மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மத்தேயு :16:26
எனக்கு அன்பானவர்களே!
நித்திய வாழ்வை வாழ செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
வேதாகமத்தில் இயேசு கூறிய உவமைகளில் நித்திய வாழ்வை பற்றித் தெளிவாக கூறும் உவமைகளில் ஒன்று தான் லாசரு ஐஸ்வரியவான் உவமையாகும்.
வறுமையை ஜெயித்து மிகப்பெரிய செல்வந்தனாக வாழ்ந்த மனிதனைக் குறித்து இயேசு கிறிஸ்து சொன்ன பொழுது,
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப் பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.’’ லூக்கா: 16:19 என்றார்.
அந்த மனிதன், பூமியில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். தன்னைப் போல் ஒருவரும் இல்லை என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஆனால் காலம் கடந்த பின்பு தான் தெரிந்தது, பூமியில் தோல்வி வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கிறோம் என்பதை அவன் மரித்தபின் தான் உணர்ந்து கொண்டான்
லூக்கா: 16:23- 31.
இந்தப் பூமியில் வாழும் நாட்களில் மனந்திரும்பி, வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு எல்லா மனிதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தருணங்கள் கொடுக்கப்படுகிறது.
இக்காலத்திலும் அநேகர் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள செல்வந்தனைப் போலவே மனதைக் கடினப்படுத்திப் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எதை முக்கியத்துவப்படுத்த வேண்டுமோ, அதைச் சாதாரணமாக்கி விட்டு, எது முக்கியத்துவப்படுத்தக் கூடாதோ அதை மிக முக்கியமாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?’’ மத்தேயு 16:26. என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
இன்றும் அநேகர் இவ்வுலக வாழ்வே முக்கியம் என்று கருதி மறுமையை பற்றி சிந்திக்காது தன் மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர்.
வறுமையை ஜெயித்த மனிதன் வாழ்க்கையில் தோற்றுப் போனால் அதனால் அவனுக்கு எந்த வித லாபமும் இல்லை என்பதையே இயேசு கிறிஸ்து இவ்உவமையின் மூலம் சுட்டிக் காட்டுகிறார்.
வறுமையை ஜெயித்து மிகப்பெரிய செல்வந்தனாக வாழும் மனிதன், தன் வாழ்க்கையில் தாறுமாறாக பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பானானால்,
அவன் தோற்றுப் போனவனாக, பரிதாபத்திற்குரிய மனிதனாக, பரிதவிக்கக் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.
வேதத்தில் பார்ப்போம்,
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
உபாகமம்: 30 :15.
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மத்தேயு :16 :26.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான்: 3 :16.
பிரியமானவர்களே,
இந்த உலகத்தில் பெயருக்காக, புகழுக்காகப் போராடும் மனிதர்கள் தன் மரணத்திற்குப் பின் இருக்கும் முடிவில்லா வாழ்க்கைக்காகப் போராடுவது இல்லை.
மனிதனின் ஓட்டமெல்லாம், போராட்டமெல்லாம் எப்படியாகிலும் நான் செல்வந்தனாகிவிட வேண்டும், எப்படியாகிலும் பட்டம், பதவியை அடைந்து விட வேண்டும் என்பதை இலக்காக வைத்தே இருக்கிறது.
எனவே வாழ்கையின் தன்மை என்ன? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? எதற்காக இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
இந்தப் பூமி வாழ்க்கைக்குப் பின் இருக்கும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து எண்ணம் பலரிடத்தில் இல்லாமல் போகிறது.
உலகமும் செல்வந்தர்களை மட்டுமே கொண்டாடுகிறது. அப்படிப்பட்டவர்களையே அடையாளப்படுத்துகிறது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிற இளைய தலைமுறையும் வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்து, பணம் படைத்தவர்களாக வேண்டும், உயர்ந்த பதவிகளை எட்டி விட வேண்டும், என்று வசதி வாய்ப்புக்களை மட்டுமே குறிவைத்து செயல்பட ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் வெற்றி வாழ்க்கைக்கும், பணத்திற்கும், பதவிக்கும், வசதியான வாழ்வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை
என்பதை அறியாமல், வெற்றி வாழ்க்கையைத் தொலைத்துப் பணத்தைச் சம்பாதித்துவிட, பதவியை எட்டிவிட வசதியான வாழ்வை பிடித்துவிட அநேகர் துடிக்கின்றனர்.
எனவே தான் வறுமையை ஜெயித்தவர்களில் பெரும்பாலானோர் பணம், பதவியைப் பெற்று, வசதியான வாழ்க்கை வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையில் ஒழுங்கீனமான பாவ செயல்களைச் செய்து கொண்டே, தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொள்கின்றனர்.
ஆனால், தேவன் விரும்பும் தூய்மையான வாழ்வு தான் வெற்றியின் வாழ்வு எது என்பதை அறியாமல் ஆவிக்குரிய கண்களை மறைத்து போலியான வெற்றியின் தோற்றத்தைக் கொடுத்து, புகழின் உச்சியில் இருப்பது போல் காண்பிப்பதே பிசாசின் தந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த தந்திரங்களில் அநேகர் சிக்கி ஐஸ்வரியவானாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு இருக்கும் கொஞ்ச நாட்களை கனவுகளோடே கடைசி வரை கழித்து வருகின்றனர்.
“மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது”
காணல் நீர் போன்ற வாழ்வில் நம்முடைய பெருமைகளை அல்ல, மறுமை வாழ்வை மனதில் வைத்து நித்திய வாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த ஓய்வு நாளில் நம்மை அழைக்கிறார்.
ஆமென்.