The LORD will give what is good
கர்த்தர் நன்மையானதைத் தருவார்,
சங்: 85:12
©©©©©©©©©©©©©©©©©©©அன்பானவர்களே!
நம்மையானவைகளை இந்த புதிய மாதத்தில் தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்
இம்மாதத்தில் கர்த்தர் உங்களை விசேஷ விதமாக ஆசீர்வதித்து உங்களுக்கு நன்மையானதைத் தரப்போகிறார்.
எனவே சோர்ந்து போகாதிருங்கள்.
ஒரு சமயம் வாலிபன் ஒருவன் நல்ல வேலைக்காக வெகு நாட்கள் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண்போகாமல் அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கு நல்லதொரு இடத்தில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது.
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேர்முக தேர்வை எதிர்பார்த்து அதற்காக தயாராகி, வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக முன்பதிவில் பயண சீட்டும் முன்பதாகவே எடுத்து வைத்து அந்த நாளுக்காக காத்திருந்தார். அந்த நாளும் வந்தது ஆனால் அவருக்கோ எழும்பவே முடியாத அளவுக்கு மிகுந்த ஜூரம்.
எவ்வளவோ முயற்சித்தும் முடியாது என்று அறிந்து, மிகுந்த மன வருத்தத்துடனும், வேதனையுடனும் பயணச்சீட்டை ரத்து செய்யச் சொல்லிவிட்டார். ஆனால் அவருடைய உடம்பு கொதிப்பதை விட மனம் கொதிக்க ஆரம்பித்து விட்டது. எவ்வளவு நாள் காத்திருப்பு, எவ்வளவுகால எதிர்பார்ப்பு, சுலபமாக எல்லாம் கை நழுவி சென்று விட்டதே.
இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது கஷ்டம் தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று மிகுந்த முறு முறுப்புடன் காணப்பட்டார். இது அவர் மனதை விட்டு அகலாமலே அந்த நாள் முழுவதும் இருந்தது. ஆனால் மறுநாளிலே வந்த செய்தி அவரை ஒரு நிமிடம் ஆடி போக செய்து விட்டது. அது என்னவென்றால் இரயிலில் அவர் பயணம் செய்ய இருந்த பெட்டி தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி, அநேகர் உயிரிழந்தார்கள் என்பதே அந்த செய்தி.
அவருக்கோ என்ன நடக்கிறது என்ற சுயநினைவை இழந்தது போல இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, முந்தின நாள் அவருக்குள் வந்து போன முறுமுறுப்புக்கள் ஞாபகம் வந்தது. “என்ன ஜெபம் செய்து என்ன ஆகபோகிறது, நமக்கு மட்டும் எல்லாம் இப்படித்தான் கடைசி நேரத்துல வந்து தடையாக இருக்கும்”. அதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ விதமாக புலம்பியது ஞாபகத்தில் ஓட ஆரம்பித்தது.
ஆனால் ஏன் அப்படி தடைவந்தது என்பதை அறிந்த போது அவரால் கர்த்தரை துதிக்காமல் இருக்க முடியவில்லை.
சில மாதங்கள் சென்றது, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலான நல்ல வேலை அவருக்கு கிடைத்தது. இப்பொழுது அவருடைய வாழ்க்கை மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறது.
பிரியமானவர்களே! இப்படித்தான் நம்முடைய வாழ்விலும் சில சம்பவங்கள் நமக்கு தடை போல காணப்படலாம் அப்பொழுதெல்லாம் நாம் முறு முறுத்திருப்போம்.
ஆனால் கர்த்தர் நமக்கு நன்மையானதை மட்டுமே தருவார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
சங்: 85:12
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
சங்: 27:13
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் :8:28
பிரியமானவர்களே,
நமக்கு எது நன்மையோ அதை மட்டும் தான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு தருவார்.
நமக்குள்ளாக எத்தனையோ விதமான எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் , கனவுகள். அவை அனைத்தையும் நடக்காதது போலவும், நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர் மாறாகவும் நடக்கிறதே என்றும் குழப்பமாக இருக்கலாம்.
ஆனால் நடப்பது எல்லாம் நமது நன்மைக்காகவே, கர்த்தர் மிக சரியாக நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே சோர்ந்து போகாதீர்கள்.
கர்த்தர் சொல்லுகிறார். “என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். ஆகவே நாம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது கர்த்தருக்கு நன்கு அறிவார்
எனவே அவர் ஒரு போதும் நம்மை விட்டு விலகவும் மாட்டார். நம்மை கை விடவும் மாட்டார். நன்மையானதை கர்த்தர் நிச்சயம் தருவார். அதனால் திருப்தியாவீர்கள். அவசரம் வேண்டாம். தாமதமானாலும் நன்மையானதையே பெற்றுக் கொள்வேன் என்று கர்த்தருக்காக காத்திருங்கள்.
இம்மாதத்தில் கர்த்தர் உங்கள் வாழ்வில் மிக பெரிய அற்புதத்தை செய்யப் போகிறர்.
இதுவரை காத்திருந்த உங்கள் வாழ்வில் கர்த்தருடைய நன்மையை பெற்றுக்கொள்ளும் வேளை வந்துவிட்டது. கர்த்தர் உங்களை உயர்த்தப்போகிறார். நீங்கள் திருப்தியாவீர்கள்.
மன நிறைவுடன் நம் அன்பின் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லுங்கள்.
ஆமென்..