தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா :14:11
எனக்கு அன்பானவர்களே!
நம்மை ஆசீர்வதித்து உயர்த்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவர் தன் வாழ்வில் வந்த சோதனையின் நிமித்தம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். அவர் ஆண்டவருக்காக வாழ தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தார்.
தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததால், தான் செய்து வந்த வேலையை விட்டு விட்டு ஒரு சபையில் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.
தன் ஆரம்ப கட்ட ஊழியத்தில் அவருக்கு அந்த சபையில் தண்ணீர் கப் கழுவும் வேலையை பெற்றிருந்தார். அவரும் அதை சந்தோஷமாக செய்து கொண்டு வந்தார்.
ஒரு நாள் அந்த வங்கியில் அவரோடு பணிபுரிந்த உயர் அதிகாரி ஒருவர் இவரது ஊழியத்தைப் பார்ப்பதற்கு அந்த சபைக்கு வந்தார். அங்கு அவர் தண்ணீர் கப் கழுவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
புறமதத்தை சார்ந்த அவர், இவரைப் பார்த்து,”ஐயா நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கம் பண்ணுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால்
இந்த கப் கழுவும் வேலைக்காகவா நீங்கள் வங்கி வேலையை உதறி விட்டு வந்தீர்கள்?” என்று வருத்தப்பட்டார்.
இவரோ எதற்கும் கவலைப்படாமல் “இந்த வேலையை நான் இயேசுவுக்கு செய்யும் ஊழியம் என்று பெரிதாக நினைத்து செய்கிறேன், இதை செய்வது நான் செய்த வங்கி பணியை விட பெரிய பணி” என்று சந்தோஷத்தோடே சொல்ல அந்த அதிகாரி துக்கமுகத்தோடே போய் விட்டார்.
நாட்கள் சென்றது. தேவன் அவரை வல்லமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். உலகம் முழுவதும் சென்று தேவ வசனத்தை பிரசங்கித்து வல்லமையாக பயன்படுத்தப்பட்டார்.
தன் இறுதி நாட்களில் அவர் ஒரு பெரிய ஊழிய ஸ்தாபனத்தில் வல்லமையாய் ஊழியம் செய்து சமீபத்தில் தான் ஆண்டவருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார்.
ஆம், தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
யோபு 5:10
வேதத்தில் பார்ப்போம்,
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23:12
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதிமொழிகள் 22:4
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4:10
பிரியமானவர்களே,
நீங்கள் தேவனால் உயர்த்தப்பட வேண்டுமானால் அதாவது பெரியவனாக வேண்டுமானால் இயேசுவின் சிந்தை நம்மில் காணப்பட வேண்டும். அவர் செய்து காட்டிய மாதிரியின் படி வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நாம் நடந்து காட்ட வேண்டும்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சம்மாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.அவர் சிலுவையின் மரண பரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும்மேலாக அவரை உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தார்.
[ பிலி 2: 3-10 ]
ஆகவே தான் பவுல் சொல்லுகிறார்.
இப்படிப்பட்ட கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களில் இருப்பதாக என்று
பிலிப்பியர்: 2:5 -ல் எழுதியிருக்கிறார்.
இன்றைக்கு நம்முடைய சிந்தை எப்படியிருக்கிறது? இயேசு எடுத்த அடிமையின் ரூபத்தை நாம் எடுக்க விரும்புவதில்லை. அது நமக்கு பிடிப்பதில்லை ஏனென்றால் நாம் தலைவனாகவே இருக்க விரும்புகிறோம்.
மற்றவர்களின் அங்கீகாரத்தையும் மனிதர்களின் மகிமையையும் நாடுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வேளை வரும் வரை காத்திருத்தார். அவர் அடிக்கப்பட்டார், நிந்திக்கப்பட்டார் ஆனாலும் அவர் ஒன்றும் எதிர் பேசவில்லை.
நாம் சிலுவையின் பாடுகளுக்குள் கடந்து செல்ல விரும்பவில்லை. அவர் நமக்கு மாதிரியாக வைத்து விட்டு போன அடிச்சுவடுகளை நாம் பின்பற்றுவதில்லை எனவே தான் நாம் உயர்த்தப்படுவதில்லை.
யோவான் :13 -ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் தம்முடைய கைகளில் பிதா எல்லா அதிகாரத்தையும் ஒப்புகொடுத்தாரென்று இயேசு கிறிஸ்து அறிந்தவுடன் சீஷர்களின் கால்களை கழுவி தான் கட்டியிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்களுக்கு பணிவிடை செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் இப்படியே செய்யுங்கள் என்கிற மாதிரியைக் காண்பித்தார்.
லூக்கா 22: 24-26 ல்
சீஷர்களுக்குள் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்ற வாக்குவாதம் உண்டான போது இயேசு கிறிஸ்து உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும் தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக் கடவன் என்று சொல்லி அதின்படி மாதிரியையும் செய்துக் காட்டினார்.
இன்றைக்கு நாம் தேவ வசனங்களை மனிதர்களுக்கு போதிக்கிறோம். ஆனால் அனேக காரியங்களுக்கு நாமே கீழ்ப்படிவதில்லை.
ஆகவே நாம் செய்கிற சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் நம்மை உயர்த்துகிறது கர்த்தர் என்பதை உணர்ந்து வாழ இந்த ஓய்வு நாளில் கர்த்தர் நம்மை அழைக்கிறார்.
ஆமென்.