A star will come out of Jacob a scepter will rise out of Israel
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
எண்ணாக: 24 :17.
எனக்கு அன்பானவர்களே!
யாக்கோபிலிருந்து நமக்காக உதித்த,பிரகாசமுள்ள நட்சத்திரமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இந்த கிறிஸ்துமஸ் காலங்களிலே நாம் இயேசுவின் பிறப்பைக் குறித்தும், அவருடைய பிறப்போடு ஒட்டிய பல நாமங்களைக் குறித்தும் பேசுவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் காலங்களில் அதிகமாக பேசப்படுகிற அல்லது கடைகளில் காணப்படுகிற ஒன்று என்னவென்றால் “நட்சத்திரம்”. இயேசு கிறிஸ்துவை “பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்” என்றும் அழைத்திருக்கிறார்கள்.
(வெளி 22:16; 2பேதுரு:1:19.)
விடிவெள்ளி என்றாலும் ‘விடியற்கால நட்சத்திரமும்’ ஒன்று தான். சூரியன் உதிப்பதற்கு முன்பு, கிழக்கிலுள்ள தொடுவானத்தில் கடைசியாகத் தோன்றும் நட்சத்திரம் தான் விடிவெள்ளி நட்சத்திரம்.இது புதிய நாள் உதயமாகிவிட்டதை தெரியப்படுத்துகிறது
“அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; (எண்.24:17) என்று பிலேயாம் தீர்க்கதரிசி பாலாக்கிடத்திலே பின்னால் வருகிற ஒரு காரியத்தை நான் உமக்குச் சொல்லுவேன் என்று சொல்லி, இயேசுவின் பிறப்பை ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்றும், ஒரு செங்கோல் எழும்பும் என்றான்.
அவர் யூதா கோத்திரத்திலே வருவார், யூதா கோத்திரத்து சிங்கமாக அவர் பிறப்பார் என்பதைத் தான் ‘யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்’ என்று கூறினான்.
வெளி 22:16-ல்
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து தன்னை “விடிவெள்ளி நட்சத்திரம்” என்று கூறுகின்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
மத்தேயு: 2:2
அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
மத்தேயு 2 :10.
இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது.
மத்தேயு: 2:9
பிரியமானவர்களே,
சாமுவேலின் காலம் முதற்கொண்டு இறைவாக்கினர் பலர் எழும்பலாயினர். ஆனால் பிற்காலத்தில்
தேவனுடைய ஆலோசனைகளும் வழிநடத்துதலும் இஸ்ரவேலருக்குக் கிடைக்காத ஒரு காலம் காணப்பட்டது.
அந்த இருண்ட காலத்திலே ஜனங்கள் நம்பிக்கையற்றவர்களாய் வாழ்ந்து வந்தனர். மக்கள் மேசியா வருவார், எப்பொழுது வருவாரோ என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்திருந்தனர்.
தேவன் தமது அன்பை வெளிகாட்டும்படியாக இயேசு கிறிஸ்துவை பாலகனாக பூமியிலே பிறக்க செய்தார். ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஒரு திசையையும் குறிப்பதினாலே அவரை நட்சத்திரம் என்று சொல்லுகிறோம்.
துருவ நட்சத்திரம் என்ற ஒன்றை நாம் பார்ப்போமென்றால் அது வடதிசை என்று அறிந்து கொள்வோம். அந்த விதமாகவே இயேசுவை ஒருவர் நன்கு கவனித்து பார்த்தால் பிதாவானவர் எப்படிப்பட்டவர் என்பது அவருக்குத் தெரிந்து விடும்.
ஆகையால் அவர் அந்த இருளிலே இருக்கிறவர்களுக்கு ஒரு நட்சத்திரமாக, தேவனை வெளிப்படுத்திக் காண்பிக்கிறவராக வந்தபடியால் அவரை “நட்சத்திரம்” என்று சொல்லுகிறார்.
அதேவிதமாக, நம்பிக்கையற்றவர்களாய் இருந்தவர்களுக்கு தேவனுடைய அன்பைக் கூறி அவருடைய பரம ராஜ்ஜியத்திற்குப் போகும் வழியையும் காண்பிக்கும் படியாக வந்த படியால், அவர் விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு இருண்ட காட்டிற்குள் நாம் எங்கே இருக்கிறோம் என்று வழி தெரியாமல் திணறும் பொழுது, தூரத்திலே ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் நம் உள்ளம் எவ்வளவாக சந்தோஷப்படும்.
அங்கே ஒரு இடம் இருக்கிறது, நான் போனால் எனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும், எனக்கு ஒரு ஆதரவு இருக்கும் என்று அந்த வெளிச்சத்தை நோக்கி நகருவோம் அல்லவா! அதேப் போன்று இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த பொழுது அநேகர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
அவருடைய போதனைகளை ஆசையாய் கேட்டார்கள். அவரிடத்தில் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவர்களாய் மாறினார்கள்.
அவரே அவர்களுக்கு வழிகாட்டியாக, அவர்கள் வாழ்வில் வெளிச்சமாக இருந்து, அவர்களுக்கு விடுதலையையும், ஆறுதலையும், சுகத்தையும், சமாதானத்தையும் கொடுத்து அவர்கள் வாழ்வை பிரகாசமாக்கினார்.
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று மத்தேயு: 4:15-ல் கூறுகிறது.
ஆம், நம் வாழ்வை பிரகாசிக்க செய்கிற இயேசு கிறிஸ்து என்னும் மெய்யான ஒளியை நோக்கிப் பார்ப்போம். நம் வாழ்வை பிரகாசமாக்குவோம்.
ஆமென்.