Daily Manna 225

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகப்படுவாள்

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாக வேண்டும் என்று ஆசை வந்து கடவுள் கிட்ட வேண்டியது.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,
கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.

தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது. அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றி விடுங்கள் என்று கேட்டது குதிரை.

நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,
பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

நான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.
உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும் .

நீங்கள் அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித் தான் போய் முடியும் என்றார். இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷம்’. மாற வேண்டுமெனில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தேவை

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலிலே”
உள்ளது.

வேதத்தில் பார்ப்போம்,

நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
1 கொரிந்தியர்: 12:24.

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.
1 பேதுரு :3:4

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள்: 31 :30.

பிரியமானவர்களே,
இந்த உலகம் புறத் தோற்றத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது,

நம்மில் அநேகர்
நான் அழகாக இல்லை. நான் குண்டாயிருக்கிறேன், ஒல்லியாயிருக்கிறேன், குட்டையாயிருக்கிறேன், நெட்டையாயிருக்கிறேன் என கூறி தங்களை தாங்களே தாழ்வாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

நீங்கள் மற்றவர்களுக்காகவா அல்லது உங்களுக்காகவா… யாருக்காக வாழ வேண்டும் என்று இருக்கிறீர்கள்

உலகம் உங்களை என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள் நீங்கள் தேவனுடைய பார்வையில் விஷேசித்தவர்கள்.

அழகு என்பது தோற்றத்திலோ, அல்லது அலங்காரிப்போ அல்ல,
வேதம் கூறுகிறது.
“மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. (1 பேதுரு 3:3,4 என்று கூறுகின்றார்.

“ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப் பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்ற படியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்”
(1 தீமோ 2:9-10 அதுவே உயர்வான அழகு.

நாம் மற்றவர்கள் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால் நமது அருமை இரட்சகர் யாரையும் வெறுமையாக உருவாக்கவில்லை.

உங்களை நீங்களே வெறுத்தால், உங்களை ஆசை அசையாய் படைத்த தேவனை துக்கப்படுத்துகிறீர்கள் என்று பொருள்.. தேவன் அனைவரையும் அழகாய் தான் படைத்திருக்கிறார்.

நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டேன் என்று தாவீது கூறுகின்றார்.
சங்கீதம் 139:15

ஆம், நம்மையும் அவர் விசித்திர விநோதமாய், நேர்த்தியாய், அழகாய் படைத்திருக்கிறார் என்பதை அறிந்து கர்த்தரின் கரத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதித்து தமது பிரசன்னத்தினால் நிறைத்து பாதுகாத்து வழிநடத்துவாராக.

ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *