Let us receive the blessings of the Lord
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்பு கூருவாயாக; நான் கர்த்தர்.
லேவி 19 :18.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும்,
மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் ஒரு ஆசிரியர்.
“மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா? என்று மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர்.
வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘ஆமாம்…சார்’ என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கிக் கொண்டே சென்றார்கள்.
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார்.
ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டு வரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த தக்காளி பையை எப்போதும் உன் கூடவே இருக்க வேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.
ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின.
நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்… ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ”நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன
ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்” என்றார்! அப்போது மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், பகையை மறந்து ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.
நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு...
வேதத்தில் பார்ப்போம்,
இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப் போடுவாய்.
உபாகம:21 :9.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4 :32.
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏக சிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
2 கொரி 13:11
பிரியமானவர்களே,
நம்மில் பெரும்பாலானோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி தான் மிகச் சிறந்த வழி. நமது கொள்கை தான் பரிபூரணமான கொள்கை என தமக்குத் தாமே நம்பிக் கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்.
பலர் இவ்வாறு நினைப்பதாலேயே மற்றவர்களின் விரோதத்துக்கும் , பழிவாங்கும் எண்ணத்துக்கும் ஆளாகின்றார்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில்
அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறார்கள்.
இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-
தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. .
அவ்வாறு ஆக்கவும் முடியாது. இரட்டை பிள்ளைகளாயினும், அவர்களிலும் பல மாறுபாடு உண்டு
எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார்.
உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
நாம் நமக்குரிய தனித்தன்மையோடு வாழும் போது, நம் இறைவன் நம்மை தனித்தன்மையோடு படைத்ததை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இதன் மூலம் நாம் பழிக்கு பழி வாங்காமலும், கடவுள் நமக்கு தந்த தனித்தன்மையோடு, கர்த்தர் தரும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்