Love your enemies and pray for those who persecute you.
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
மத்தேயு 5:44
***********
எனக்கு அன்பானவர்களே!
ஒப்புரவாக்குதலின் தேவனாகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இரண்டு சகோதரர்கள் ஒரு கிராமத்தில் விவசாயிகளாக இருந்தார்கள்.
இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை பகிர்ந்து, அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஏதோ தகறாறு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தனர். ஒருவரோடொருவர் பேசி கொள்வதையே நிறுத்தினர்.
ஒரு நாள் மூத்த சகோதரனுடைய வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்த போது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த சகோதரனிடம், ‘எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்குமா?’ என்று கேட்டார்.
சகோதரன் அவரிடம், ‘இப்போது எதுவும் வேலை இல்லை, ஆனால் என் சகோதரன் பக்கத்தில் இருக்கிறானே, அவன், என்னோடு சண்டையிட்டு, எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பசும் புல்வெளியை புல்டோசர் கொண்டு வந்து இடித்து, இடையில் தண்ணீரை விட்டு, இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் தண்ணீர் ஒரு ஆறு மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது.
அவன் எனக்கு இளையவன், அவனே அப்படி செய்வானானால், அவனுக்கு மேலாக நான் செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் ஒரு பெரிய எட்டு அடி உயரமுள்ள வேலியை கட்டுங்கள். அப்போது நான் அவனை எட்டிக்கூட பார்க்க முடியாதபடி இருக்கும்.
அதுதான் இப்போதைய முதல் வேலை’ என்று கூறினார்.
அந்த தச்சனும், சரி என்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தார். வேலை செய்ய சொல்லிவிட்டு, அந்த மூத்த சகோதரனும் வயலில் வேலை செய்ய போய் விட்டார்.
சாயங்காலத்தில் வீட்டிற்கு வந்தபோது, அப்படியே அவர் வாயடைத்து போய் விட்டார். ஏனெனில், அங்கு வேலிக்கு பதிலாக அழகிய பாலம் இடையில் ஓடின ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டு, அதன் வழியாக இளைய சகோதரன் வருவதை கண்டார்.
வந்த இளைய சகோதரன், ‘நான் உங்களை மோசமாய் பேசி, இடையில் ஆற்றை விட்டிருந்தாலும், நீர் எவ்வளவாய் என்னை நேசித்து நம் இருவருக்கும் இடையில் பாலத்தை கட்டினீர், அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்’ என்று அவருடைய கரத்தை பிடித்து கண்ணீர் விட்டான்.
அதை கண்ட தச்சன், திரும்பி செல்ல ஆரம்பித்த போது, மூத்த சகோதரன், ‘நில்லுங்கள், இன்னும் அதிகமான வேலை உங்களுக்கு உண்டு’ என்று கூற, அவரோ ‘நான் இன்னும் எத்தனையோ பாலங்களை கட்ட வேண்டியிருக்கிறது’ என்று சொல்லிவிட்டு செல்ல ஆரம்பித்தார்
கர்த்தருடைய வேதம் இவ்வாறு கூறுகிறது. எபேசியர்4:16 -ல் பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பார்க்கிறோம்.
ஆம், இந்த உலகிலுள்ள அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நமக்கு சமாதானம் அளிப்பது சிலுவையில் மட்டுமே.
வேதத்தில் பார்ப்போம்,
என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
சங்கீதம் 55 :12.
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாலும் இருப்பார்களாக.
சங்கீதம் 35:19.
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
லூக்கா 6 :27.
பிரியமானவர்களே,
நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும்படி இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்.
தேவன் தம்முடைய சொந்த ஜனங்களாக தெரிந்து கொண்ட யூதர்களையும், பகையாக நின்ற பிரிவினையை தகர்த்து, சமாதானம் செய்தார்.
எப்படியென்றால், “பகையை சிலுவையினால் அவர் கொன்றார்” என்று வாசிக்கிறோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் தடையாக நின்றது. நாம் ஒரு பக்கம், தேவன் ஒரு பக்கம், ஒருவரையொருவர் நெருங்காதபடிக்கு நடுவில் பெரிய பிளவு இருந்தது.
சிலுவை நம் இருவருக்கும் நடுவில் ஒரு பாலமாக வைக்கப்பட்டு, நம் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இப்போது நாம் தேவனை கிட்டி சேரும் படியாகவும்,
கிறிஸ்துவின் சிலுவை, நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பாலமாகவும் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.
அவர் சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினபடியால், “யூதர்களுக்கு மாத்திரமே தேவன்” என்ற நிலை மாறி, அவர் புறஜாதிகளுக்கும் தகப்பனாக இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.
நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்னும் பெயரை பெற்று கொள்ளும்படியாக, தேவனுக்கு சொந்த ஜனமாக நம்மையும் கிறிஸ்து மாற்றினார்.
நம் இருவரையும் ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, பகையை சிலுவையிலே கொன்று போட்டார்.
கிறிஸ்து வந்திராவிட்டால், நமக்காக தமது இரத்தத்தை சிந்தியிராவிட்டால், நாம் நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்போம், நரகத்திற்கு பாத்திரவான்களாக இருந்திருப்போம்.
ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிருபை செய்தார்.
அவருடைய அன்பு எவ்வளவு பெரியது!
நம்மையும் தேவன் தெரிந்து கொண்டாரே, நித்திய ஜீவனுக்கு பாத்திரவான்களாக மாற்றினாரே, நரக ஆக்கினையினின்று நம் ஆத்துமாவை மீட்டெடுத்தாரே அவருக்கே நித்திய மகிமை உண்டாவதாக.
ஆமென்