I have good news for you

I have good news for you

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
லூக்கா 2 :8.

~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இயேசு பிறந்த நற்செய்தியானது முதலில் மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.

மேய்ப்பனின் தொழில் நாம் நினைக்கிறபடி எளிதானதல்ல. இரவு நேரம் அவர்களுக்கு உறங்கும் நேரம் அல்ல; அது விழித்திருக்கும் நேரமாகும்.

தனிமையில் இரவைக் கழிக்க வேண்டியதே மேய்ப்பனின் பணியாகும். தூங்கும் மந்தைகள் விழித்தெழாமலும் அவைகள் அங்குமிங்கும் நடமாடாமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மறைமுகமான கொள்ளையர்களும் கொடிய விலங்குகளும் தாக்காதபடி அவைகளுக்குக் காவல் இருக்க வேண்டும். இவ்வாறாக அன்றும் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்த பொழுது கர்த்தருடைய தூதன் இரவில் அவர்களுக்குக் காட்சியளித்தார்.

கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் பயந்ததில் வியப்பொன்றுமில்லை.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10 என்றான்.

ஆம், எல்லா ஜனத்துக்கும் என்ற செய்தி இன்றும் கூட சிலரால் ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ளது. ஒரு சிலர் அது மேற்கத்திய மதம் என்கின்றனர். ஆனால் இயேசு மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்தார். அது மத சார்புடையதுமல்ல.

ஒரு சாதாரண சிற்றூரான பெத்லெகேமிலே பிறந்த ஒரு மனிதர் உலகின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மதங்களுக்கும் இரட்சகரானவர். தேவன் ஒரே ஒரு இரட்சகரை இவ்வுலகிற்கு அனுப்பினார். இனி வேறு ஒருவரை இரட்சகராக அனுப்பப் டுவதில்லை. பெத்லெகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலேயே அவர் உலகமனைத்துக்கும் இரட்சகர் என்று அறிவிக்கப்பட்டார்.

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் தேவன் உங்களை நேசிக்கிறார்.

இன்றும் நமக்கு நற்செய்தி தேவைப்படுகிறதல்லவா? நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கூறப்படுபவை நல்ல செய்திகளாக இருப்பதில்லை.

இவ்வருடத்தின் இறுதியில் நாம் கேள்விப்படுபவை யாவும் விரும்பத்தகாதவைகளே. அறிவிப்பதற்கு நல்ல செய்திகள் இல்லாமையால் அவைகள் கெட்ட செய்திகளையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன.

ஆனால் வேதாகமத்தின் இப் பகுதியில் தேவன் கூறுவது: “உங்களுக்கு நான் நற்செய்தியை வைத்திருக்கிறேன்” என்பதாகும். இந்த நற்செய்தியை நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கிறோம்.

அந்த நற்செய்தியானது, “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்பதாகும்.

மேய்ப்பர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்த வான் தூதர்கள் அவரை “இரட்சகர்” என அறிமுகப்படுத்தினர்

வேதத்தில் பார்ப்போம்,

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
லூக்கா 2:8

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10

மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
லூக்கா 2:18

பிரியமானவர்களே,

மேசியாவின் பிறப்பின் நற்செய்தி ஏன் மேய்ப்பர்களுக்கு முதலாவதாக அறிவிக்கப்பட்டது? ஏன் சீசருக்கு அறிவிக்கப்படவில்லை? யூதருக்கு இராஜாவாக பிறக்கப் போகும் செய்தி ஏன் ஏரோது இராஜாவுக்கு கூறப்படவில்லை?

இஸ்ரவேலின் ஆசாரியரும் மேசியாவுமானவரின் பிறப்பு தேவாலயத்தின் ஆசாரியர்களுக்கு சொல்லப்படவில்லை. மாறாக மேய்ப்பர்களுக்கே வெளிப்பட்டது.

நீங்கள் அரசராகவோ ஆசாரியனாகவோ சமுதாயத்தில் உயர்நிலையிலோ இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தேவனுடைய கிரியை சாதாரண மக்களுக்கே தெரிவிக்கப்பட்டது.

அவர் பிரபுக்களுக்கு உதவியாயிராமல் எளியவர்களுக்கே உதவிக்கரம் நீட்டும்படிக்கு தாழ்மையின் கோலமெடுத்து இறங்கி வந்தார்.

“எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்;

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்” என்று பரி. பவுல் எழுதியுள்ளார் 1 கொரி.1: 26,27.

அதாவது தேவன் தாழ்மையின் குணமுள்ள மக்களாகிய நமக்குள் கிரியை செய்கிறார். தம்முடைய ஞானத்தையும் வல்லமையையும் நம்மில் விளங்கப் பண்ணுவதில் அவர் பெரிதும் மகிழ்ச்சியடைகிறார்.

எனவே தான் மனுக்குலத்தின் மாபெரும் சரித்திரத்தில் மகா உன்னதமான பிறப்பின் செய்தியைப் பெற்றுக்‌ கொள்ள மேய்ப்பர்களைத் தெரிந்துக் கொண்டார்.

இயேசு பெருமையுள்ளவராக
வரவில்லை.
தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் என்று
பிலிப்பியர் 2 :7-ல் பார்க்கிறோம்

ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடி வந்தார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.
எபிரேயர் 2 :15.
என்று வேதம் கூறுகிறது.

ஆம் பிரியமானவர்களே, நம்மை பாவத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டெடுக்க தம்மைத் தாமே வெறுமையாக்கினது மட்டுமல்ல, வெறுமையாக காணப்பட்ட மக்களுக்கு காபிரியேல் தூதன் மூலமாக நற்செய்தி வழங்கி மேய்பர்களுக்கு மட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் இருக்கிற நமக்கும் அதே நற்செய்தியை வழங்கியிருக்கிறார்.

இந்த இரட்சிப்பின் நற்செய்தியை நாம் அனைவருக்கும் அறிவிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகும்.

ஆம், நாமும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் இந் நற்செய்தியை பிறருக்கு கூறி அறிவிக்க
நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமக்கும் கிருபை செய்வாராக..

எல்லா புத்திக்கும் மேலான தெய்வீக சமாதானமும் கிருபையும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.

ஆமென்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *