ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு: 10:29
எனக்கு அன்பானவர்களே!
தமக்கு சித்தமான யாவையும் நம் வாழ்வில் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு
” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மை தானா?” என்று கேட்டான்.
” மக்களுக்குப் பொய் பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத் தான் பேசுகிறார்கள்” என்றார் முல்லா.
” அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?” என்று முரடன் கேட்டான்.
” உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தார்.
” என்ன சிரிக்கிறீர் ” என்று முரடன் கேட்டான்.
” அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசைத் தீரப் பார்த்து விடுகிறேன்.
அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் ” என்றார் முல்லா.
என்னது ” தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?” என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.
முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.
” நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் ” என்றார் முல்லா.
” முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்று விட்டீர், என்னை மன்னிக்க வேண்டும்” என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.
” அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் ” என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.
ஆம்,ஒவ்வொரு நாளும் ஆண்டவர் தம் கிருபையினால் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
மத்தேயு: 10:29
வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
சங்கீதம்: 135:6.
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
லூக்கா :12:7.
பிரியமானவர்களே,
தேவனுடைய சித்தத்தை அறியாமல் இன்று அநேகருடைய வாழ்க்கை கவலையும், கஷ்டமும் நிறைந்ததாக இருக்கிறதை நாம் அறிவோம். ஒவ்வொரு சிறிய காரியத்திலும், பெரிய காரியத்திலும் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்து செயல்பட வேண்டும்.
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (மத்தேயு 10:29-31)
மதிப்பே இல்லாத குருவிகள், கூடுகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்திருக்கும்! குஞ்சுகளுக்கு இன்னும் மதிப்பு குறைவு! சொல்லப் போனால் அவைகளுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லை!
ஆனால், அவைகளில் ஒன்றுகூட, தேவனுடைய சித்தமின்றி ஒன்றாகிலும் தரையிலே விழாது என்று இயேசு சொன்னார்.
தேவன் உங்களை மிகவும் அற்புதமாய் உருவாக்கியிருக்கிறார். தேவ திட்டத்தின்படியே நீங்கள் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தவறாக படைக்கப்படவில்லை.
நீங்கள் சாதாரணமான மனிதர் அல்ல. தேவனுடைய பார்வையில் நீங்கள் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். தேவன் உங்களை தமது சாயலில் உருவாக்கியிருக்கிறார். அது எப்படிப்பட்ட கனம் என்பது தெரியுமா?
நீங்கள் தேவசாயலில் படைக்கப்பட்டிருப்பதே அந்த கனம். அவருடைய பார்வையில் நீங்கள் மிகவும் கனம் பெற்றவர்கள்.
உங்கள் தலையிலுள்ள முடி கூட தேவசித்தமின்றி விழாது! அப்படியானால், சூழ்நிலைகளைக் கண்டு பயப்பட வேண்டியது என்ன?
நாம் தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்களாம்! ஆதலால், எதைக் குறித்தும், பயப்படக்கூடாது! இயேசு நம்மோடு!
தேவ சித்தத்தைத் மீறி, தேவையற்ற எதுவும் உங்கள் வாழ்வில் தெரியாது நடந்துவிடாது! ஆகவே தைரியமாயிருங்கள்!
நம் வாழ்வில் நடக்கிற ஒவ்வொன்றும் தேவனின் அநாதி திட்டத்தின் படியே நடக்கிறது என்ற எண்ணம் இருந்தாலே தேவையில்லாத விரக்தி நமக்கு நேரிடாது.
தேவ பிள்ளைகளாகிய நாம், தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்பு கொடுத்து மனமகிழ்வுடன் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.