசு பகுதியை ஆண்ட சுதேச மன்னர் ஒருவர் “அரசியாரே தங்கள் நாடு உலகில் புகழும், செல்வாக்கும் மிக்கதாக விளங்குவதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.
உடனே அரசியார், தயக்கமின்றி தமது சத்திய வேதாகமத்தை எடுத்து உயர்த்திக் காட்டி “இதுவே அதன் ரகசியம்” என்று கூறி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
ஒரு தனி மனிதனை மாத்திரமல்ல, வீட்டையும், நாட்டையும் சிறப்புடன் பாதுகாக்க வேதாகமமே சிறந்த வழிகாட்டி .
வேதம் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும், வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருடைய வேதத்தின் படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
சங்கீதம் :119:1
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம்: 37:31
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்: 119:92.
பிரியமானவர்களே,
கர்த்தருடைய வேத வசனமானது ஆசீர்வாதத்தின் வழியை நமக்குக் காட்டுகிறதாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக வாழ விரும்புகிறோம்.
ஆனால் அந்த வழியை நாம் கண்டறிந்திருக்கிறோமா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வேதத்தில் கர்த்தருடைய சத்தத்தை நாம் கேட்க முடியும். கர்த்தர் மனிதனோடு இன்றைக்கும் பேசும் படியான ஒரு வழியாக வேதம் மட்டுமே இருக்கிறது.
ஆகவே வேதாகமம் மனிதனுடைய புத்தகமல்ல. மனிதனால் அல்லது மனிதனுடைய சிந்தையினால் எழுதப்பட்ட புத்தகமுமல்ல. அது பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தவான்களைக் கொண்டு எழுதின புத்தகம்.
நாம் இந்த வேதத்தைக் கிட்டிச் சேரும் பொழுது நமக்கு வாழ்வு அளிக்கும் வழிகாட்டியாய் இருக்கிறது.
இது தேவனுடைய புத்தகம் தேவனுடைய சத்தம் என்கிற உணர்வோடு, பயபக்தியோடு வேதத்தை வாசித்து அதை தம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் மனிதர்களை “உத்தம மார்க்கத்தார்” என்று வேதம் சொல்லுகிறது.
அன்பானவர்களே!
மெய்யான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வேண்டுமெனில் கர்த்தருடைய வேதத்தை வாசித்து அதன்படி உத்தமமாய் நடக்க பழகிக் கொள்ள வேண்டும்.
வேதத்திற்கு புறம்பான காரியங்களை நாம் செய்யும் பொழுது ஒருபோதும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை சுதந்தரித்துக் கொள்ள முடியாது.
இன்றும் என்றும் மனிதரோடு உறவாடும் நற்புத்தகம் “பரிசுத்த வேதாகமப் புத்தகமே”. தேவ வார்த்தையோடு நாம் தினமும் உறவாடும் போது, பல புதிய வழிகள் கிடைக்கும்.
நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அதன்படி நடக்கும் போது அனைத்திலும் மேன்மையுறுவோம். நாம் இடது புறமும், வலது புறமும் சாயாமல், நம்மைத் தம் வார்த்தையாலே நடத்தும் .
நம் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையாய் செவி கொடுப்போம். இவ்வுலகில் வளமாய் வாழ்வோம்.
கர்த்தர் தாமே வேதத்தின் வழியில் நம்மை நடத்தி பரலோக வாழ்வுக்கு நேராக நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்.