உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். சங்கீதம் 119:97
எனக்கு அன்பானவர்களே!
கல்வாரி நாதராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தவக்காலம் என்றால்,சுருங்கக் கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும்.
ஆண்டவரின் விருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும்.
நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி, வலுப்படுத்தி, வளப்படுத்த தேவன் தரும் காலமே தவக்காலம் என்று உறுதியாகக் கூறலாம்.
கடவுளுக்கும் நமக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டு மனமாற்றத்தை நாம் பெற வேண்டி தங்களையே தயார்படுத்திக் கொள்ளக் கூடிய காலம் தான் இந்த தவக்காலம்.
இந்த தவக்காலத்தில் சிலர் நான் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி கேட்டுக் கொள்வார்கள். இன்னும் சிலர் நான் பல்வேறு கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன்.
இந்த 40 நாட்களிலாவது அதை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசி விட்டு பின்னர் லெந்து நாட்கள் முடிந்தவுடன். தங்கள் பழைய பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.
எனவே உபவாசம் இருப்பது என்றால் 3 வேளை உணவை ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறையும் சாப்பிடாமல் இருப்பது, இன்னும் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்ல.
ஆத்ம தியாகத்துடன் உபவாசம் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்பு உபவாசம் இருந்து தன் ஆத்மாவை தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ளது.
எனவே ஆத்ம தியாகம் என்றால் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். கடவுளிடம் தினமும் ஜெபம் செய்ய வேண்டும். அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆராய வேண்டும்.
நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்றி அமைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
சங்கீதம் 105 :4.
தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
செப் 2 :3.
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால் என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
ஆமோஸ் 5 :4.
பிரியமானவர்களே,
பள்ளி மாணவன் ஆசிரியரையே கொலை செய்யும் அளவுக்கு மனித உணர்வு சீரழிந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து மனித உரிமை மதிக்கப்படாமல், மனிதநேய சிந்தனை மடிந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த தருணத்தில் தவக்காலச் சிந்தனையை ஆரம்பிக்கின்றோம். தீபத்தின் சுடர், மேல் நோக்கி எரிவது போல், நம் சிந்தனையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், நம் நடுவே இறையரசை, அன்பை, அமைதியை, ஒற்றுமையை விசுவாசத்தை மனித நேயத்தை தட்டி எழுப்புவதாக அமைய வேண்டும்.
நாம் மேற்கொள்ளும் ஜெபம், தபம், ஒறுத்தல் முயற்சிகள் நம்மை புண்ணியத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்மை செய்தவருக்கு நன்மையே செய்யவும்,நமக்கு தீமை செய்பவருக்கும் நன்மையே செய்யவும், எதுவுமே பிறர் நமக்கு செய்யாத போதும் நாம் நன்மையே செய்யும் படியும் தவக்கால சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும், ஆலய பணிகளிலே ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்கலாம்.
இப்படி செய்யாமல் நான் இந்த 40 நாட்கள் உபவாசம் இருப்பேன், தீய பழக்கங்களை விட்டு விடுவேன். பின்னர் திரும்பவும் பழைய மனிதாக மாறி விடுவேன் என்பது அல்ல.
இந்த தவக்காலத்தில் நம்முடைய பழைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கிருபையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
எனவே நம்முடைய மனதில் மாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக .
ஆமென்.