கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நியாயாதி 6:14
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்மிடமில்லாத சில காரியங்களை, பொருட்களை பிறரிடம் நாம் காணும் போது ஐயோ, நான் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நம்மை நாமே எண்ணி விடுகிறோம்.
ண
நம்மில் அநேகருக்கு தன்னைக் குறித்தே தாழ்வு மனப்பான்மை.
நான் கருமை நிறமாக இருக்கிறேன், இப்படி ஒவ்வொன்றைக் குறித்தும் கவலை. அழகு , உயரம், ஊனம் , படிப்பு ,நல்ல வேலையின்மை, போன்ற இவைகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம்.
ஆனால் அமெரிக்க தேசத்தின் அதிபரான ஆபிரகாம் லிங்கன் அவரது முகத் தோற்றத்தினால் பலமுறை கேலிக்கு உள்ளானார்.
ஒரு முறை ஒரு பெண், லிங்கனிடம், ‘நான் பார்த்தவர்களுள் நீ தான் மிகவும் அவலட்சணமானவன்’ என்றாள்.
ஆனால் இந்த கேலிகளால் அவர் சோர்ந்து வீட்டிற்குள் முடங்கவில்லை. அடிமைத்தனத்தை ஒழிக்க துணிந்து செயலாற்றினார்.
அவருடைய பக்தி வாழ்க்கை, ஜெபம், மன உறுதி, தியாகம் மற்றும் ஏழைகள் மீது கொண்டிருந்த இரக்கம் அவரை அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக்கியது.
தாழ்வு மனப்பான்மை பிறர் முன்பு நம்மை செயலற்றவர்களாக மாற்றி விடுகிறது.
நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால் பிறரை மதிக்க மாட்டோம். தாழ்மையுள்ளவர்களாக இருந்தால் எவரையும் உயர்வாய் மதிப்பிடுவோம்.
ஆனால் தம்மையே தாழ்வாக மதிப்பதே தாழ்வு மனப்பான்மை ஆகும். பொதுவாக இது வாலிபர்களையே அதிகம் தாக்கும்.
வேதத்தில் பார்ப்போம்,
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
யோசுவா 1 :9.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சங்கீதம் 31 :24.
திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ் சொல்லுகிறேன்.
அப் 27 :22.
பிரியமானவர்களே,
வேதத்திலிருந்து கூற வேண்டுமென்றால் மிகவும் உயரம் குறைந்த குள்ளனாகிய பவுல் உலகத்தையே கலக்கினார்.
திக்குவாயான மோசே இலட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை நடத்தி சென்றார்.
சாலமோன் ராஜாவுக்கு அநேக அழகு மிகுந்த மனைவிமார் இருந்தாலும், கறுப்பு நிறமாயிருந்த சூலமித்தியாள் மீதே அதிக பிரியம் வைத்திருந்தார்.
அழகு என்பது நிறத்திலும் உடல் அமைப்பிலும் இல்லை. உள்ளத்தில் காணப்படும் நற்குணத்தில் தான் உள்ளது.
நமது பிறப்பு மற்றும் குடும்ப பின்னணியை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளுகிறவர்கள் அநேகர் உண்டு.
நல்ல ஒழுக்கமில்லாத மில்லாதவளின் மகனாக பிறந்தாலும், உற்றாரால் புறக்கணிக்கப்பட்டாலும் யெப்தாவை தாழ்வு மனப்பான்மை தாக்கவில்லை – .
நியா 11:12,19)
தன்னாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது.
நம் குடும்ப பின்னணியை குறித்து நம்மையே குறைவாக மதிப்பிடாமல், நாம் தேவனின் இராஜரீக கூட்டத்தார் என எண்ணி பெருமிதம் கொள்ளுவோம்
இப்படி தாழ்வு மனப்பான்மையில் வாழும் சகோதர, சகோதரிகளே, பிறரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
தாழ்வு மனப்பான்மையால், உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும். என்னை போன்ற அமைப்புடனும், குணத்துடனும் யாருமே உருவாக்கப்படவில்லை, என்னை தனித்தன்மையுடன் தேவன் படைத்துள்ளார் என்ற உண்மையே உள்ளத்தில் இருக்கட்டும்.
நிறத்தையும், அழகையும் எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள்.
உங்களை பற்றிய தேவ திட்டத்தை உணர்ந்து அதை சிறப்பாக செய்ய முயற்சியெடுங்கள். உலகில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை கொண்டு தான் தேவன் பெரிய காரியங்களை செய்தார்.
உங்களை கொண்டும் பெரிய காரியங்ளை தேவன் செய்வார். எழும்பி கர்த்தருக்காக பிரகாசிப்போம்.அவர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
இப்படிப்பட்ட உன்னதமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.