நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று மத்தேயு :5 :28.
எனக்கு அன்பானவர்களே!
பரிசுத்த வாழ்வு வாழ நமக்கு கிருபை செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெண் என்றைக்கு எந்த பிரச்சனையுமின்றி தனியாக இரவு நேரத்தில் சாலையில் செல்கிறாளோ அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ என்று காந்தி சொன்னதாக படித்திருக்கிறோம்.
கர்த்தருடைய வேதத்தில் பார்க்கும் போது என்றால், யாக்கோபின் மகள் தீனாள் என்பவள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டுப் போனது குடும்பத்தில் யாருக்கும் தெரிந்திருந்ததாக இல்லை.
அவள் தேசத்துப் பெண்களைப் பார்க்கத்தான் புறப்பட்டுச் சென்றாள். ஆனால், அவள் எந்தப் பெண்ணையாவது பார்த்தளோ இல்லையோ, அவளை ஒரு ஆண் கண்டான்.
அவன் தான் சீகேம். அவன் அவளைத் தன் இச்சைக்கு ஆளாக்கினான். விஷயம் தெரிந்த போது அவள் தகப்பன் யாக்கோபோ, அண்ணன்மாரோ அவளை எதுவும் கேட்கவுமில்லை.
அவளுக்கு ஆறுதல் கொடுக்கவுமில்லை.
அவரவர் தங்கள் தங்கள் கோபத்தைக் காட்டிக் கொண்டார்கள். பெண்களுக்கு உரிமை உண்டோ இல்லையோ, ஒரு பெண்ணை மனுஷி என்று பாராமல் தங்கள் இச்சைக்கு உட்படுத்துகின்ற சமுதாயமா மனித சமுதாயம்? என்று எண்ணும்போது வெட்கமாயிருக்கிறது
இறுதியில் அந்தப் பட்டணமே இரத்தகளரியாகிற்று என்று
ஆதியாகமம்:34:25. பார்க்கிறோம்.
இன்றும் இந்தச் சீர்கேடு இருக்கிறது என்கிறதிலும், அதிகரித்திருக்கிறது என்கிறதிலும், மிக மோசமான விதத்தில் நடந்தேறுகிறது என்று நாம் கண்கூட பார்க்கிறோம். மனித வர்க்கத்தின் மீதே வருத்தப்படாமல் என்ன தான் செய்வது?
ஆனால், என்றைக்கு இந்த சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதோ,? என்றைக்கு ஆண்கள் பெண்களைப் பார்க்கும் பார்வையும் மாறுகின்றதோ? அன்று தான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்று நான் நினைக்கிறேன்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான் :13 :35.
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான்: 4 :11.
கர்த்தரில் அன்பு கூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
சங்கீதம் 97:10.
பிரியமானவர்களே,
இந்தக் கடைசி நாட்களில் பாலியல் பாவங்கள் பூமியெங்கும் மிகுந்து காணப்படுகின்றன.
அதில் விசுவாசி அவிசுவாசி என்ற வித்தியாசமின்றி அநேகர் இதற்கு அடிமையாகி உள்ளனர்.
விபச்சார பாவம் மனிதனை அன்றும் இன்றும் அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது மனிதரை கொலை பாதகத்திற்குள்ளும் தள்ளி விடுகிறது. விபச்சார பாவம் அழகிய குடும்ப வாழ்வை சீரழித்து சின்னா பின்னமாக்குகிறது.
“மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்”
(யோபு 31:3). இக்கொடிய பாவத்திலிருந்து விலகி வாழ்வதற்கேதுவாக, தன் கண்களுடன் யோபு உடன்படிக்கை செய்ததாக வாசிக்கிறோம்.
விபச்சார பாவம், சர்வவல்ல தேவன் நமக்குக் கிருபையாய் கொடுத்திருக்கின்ற சுதந்திரத்தையும் கேள்விக் குறியாக்கி விடுகிறது. இந்தப் பாவத்தினிமித்தம் ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்கு ஆக்கினையும் நிச்சயம் வரும்.
இந்தப் பாவத்தைக் கர்த்தரிடம் மறைக்க முடியாது. கர்த்தர் அனைத்தையும் ஆராய்ந்து அறிகிறவர். விபச்சார பாவத்தின் கொடுமையையும் அதனால் கிடைக்கின்ற தண்டனையையும் எடுத்துக் கூறும்
யோபு, இந்தப் பொல்லாத பாவத்திலிருந்து பரிசுத்த வாழ்வு வாழ்வதாக இங்கே, தன்னைப் பற்றிச் சாட்சியாகக் கூறுகிறார்.
இன்று இந்த உலகம் இந்தக் கொடிய விபச்சார பாவத்தால் அதிகமதிகமாகக் கறைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது, மனிதனை மிக எளிதில் வீழ்த்திவிட சத்துரு கொண்டு வருகின்ற தந்திர ஆயுதம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இந்தக் காரியத்தை எவரும் திடீரென்று செய்வதில்லை. இது கண்களுக்கூடாகவும் செவிகளுக்கூடாகவும் இருதயத்தில் நுழைந்து, மனதிலே கருவுற்று, வளர்ந்து, வேர்விட்டு, இனி முடியாது என்ற கட்டத்தில் வெடித்து வெளி வருகிறது.
ஆனாலும் நமது இந்தப் பலவீனத்தையும் தேவன் அறிவார். நமது இருதயம் கறைப்படும் போதே தேவனிடம் திரும்புவோமானால் அவர் நிச்சயம் நம்மைக் காத்து இரட்சிப்பார்.
வேதம் சொல்லுகிறது
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக (யாத்.20:4,17) என்பது கட்டளை. இவற்றை நம் இருதய பலகையில் எழுத நம்மைத் தேவனிடம் ஒப்புக் கொடுப்போமாக
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயத்தையும், நம் சிந்தனையையும் ஆண்டு வழிநடத்தி காப்பதாக.
ஆமென்.