அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:44
எனக்கு அன்பானவர்களே!
சிலுவைமரணம் மிக மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடியாக
மரிப்பதில்லை. பல நாட்கள் கூட சிலுவையில் தொங்கி தாங்கமுடியாத வேதனைகளை
அனுபவித்து மரிப்பார்கள் .
மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை தாங்க முடியாமல், சிலுவையில் அறைந்தவர்களை சபிப்பார்கள். தூஷண வார்த்தைகளால் திட்டுவார்கள், வேதனையின் அகோரத்தினால்
சப்தமிடுவார்கள்.
ஆனால் நம் இயேசுவோ, சிலுவையில் மிக அமைதியாக தொங்கினார். தன்னை துன்பப்படுத்தி சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும், பிதாவே நோக்கி
இவர்களை மன்னியும், என்று
மன்றாடினார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் இயேசு பிதாவை நோக்கி ஜெபிக்கிறார்.
இயேசுவின் வாழ்வில் ஜெபம் மிக மிக முக்கியமானதாக இருந்தது.
இயேசுவின் வாழ்வு முழுவதும் ஜெபங்களால் நிறைந்திருந்தது. சில நேரங்களில் அவர் சுருக்கமாக ஜெபித்தார் யோவா.12:28. சில வேளைகளில் அதிகமாக ஜெபித்தார்.
இயேசு தன் ஜெபநேரங்களில் பிதாவோடு அதிக இரகசியங்களைப் பேசியிருப்பார். தான் செய்யப்போகின்ற அற்புதங்களுக்குத் தேவையான வல்லமையையும் அபிஷேகத்தையும் ஜெபத்தின்மூலம் கேட்டார் லூக்.3:21.பெற்றார்.
இதினால்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் தன்னுடைய கிரியைகளைத் தெளிவான முறையில் வெளிப்படுத்தினார்.
தன் ஊழியத்தை
ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தார். ஊழிய
காலத்தில் அதிகாலை இருட்டோடே எழுந்து ஜெபிக்கும் படியாகச் சென்றார்.
தனித்தும், சீடருடனும் சேர்ந்தும் ஜெபித்தார்.
கெத்சமனே தோட்டத்தில்
இரத்தத்தின் பெரும் துளிகள் வியர்வையாக விழும் அளவு ஜெபித்தார்.
சிலுவையில் தொங்கும் போதும் வேதனைகள், நிந்தனைகள் மத்தியிலும் இயேசு நமக்காக
ஜெபித்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
மாற்கு 13 :33.
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4 :7.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
கொலோ 4:2.
பிரியமானவர்களே,
ஜெப வாழ்வானது அந்தரங்கமானது. நமது ஜெபங்கள் தேவனிடமே செல்கின்றன. இயேசு பல சந்தர்ப்பங்களில் அந்தரங்கத்தில் ஜெபித்தார் லூக்.5:16. இயேசுவின் குடும்பத்தினரும் அவரது சீடர்களும் இதை அறிந்திருக்கவில்லை.
“இயேசு அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார் மாற்.1:35. இது எவருக்கும் தெரியாமல் அவர் செய்த ஜெபமாகும்.
பகலில் ஊழியம் செய்த இயேசு இரவில் ஜெபித்தார் லூக்.5:17,6:12. தனிமையில் இரகசியமாக ஜெபிக்கும்போது நம் இதயம் பரவசமடைகிறது. உண்மையில் அந்தரங்க ஜெபத்தில்தான் ஜெபத்தின் வல்லமையையும் அனுபவித்திடலாம்.
ஜெப வாழ்வானது அந்தரங்கமானது. அதின் இரகசியங்கள் அத்தகைய ஜெபத்தில் ஈடுபடுவதினாலேயே அறியப்பட்டுள்ளன. இயேசுகிறிஸ்து அந்தரங்க ஜெபத்தின் இரகசியங்களை அறிந்திருந்தார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்விதம் அந்தரங்கத்தில் ஜெபிக்கின்றவர்களாய் இருக்கின்றோமா?
நம்முடைய ஜெபவாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கிறது? இயேசுவைப்போல தனிமையில் நாம் ஜெபிக்கின்றோமா?
இயேசுவுக்கு வேலைகள் எவ்வளவு அதிகரித்ததோ அவ்வளவாய் அவர் ஜெபித்தார். திரளான ஜனங்கள் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களுக்காக ஜெபித்தார். வேதவசனத்தைப் பிரசங்கித்த அவர் வியாதியஸ்தர்களையும் பிசாசின் பிடியிலிருந்தவர்களையும் குணமாக்கினார்.
நாள்முழுவதும் அவருக்கு வேலையிருந்தது. அப்படியிருந்தும் அவர் ஜெபிக்கத் தவறவில்லை. அற்புதங்கள் செய்வதற்கு முன்பும் பின்பும் ஜெபித்தார்.
நாமோ நடைபெற்ற அற்புதங்களைப் புகழ்கின்றோம். ஆனால், தேவன் நம் ஊழியத்தில் செய்த காரியங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம்.
இயேசு மூன்றரை வருட ஊழியக்காலத்தில் அவரது வெற்றிகரமான ஊழியத்திற்கு ஜெபமே மூலகாரணமாய் இருந்தது.
அவரைத் தெய்வமாய்க் கொண்டுள்ள நாமும் அவரைப்போலவே ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டுமம?.
நமது பாடுகள், வேதனைகள் மத்தியிலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும்.
ஏசா 400 பேருடன் வருகிறார் என்று அறிந்த போது, யாக்கோபு தேவனிடத்தில் போராடி
ஜெபித்தான், வெற்றிபெற்றான். தேவாசீர்வாதம் பெற்றான்.
பவுலும் சீலாவும்
அடித்து நொறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள், பாடுகள்
மத்தியிலும் தேவனை துதித்துப் பாடி மகிமைப்படுத்தினார்கள். இதன் மூலம்
விடுதலை பெற்றார்கள்.
சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன.
சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பமும் இரட்சிக்கப்பட்டார்கள்.ஆம், ஜெபம் பல விடுதலை களை கொண்டுவரும்
நாமும், இன்ப,துன்ப வேளையிலும் ஜெபிக்கவேண்டும். ஜெபத்தில்
கேட்டது கிடைக்காமல் இருந்தாலும் தேவனோடு ஐக்கியமாயிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசு தன்னை பகைத்தவர்களையும் தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும்
மன்னிக்கும்படிக்கும் ஜெபிக்கிறார். உங்கள் சத்துருக்களில் அன்பு வையுங்கள்.
உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.
இப்படிச்
செய்வதால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாவீர்கள்.
ஜெபம் பல விடுதலை களை கொண்டுவரும்
கட்டுகளை அறுக்கும், தடைகளை அகற்றிப் போடும் , புது வாழ்வையும், புது நம்பிக்கையும் கொண்டு வரும்.எனவே ஜெபத்தில் உறுதியாக இருக்கவும், இயேசுவின் பிள்ளைகளாய் வாழவும்,
நம்மையும் அன்புடன் அழைக்கிறார்.
ஆமென்.