உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு :6 :21.
எனக்கு அன்பானவர்களே!
நித்திய வாழ்வை அருள் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும் அதற்காய் மற்றவர்கள் நம்மை புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நம் மனம் ஏங்குவதுண்டு.
நாம் பணி செய்யும் இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் பல பரிசுகள், விருதுகள் பெற வேண்டும் என கடினமாய் உழைப்பவர்கள் அநேகர் உண்டு.
உலகப் பிரகாரமான போட்டிகளில் பங்கேற்றால் அதில் எப்படியாவது வெற்றி பெற்று பரிசை அல்லது பதக்கத்தை வென்று விட வேண்டும் என்று தூக்கத்தை களைந்து கடினமாய் உழைப்போம். அது நல்லது தான்.
ஆனால் இந்த உலகத்தில் நாம் பெறும் பாராட்டுகள் பரிசுகள் விருதுகள் எல்லாம் நிரந்தரமற்றது.
இரட்சிப்பும், நித்திய ஜீவனும், இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட எல்லாருக்கும் இலவசமாக கொடுக்கப்பட்ட ஈவு.
கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் விசுவாச ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தேவன் விலையேறப் பெற்ற கிரீடங்களை வைத்திருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாய் சிங்காசனத்தில் அமர்ந்து நம்முடைய கிரியைகளுக்கு தக்க பலனை அளித்து கிரீடங்கள் சூட்டி நம்மை மகிழ்விக்க போகிறார்.
[Performance Awards for Running a Good Christian Race]. நித்திய நித்தியமாய் அவரோடு கூட வாழப் போகிற நாம், இதைக் குறித்து கவலைப்படுகிறதுண்டா? அதற்காய் உழைக்கிறோமா?
மணவாளனாகிய என் ஆத்தும நேசரின் கையிலிருந்து பரிசை பெற்றுக் கொள்ள வேண்டும் என வாஞ்சிக்கிறோமா? ஆயத்தப்படுகிறோமா? சிந்திப்போம் அன்பானவர்களே! பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் என வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.
“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என வேதம் நம்மை எச்சரிக்கிறது
வெளி:22:12- ல்
பரலோக ராஜ்ஜியத்தில் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதியாய் நம்முடைய கிரியைகளுக்கேற்ற பலனை நமக்கு அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறார் என்று பார்க்கிறோம்.
வேதத்தில் பார்ப்போம்,
துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?
மீகா :6 :10.
பூரண ரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
ஏசாயா :33 :6.
நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங் காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,
1 தீமோத்தேயு: 6:19.
பிரியமானவர்களே,
நாம் இந்த உலகத்தில் எதையும் கொண்டு வந்ததுமில்லை எதையும் எடுத்து செல்லுவதுமில்லை.
ஆனால்,நாம் நிரந்தரமற்ற உலகப்பிரகாரமான பொக்கிஷங்களை சேர்க்க எவ்வளவு பிரயாசப்படுகிறோமோ அதை விட பரலோகத்தின் பொக்கிஷங்களை ( பலன்களை ) சம்பாதிக்க பிரயாசப்பட வேண்டும்.
இந்த உலகத்தில் நாம் தேவனுக்காக படுகிற ஒவ்வொரு பிரயாசத்திற்கும் பலன் உண்டு.
எனவே உலக மாயையில் சிக்கி நம் வாழ்க்கையை அழித்துப் போடாமல் என்றென்றைக்கும் நித்திய நித்தியமாய் வாழும் பரலோக ராஜ்ஜியத்தின் பொக்கிஷங்களை சம்பாதிப்போம்.
நாம் கிரீடங்கள் பெற கிரியை செய்கிறவர்களாக அல்லாமல் தேவனில் கொண்டுள்ள உண்மையான அன்பினால் கிரியை செய்வோம். பரலோக வாழ்கையே நம் ஆசையாக மாறட்டும்.
பரலோகத்தின் கிரீடங்களை என் அன்பர் இயேசு கிறிஸ்துவின் கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு உண்மையாய் அவரை பின்பற்றுவோம்.
நாம் தேவனுக்காய் இந்த உலகில் பட்ட ஒவ்வொரு பிரயாசத்திற்கும் பலனை பெற்றுக் கொள்ளும் நாளில் தேவன் நம்மை கிரீடங்களினால் முடிசூட்டுவார்.
அந்த தருணம் எவ்வளவு ஆனந்தமானது. தேவனின் பிரசன்னமாகுதலை அனுதினமும் நம் வாழ்க்கையில் வாஞ்சிப்போம்.
கர்த்தர் தாமே இத்தகைய பரலோக ஆசீர்வாதங்களை தந்து நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்