Daily Manna 259

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யாத்திராகமம் 1:21

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நர்ஸ் ( செவிலியர்) என்னும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம்.

மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். “ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள்” என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட‌ உண்டு.

நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் ” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது.

போர்க‌ளினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிடையே தான் அவ‌ருடைய‌ ப‌ணி பெரும‌ள‌வில் இருந்த‌து.
1820 க்கும் 1910 க்கும் இடைப்ப‌ட்ட‌ கால‌த்தில் வாழ்ந்த‌ அவ‌ர் முழுநேர ம‌ருத்துவ‌ப் ப‌ணி செய்த‌து வெறும் மூன்று ஆண்டுக‌ள் தான் என்ப‌து விய‌ப்பூட்டுகிற‌து.

“எவ்வ‌ள‌வு கால‌ம் ப‌ணி செய்கிறாய் என்ப‌த‌ல்ல‌, எப்ப‌டி ப‌ணி செய்கிறாய் என்ப‌தே முக்கிய‌ம்” என்ற வாசகத்தை இவ‌ருடைய‌ வாழ்க்கையே சொல்கிற‌து.

“நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைக‌ள் எல்லாமே வ‌ருமான‌த்தின் அடிப்ப‌டையில் நிர்ண‌யிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ப‌த‌ற்கு தாதிய‌ர் ப‌ணி ஒரு சிற‌ந்த‌ உதார‌ண‌ம். வெறும் ச‌ம்ப‌ள‌த்தை எதிர்பார்த்து இந்த‌ப் ப‌ணியில் சேர்ப‌வ‌ர்க‌ள் ப‌ணியின் அர்த்த‌த்தை அழித்து விடுகின்றனர்.

“நீடிய‌ பொறுமை, இர‌க்க‌ம், சுய‌ந‌ல‌மின்மை என‌ ப‌ல்வேறு குணாதிச‌ய‌ங்க‌ள் கொண்ட‌வ‌ர்க‌ளே ந‌ல்ல‌ ந‌ர்ஸாக‌ ப‌ணிபுரிய‌ முடியும்” என்கிறார் ஃப்ளார‌ன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு ந‌ர்ஸ் நல்ல கிறிஸ்த‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டுமென்ப‌தில்லை. ஆனால் ஒரு சிற‌ந்த‌ கிறிஸ்த‌வ‌ர் நிச்ச‌ய‌ம் ந‌ல்ல‌ ஒரு செவிலிய‌ராக‌ப் ப‌ணிபுரிய‌ முடியும். கார‌ண‌ம் ஒரு ந‌ல்ல‌ கிறிஸ்த‌வ‌ருடைய‌ ப‌ண்புக‌ள் ஒரு சிற‌ந்த‌ செவிலிய‌ருக்குத் தேவைப்ப‌டுகிற‌து !

செவிலிய‌ர்க‌ள் இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் இர‌க்க‌ம் உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்று வேதம் கூறுகின்றது.
“இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்”.
மத்தேயு:5:7 என்று

செவிலிய‌ர்க‌ளிடம்
இருக்க‌ வேண்டிய‌ ப‌ண்புக‌ளில் ஒன்று. நோயாளிக‌ள் ஏராள‌மான‌ சோக‌த்தையும், வேதனைகளையும் ம‌ன‌தில் சும‌ந்து திரிப‌வ‌ர்க‌ள்.

அவ‌ர்க‌ளை உற்சாக‌த்தை ஊட்டும் வார்த்தைகள், ஒரு சின்ன புன்ன‌கை, ஒரு உற்சாக‌மான‌ பார்வை, ஒரு ம‌ல‌ர்ச்சியான‌ முக‌ம் இவை நோயாளிக்கு சுமையைத் த‌ணிக்க‌ உத‌வும் என்ப‌து உள‌விய‌ல் உண்மை.

வேதத்தில் பார்ப்போம்,

ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக்கோபு :4:17

இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.
யாத்திராகமம் 1:20

மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
பிரசங்கி:3:12

பிரியமானவர்களே,

நீ எதை செய்தாலும் அதை தேவனுக்கென்று செய்.ஒரு வேளை மனிதர்கள் உன்னை விளங்கிக் கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் கர்த்தர் உன்னைப் பார்க்கிறார். அதற்குரிய பலனை நிச்சயம் கொடுப்பார்.

தேவன் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுவதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.’
எபிரேயர்:6 :10-ல் வேதம் சொல்லுகிறது.

எனக்கு அருமையானவர்களே! உங்கள் வேலை எப்படி இருக்கிறது? நீங்கள் மனுஷருக்குப் பிரியமாய் இருக்க ஊழியம் செய்கிறீர்களா? இன்றைக்கு பார்வைக்கு வேலை செய்கிறவர்கள் கடைசியில் ஏமாந்து போய் விடுவார்கள்.

உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” எனும் வசனம் கொலோசேயர் 4 : 6 செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
கொலோசெயர்: 3:24
எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர்.

ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக் கூடாது: மாறாகப் பிறர் நலமே வழியில் நாட வேண்டும்”
(1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

பிறருக்கு நன்மை செய்ய நாமும் செவிலியராய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நல்ல குணமும், நல்மனதும் அமைந்தாலே அநேகருக்கு உதவி செய்ய முடியும் என்பதை மனதில் நிறுத்தி கர்த்தருக்காய் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே இத்தகைய அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *