Daily Manna 30

கர்த்தரை நம்பி நன்மைசெய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். சங்: 37:3

அன்பானவர்களே!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக் கொள்ளும் நர்ஸ் வந்தார்.
சார்… உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’
முதியவர் கண்ணைத் திறந்து பார்த்தார்.
நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார்.

அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை `யூத் மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது.

படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லியிருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்தாள்.

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.
அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருந்தான்.

ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்… “தம்பி… நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’
`வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் பருகினான்.

அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது.

சற்று நேரத்துக்குள்ளாக முதியவர்
இறந்து போயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான்.
“ரொம்ப சாரி தம்பி… உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்…’’ என்றார் அந்த நர்ஸ்.

“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’
`அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லலை?’’

“நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சது. அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு என்னால் சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சது. அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.’’

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான்.

வேதத்தில் பார்ப்போம்,

நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
நீதி:3:27

ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக் :4:17

தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
சங்: 37:27

பிரியமானவர்களே,

நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமற் போனால் பாவம் என்று வேதாகமம் கூறுகிறது. ஆகையால் ஒவ்வொரு நாளும் நன்மை செய்ய நமக்கு வாய்ப்பு ஏற்படும் சமயங்களில் நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்குச் செய்வோம். எபே, 2:10ல் நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் என வாசிக்கிறோம்.

ஆகையால் கிறிஸ்துவுக்குள் மறுபிறப்படைந்த நாம் நன்மை செய்யவே பிறந்திருக்கிறோம்.
`நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவே கூட இருக்கும். அப்படிப்பட்ட வணக்கத்துக்குரிய மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். அப்படிப்பட்ட உன்னதமான வரத்தை
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் தந்து நம்மை வழிநடத்துவாராக.

ஆமென்.

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships