கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்: அவன் தன் ஆகாரத்தில் தரித்திரருக்குக் கொடுக்கிறான். நீதிமொழிகள்:22 :9.
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை கொட்டோ கொட்டென்று பெய்து கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்து விடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
ஒரு சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும் இறங்கினார்கள். மெள்ள அடியெடுத்து வைத்து ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.
வரவேற்பறையில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவனருகே இருவரும் சென்று இன்று இரவு தங்குவதற்கு இந்த ஹோட்டலில் எங்களுக்கு ஓர் அறை கிடைக்குமா?’’ என்று கேட்டார் முதியவர்.
இளைஞன் புன்னகை மாறாமல் அவர்களை பார்த்தான். மென்மையான குரலில் அவரிடம் சொன்னான்… “ஐயா மன்னிக்கவும். இன்றைக்கு இந்த நகரத்தில் மூன்று முக்கியமான பெரிய விழாக்கள், கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதனால் நகரிலிருக்கும் எல்லா ஹோட்டல்களுமே நிரம்பி வழிகின்றன. எங்கள் ஹோட்டலிலும் ஒரு அறை கூட காலியில்லை. என்றான்.
அந்தப் பெரியவர் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார். நாம் ஹோட்டலை விட்டு வெளியே போக வேண்டியது தான்’ வேறு என்ன செய்வது என்று நினைத்தார்.அந்த இளைஞன் பேசினான். உங்களை வெளியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது.
நீங்கள் விரும்பினால், இன்று இரவு என் அறையில் தங்கிக் கொள்ளலாம். என்ன… அது ஆடம்பரமான அறை அல்ல. அதிக வசதிகள் இருக்காது. ஆனால், உங்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.’’
“சரி… நீ எங்கே தங்குவாய்?’’ எனக்கு என் நண்பர்கள் உதவுவார்கள் என்றான்.’’
முதியவரும் அவர் மனைவியும் இளைஞனின் உதவியை ஏற்றுக் கொண்டார்கள். அன்றிரவு அந்த இளைஞனின் அறையிலேயே தங்கினார்கள்.
அடுத்த நாள் காலை இருவரும் இளைஞனிடம் வந்தார்கள். நன்றி சொல்லி விடை பெறும் நேரம் அது. அவர் சொன்னார்… “உன்னைப் போன்ற ஒரு அன்பான மேனேஜர் ஒரு மிகச் சிறந்த ஹோட்டலுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு வேளை உனக்காகவே நான் ஒரு ஹோட்டலைக் கட்டினாலும் கட்டுவேன்.’’
அவர் சொன்னது ஏதோ பெரிய நகைச்சுவை என்பது போல மூவருமே வாய் விட்டுச் சிரித்தார்கள். பிறகு கிளம்பிப் போனார்கள்.
காரில் போகும் போது தன் மனைவியிடம், “இப்படி நட்பாகவும் உதவி செய்யும் மனப்பான்மையுடனும் ஒருவர் இருப்பது அரிதானது.’’ என்று சொன்னார்.
சில வருடங்கள் கழிந்தன. அந்த இளைஞனுக்கு
ஒரு கடிதம் வந்தது. அந்த முதியவர் எழுதியிருந்தார். அந்த மழை இரவை ஞாபகப்படுத்துவது மாதிரி சில வரிகள்… பிறகு தான் இளைஞனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. `இத்துடன் ஒரு ஃபிளைட் டிக்கெட்டை இணைத்திருக்கிறேன். உங்களால் எங்களைப் பார்க்க நியூயார்க்குக்கு வர முடியுமா?’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இளைஞன் நியூயார்க்குக்குக் கிளம்பிப் போனான். அவனை வரவேற்கத் தயாராக விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பெரியவர். அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு, நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில், 34-வது தெருவுக்கு அழைத்துப் போனார். காரை நிறுத்தினார்.
அந்த இளைஞனுக்கு முன்பாக மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடம் தெரிந்தது.
“இது தான் நீ நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக நான் கட்டிய ஹோட்டல்’’ என்றார் பெரியவர்.
“ஐயா நீங்கள் ஜோக் எதுவும் அடிக்கவில்லையே!’’
“நிச்சயமாக இல்லை.’’
அந்தப் பெரியவரின் பெயர் வில்லியம் வால்டார்ஃப் அஸ்டர் (William Waldorf Astor). பெரும் பணக்காரர். அது அவருடைய ஹோட்டலே தான். அது, வால்டார்ஃப் அஸ்டாரியா ஹோட்டல். அந்த இளைஞன் அந்த ஹோட்டலின் முதல் மேனேஜர் என்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டான்.
அவர் பெயர், ஜார்ஜ் சி.போல்ட் (George C.Boldt) உலகின் மிக முக்கியமான, ஆடம்பரமான ஒரு ஹோட்டலுக்கு தான் மேனேஜராவோம் என்று அவன் ஒரு போதும் நினைத்துப் பார்த்ததில்லை.
ஆனால்,அவனை அந்த உயரத்தில் கொண்டு போய் வைத்தது அவனின் கனிவான நடவடிக்கையும் உதவி செய்யும் மனப்பான்மையும் தான்.
வேதத்தில் பார்ப்போம்,
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது, ஆதலால் அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர்:13 :10.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான்:13 :35.
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 யோவான்:3 : 18
பிரியமானவர்களே,
ஒருவருடைய குறைவில் அவருக்கு உதவி செய்யாமல் “நான் அன்பாக இருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்வது மாய்மாலமான அன்பு என்று வேதம் கூறுகிறது.
உண்மையான தேவனுடைய அன்பு தேவையில் உள்ளவர்களுக்கு மனப்பூர்வமாக உதவி செய்வதே ஆகும்.
ஆண்டவர் என்னை மிகுதியாக ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்வதற்காக மிகுந்த ஆஸ்தியை அவர் கொடுக்கவில்லை. குறைவில் இருக்கும் தன்னுடைய சகோதரனுக்கு குறைச்சலில் உதவி செய்யும்படிக்கு தான் தேவன் ஆஸ்திகளை கொடுக்கிறார்.
நல்ல வேலையைக் கொடுத்து, நல்ல தொழிலைக் கொடுத்து நல்ல வருமானத்துடன் ஆஸ்திகளை தேவன் கொடுத்திருப்பது, இல்லாதவர்களைப் பார்த்து இழிவாக பேசவோ, இழிவாக நடத்தவோ அல்ல.
தன்னிடம் வந்தது எல்லாம் தனக்குத் தான், மற்றவர்கள் எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பது பிசாசின் குணம். அது தேவ பிள்ளைகளின் குணம் அல்ல.
உண்மையான ஆண்டவரின் பிள்ளைகளின் குண நலன் எப்படி இருக்குமென்றால். அன்பான மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம், பிறருக்கு உதவும் எண்ணம்… இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
நமக்கு ஆண்டவர் தந்த ஆசீர்வாதங்களை நாம் மட்டும் வைத்துக் கொண்டால் போதாது.அதை மற்றவர்களுக்கும் கொடுத்து இன்புற வேண்டும். இதைத் தான் இயேசு கிறிஸ்துவும் கூறுகிறார்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும் படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் லூக்கா 16:9 என்று.
ஆனால் இவ்வுலகில் ஒரு நாள் அழிந்து போகும். சொற்ப உலகப் பொருட்களுக்காக தன் குடும்பத்தையும், நண்பர்களையும், உறவுகளையும் வெறுத்து தள்ளும் மனிதர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
ஆனால் நாமோ, அப்படியல்ல…
அழிந்து போகும் உலகப் பொருட்களால் நம் உறவுகளை அன்பினால் சம்பாதித்து மறுமை வாழ்விலும் அவர்களை கொண்டு சேர்ப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
ஆகவே, “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” கொலே 3:24“ என்று சொல்லுகிறார். அப்படி நாம் செய்யும் போது, கர்த்தரின் ஊழியத்திற்கு பங்காளிகளாய் மாறலாம்.
ஆகவே நாமும் பிறருக்கு உதவி செய்வோம். கர்த்தர் தந்த ஆசீர்வாதங்களை பிறருக்காக பயன்படுத்துவோம்.
கர்த்தர் தருகிற சமாதானத்தை இந்த ஓய்வு நாளில் பெற்று வளமாய் வாழ இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.